Published:Updated:

அ.தி.மு.க-வுக்கு ஊழல் குற்றவாளி தலைவராக கூடாது! - சசிகலாவை தாக்கும் கே.சி.பழனிசாமி

கே.சி.பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
கே.சி.பழனிசாமி

அரசியலில் இப்போதுள்ள சூழலைவைத்துத்தான் பேச வேண்டுமே தவிர, அம்மா இருந்திருந்தால் என்ன நடக்கும் என்று பேசுவது தவறு.

‘‘எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய மூவருமே அ.தி.மு.க-வைக் கைப்பற்ற, தனித்தனியாக முயன்றுவருகிறார்கள். சுயநலவாதிகளான மூவரையும் தொண்டர்கள் புறக்கணிக்க வேண்டும்’’ என்று போர்க்குரல் எழுப்பிவருகிறார், அ.தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி. சசிகலாவின் ஆடியோ ரிலீஸ், அ.தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர், கொறாடா பதவி நியமனங்கள், புகழேந்தி நீக்கம், பா.ம.க கூட்டணி உள்ளிட்ட கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம்.

‘‘சசிகலா பேசியதாக இரண்டு டஜனுக்கும் அதிகமான ஆடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘கட்சிக்குள் மீண்டும் வர வேண்டும், தலைமை தாங்க வேண்டும் என்கிற தன் ஆசையைத்தான் சசிகலா ஆடியோக்களாக வெளியிட்டுவருகிறார். கட்சிக்குள் அவர் வருவது வரைக்கும் வரவேற்கலாம். ஆனால், ‘தலைமை தாங்குவேன்’ என்று சொல்வதை ஏற்க முடியாது. ஊழல் புகாரில் தண்டனை பெற்ற குற்றவாளி, கட்சிக்குத் தலைமை தாங்க இயலாது. அதை மக்கள் விரும்ப மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும். நடுநிலை வாக்காளர்கள் புறக்கணிப்பார்கள். கட்சிக்குள்ளேயே சிலர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.’’

‘‘ `சசிகலா தண்டனை பெற்றவர் என்றால், ஜெயலலிதா தண்டனை பெற்றவர் இல்லையா?’ என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்களே..?’’

‘‘சசிகலாவை நியாயப்படுத்துவதற்காக அம்மாவைக் கேவலப்படுத்துகிறார்கள். அரசியலில் இப்போதுள்ள சூழலைவைத்துத்தான் பேச வேண்டுமே தவிர, அம்மா இருந்திருந்தால் என்ன நடக்கும் என்று பேசுவது தவறு. அம்மா மறைந்த பிறகுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. அம்மாவுக்கு அந்தத் தீர்ப்பு பொருந்தாது.’’

‘‘அ.தி.மு.க-வைக் கரைசேர்க்க ஆளுமைமிக்க சசிகலாவால்தான் முடியும் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுவதைப் பற்றி..?’’

‘‘எது ஆளுமை? சசிகலா சிறந்த பேச்சாளர் இல்லை, சிறந்த நிர்வாகியும் இல்லை. அம்மாவைப்போல அறிவாற்றல் உள்ளவரும் கிடையாது. அம்மா, தன் தனிப்பட்ட நலனுக்காக மத்திய பா.ஜ.க அரசிடம் ஒருபோதும் சமரசமும் செய்துகொண்டதில்லை. ஆனால், சசிகலா அப்படி இல்லையே... பா.ஜ.க சொல்லித்தானே கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறேன் என்று அறிக்கை கொடுத்தார்... பா.ஜ.க-வை எதிர்த்து இதுவரை ஒரு முறைகூட அவர் பேசியதும் இல்லை. பிறகு எதைவைத்து அவரை ஆளுமைமிக்கவர் என்று சொல்கிறார்கள்?’’

‘‘ஜெயலலிதா இருந்தபோது கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் சசிகலாவின் பங்கு இல்லை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?’’

‘‘கட்சிக்காரர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு சீட் கொடுப்பது, நல்லவர்களைக் கெட்டவர்களாக்குவது, கெட்டவர்களை நல்லவர்களாக்குவது போன்ற வேலைகளைத்தான் சசிகலா செய்துவந்தார். தற்போதுகூட, ஊழல் புகார்களில் முன்னாள் அமைச்சர்களின் மீது தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் கட்சியைக் கைப்பற்றிவிடலாம் எனக் காத்துக்கொண்டிருக்கிறார்.’’

‘‘எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய மூவரையுமே புறக்கணிக்க வேண்டும் என்கிறீர்கள்... என்ன காரணம்?’’

‘‘எடப்பாடி பழனிசாமி, தான் சம்பாதித்ததைக் காப்பாற்றிக்கொள்ள தலைமைப் பொறுப்புக்கு வர நினைக்கிறார். சசிகலாவுக்கும் எடப்பாடிக்கும் இடையே சண்டையை மூட்டிவிட்டு, தலைமைப் பொறுப்புக்கு வர நினைக்கிறார் ஓ.பி.எஸ். சசிகலாவைப் பற்றி நான் ஏற்கெனவே கூறிவிட்டேன். ஆக, மூவருமே தங்களின் சுயநலனுக்காகக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வர விரும்புகிறார்களே தவிர கட்சியை வளர்ப்பதற்காக அல்ல. தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், தோல்வியை ஆராய இதுவரை இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகியோர் ஒரு கூட்டத்தைக்கூட கூட்டவில்லை!’’

‘‘மூவரையும் விடுங்கள்... தற்போது கட்சியில் இருப்பவர்களில் தலைமைக்குத் தகுதியான நபர் யார்?’’

‘‘எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் என்னைப்போல விலக்கப்பட்டவர் களையும் அன்வர்ராஜா, வேணுகோபால் போன்ற புறக்கணிக்கப்பட்டவர்களையும் இணைத்து ஒரு வழிகாட்டுதல்குழுவை உருவாக்க வேண்டும். அந்தக் குழு கொள்கை முடிவுகளை எடுத்து கட்சியை சிறிது நாள்கள் வழிநடத்த வேண்டும். கட்சிக்குத் தலைவராக யார் வர வேண்டும் என்பதை ஒன்றரைக் கோடி தொண்டர்கள் முடிவுசெய்ய வேண்டும். அனைத்து உறுப்பினர்களையும் வைத்து, கிளைக்கழக, ஊராட்சி, வார்டு, நகர, ஒன்றிய, மாவட்ட அளவில் தேர்தல் நடத்தி, அதன் பிறகு தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம்.’’

அ.தி.மு.க-வுக்கு ஊழல் குற்றவாளி தலைவராக கூடாது! - சசிகலாவை தாக்கும் கே.சி.பழனிசாமி

“புகழேந்தி உள்ளிட்ட 16 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“புகழேந்தி ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் அவரை அழைத்து விளக்கம் கேட்டிருக்கலாம். அதைவிடுத்து அவரை தடாலடியாக நீக்கியது தவறு. கட்சி நிர்வாகிகள் சசிகலாவுடன் பேசுகிறார்களென்றால், அவர்களுக்குத் தற்போதைய தலைமை மீது நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம். அவர்களை அழைத்துப் பேசி சரிசெய்வதை விடுத்து, கட்சியிலிருந்து நீக்கிக்கொண்டிருந்தால், கட்சியில் இருப்பவர்களைவிட வெளியேறியவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.’’

“பா.ம.க மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு எதிராகப் பேசியதால், கூட்டணியில் பிரச்னை வந்துவிடக் கூடாது என்று புகழேந்திமீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறதே?”

“அ.தி.மு.க-வைப் பற்றி அன்புமணி தவறாகப் பேசினார். அதற்கு புகழேந்தி பதில் சொன்னார். ஒரு செய்தித் தொடர்பாளராக அது அவரது கடமை. பா.ம.க பற்றி புகழேந்தி சொன்ன கருத்துகளில் தவறில்லை.”

“எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொறடா வேலுமணி என கட்சியில் ஒரு சமூகத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள விமர்சனம் பற்றி..?’’

“இதை பன்னீர்செல்வம்தான் எதிர்த்திருக்க வேண்டும். அவரிடமிருக்கும் பிரச்னையே இதுதான். தனக்காகப் பேசுபவர்களைப் பலிகொடுத்துவிட்டு, தன் காரியங்களைச் சாதித்துக்கொள்வதே அவரது பழக்கமாக இருக்கிறது.’’