Published:Updated:

``புல்லட் வண்டிக்கு உதவியாளர் வைத்திருந்தேன்!" - ட்விட்டர் ஸ்பேஸில் எடப்பாடி பழனிசாமி `கலகல'

எடப்பாடி பழனிசாமி

``கல்லூரி படிக்கும்போது புல்லட் வண்டிக்கு உதவியாளர் வைத்திருந்தேன்" என்று எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் ஸ்பேஸில் ஜாலியாகப் பேசியது வைரலாகிவருகிறது.

Published:Updated:

``புல்லட் வண்டிக்கு உதவியாளர் வைத்திருந்தேன்!" - ட்விட்டர் ஸ்பேஸில் எடப்பாடி பழனிசாமி `கலகல'

``கல்லூரி படிக்கும்போது புல்லட் வண்டிக்கு உதவியாளர் வைத்திருந்தேன்" என்று எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் ஸ்பேஸில் ஜாலியாகப் பேசியது வைரலாகிவருகிறது.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பாக 'ட்விட்டர் ஸ்பேசஸ்' நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட எடப்பாடி, தொழில்நுட்பப் பிரிவு செயலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்படி, `ஆரம்பக்கட்டத்தில் உங்கள் அரசியல் வருகைக்கு, உங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்களா?' என்ற கேள்விக்கு எடப்பாடி சில நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அது தற்போது வைரலாகிவருகிறது.

எடப்பாடி ட்விட்டர் ஸ்பேசஸ்
எடப்பாடி ட்விட்டர் ஸ்பேசஸ்

``எனது அனுபவம் மிகவும் வித்தியாசமானது. அ.தி.மு.க-வில் கிளைக் கழகச் செயலாளராக தேர்வானபோது, அரசியலுக்கு வருவதை என்னுடைய தந்தை எதிர்க்கவில்லை. அது எனது சொந்த விஷயம் என்றார். அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, எனக்கு இரு சக்கர வாகனம் வேண்டுமென்று கேட்டேன். அதுவும் புல்லட் வண்டிதான் வேண்டுமென்று கேட்டேன். அதற்கு என்னுடைய தந்தை, `அதை நீ தாங்கிப் பிடிக்க முடியாது' என்றார். இருந்தாலும் பரவாயில்லை எனக்கு அதுதான் வேண்டுமென்று சொன்னேன்.

உடனே என்னுடைய தந்தை ராயல் என்ஃபீல்டு புல்லட் வண்டியை வாங்கிக்கொடுத்தார். ஆனால், அவர் சொன்னதுபோல, நான் சிறுவனாக இருந்ததால் என்னால் தாங்கிப் பிடிக்க முடியவில்லை. அதற்காக, நான் கல்லூரிக்கு வண்டியை ஓட்டிச் செல்லும்போதும், அதை நிறுத்தும்போதும் தாங்கிப்பிடிக்க ஓர் உதவியாளர் வைத்துக்கொள்ளச் சொன்னார். அதன்படி, மூன்று மாதகாலம் எனக்கு அவர் உதவிபுரிந்தார். அப்படி நான் கல்லூரிக்குச் சென்று படிக்கும் காலத்தில், சர்க்கரை வியாபாரமும் செய்துகொண்டு அரசியலிலும் ஈடுபட்டேன்.  

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், சிறப்பான வாழ்க்கை அவர்களுக்கு அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை. அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதே நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு வகையில் மக்களுக்குச் சேவைசெய்ய வைக்கும் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். தன் குடும்பம், தான் என்று இருந்துவிடக் கூடாது. குறிப்பிட்ட வயதை எட்டியவுடன், அரசியலில் ஈடுபடலாம். ஒவ்வோர் இளைஞனும் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையோடு இருக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். இதைப்போல நிர்வாகிகளின் பல்வேறு கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை மொத்தமும் டிஜிட்டல் தளத்துக்குச் சென்றிருப்பதால், அதிலும் பங்கு கொள்ள வேண்டும் என்று எடப்பாடி எண்ணுகிறார். அதன்படி, தற்போது நடந்த நிகழ்ச்சியை இதுவரை 41,000-க்கும் மேற்பட்டோர் கேட்டிருக்கிறார்கள். இதனால், இனி அடிக்கடி ட்விட்டர் ஸ்பேசஸ்ஸில் பங்கு கொள்ளவிருக்கிறார் என எடப்பாடி தரப்பில் கூறப்பட்டுள்ளது.