Published:Updated:

தவற்றை ஒப்புக்கொண்டால் பெருந்தன்மையா? - ‘பொங்கும்’ இன்பதுரை!

இன்பதுரை
பிரீமியம் ஸ்டோரி
இன்பதுரை

ஜனவரி 4-ம் தேதி, பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்தே நிறைய புகார்கள் வந்தன.

தவற்றை ஒப்புக்கொண்டால் பெருந்தன்மையா? - ‘பொங்கும்’ இன்பதுரை!

ஜனவரி 4-ம் தேதி, பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்தே நிறைய புகார்கள் வந்தன.

Published:Updated:
இன்பதுரை
பிரீமியம் ஸ்டோரி
இன்பதுரை

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்பட்டதில், 500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிவருகிறார். அ.தி.மு.க-வின் சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான இன்பதுரை, இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“எந்த அடிப்படையில் சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தீர்கள்?”

“ஜனவரி 4-ம் தேதி, பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்தே நிறைய புகார்கள் வந்தன. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் புளியில் பல்லி இருந்ததாகப் புகார் கூறிய நந்தன் மீதே பிணையில் வெளிவர முடியாத வழக்கு போட்டனர். அவரது மகன் குப்புசாமி, போலீஸாரின் தொல்லை தாங்காமல் தற்கொலையே செய்துகொண்டார். தற்கொலைக்குத் தூண்டியது அரசுதான். அவர் இறக்கும்போது, மரண வாக்குமூலம்கூட வாங்கவில்லை.

குமரியில் ஜெய்குமாரி என்ற பெண், வெல்லம் உருகிப்போயிருந்ததாகவும், 17 பொருள்கள் மட்டுமே இருந்ததாகவும் புகார் கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் பல ஊர்களில் மிளகுக்குப் பதிலாக அவரை, வெண்டைக்காய் விதைகளும், மஞ்சள்தூளுக்குப் பதிலாக மரத்தூளும் இருந்ததாகப் புகார்கள் வந்தன. பொருள்களைச் சோதனைசெய்து பார்க்கையில் எடை, தயாரிப்பு நிறுவனம், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி என எதுவுமே இல்லை. ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் எடை குறைவாக இருந்தன. சீல் செய்யப்படவுமில்லை. கரும்புக்கு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்துவிட்டு, விவசாயிகளுக்கு 13 முதல் 14 ரூபாய் வரைதான் கொடுத்துள்ளனர். இந்தி எழுத்துகள்கொண்ட பாக்கெட்டுகளும் இருந்தன. இவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொண்டுதான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.”

“இதில் 500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருக்கிறது என்று எதைவைத்துச் சொல்கிறீர்கள்?”

“தோராயமாக இந்தப் பொங்கல் பரிசுத்தொகுப்பின் மதிப்பீடு 1,300 கோடி ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். விநியோகிக்கப்பட்ட ரேஷன் அட்டைகளின் எண்ணிக்கையான 2.15 கோடியுடன் வகுத்தால் ஒரு பைக்கு அறுநூற்றுச் சொச்சம் ரூபாய் வருகிறது. ஆனால், அடிப்படை மளிகைப் பொருள்களுக்கு டெண்டர் விடப்பட்டதோ முந்நூற்றுச் சொச்சம் ரூபாய்க்குத்தான். அதனால்தான் எடை, தரம், எண்ணிக்கை எல்லாமே குறைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு பைக்குப் பாதி தொகையைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். மேலும், ஒரு கரும்பில் விவசாயிகளுக்குச் செல்லவேண்டிய 19 ரூபாய் அளவிலான தொகை, ‘அவர்களின்’ பாக்கெட்டுகளுக்குச் சென்றிருக்கிறது. 1,300 கோடி ரூபாயில், 800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருக்கும். ஆனால், நாங்கள் 500 கோடி ரூபாய் என்று குறைவாகத்தான் சொல்கிறோம்.”

“அ.தி.மு.க ஆட்சியில் பல விவகாரங்களுக்கு தி.மு.க., சி.பி.ஐ விசாரணை கோரியபோது மறுத்தீர்கள். இப்போது நீங்களே சி.பி.ஐ விசாரணை கோர என்ன காரணம்?”

“கேபினெட் மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் முதல்வர், இரண்டு அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள், இரண்டு துறைகளின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரிக்கப்பட வேண்டும். முதல்வரிடம் இருக்கும் போலீஸோ, சி.பி.சி.ஐ.டி-யோ, லஞ்ச ஒழிப்புத்துறையோ விசாரித்தால் உண்மை வெளிவராது. அதுமட்டுமின்றி, வட இந்திய சப்ளையர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், சி.பி.ஐ-தான் விசாரிக்க வேண்டும். இரண்டுவிதமான வழக்குகளில் இதற்கு முன்னுதாரணம் இருக்கிறது. ஒன்று, மறைந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரிய வழக்கு; இன்னொன்று, இ.சிவக்குமார் என்பவரின் வழக்கு. இரண்டிலும் உயரதிகாரிகள், வெளி மாநிலத் தொடர்புகள் இருக்குமாயின் சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைப்பதில் தவறில்லை என்றே தீர்ப்பு வந்திருக்கிறது. அவர்கள் பெற்ற தீர்ப்பே இப்போது அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது.”

தவற்றை ஒப்புக்கொண்டால் பெருந்தன்மையா? - ‘பொங்கும்’ இன்பதுரை!

“ ‘தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று முதல்வர் கூறியிருப்பதைப் பெருந்தன்மை என்கிறார்களே?”

“(சிரிக்கிறார்.) எடப்பாடி இருமுறை இது பற்றிப் புகார் கூறியதற்கு, அமைச்சர் சக்கரபாணி ‘எந்தத் தவறும் நடக்கவில்லை’ என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தார். மறுநாளே முதல்வர் உயர்மட்டக் கூட்டம் நடத்தி, ‘தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், அந்நிறுவனங்களும் பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்படும்’ என்றார். இதன் மூலம், குற்றத்துக்கான முகாந்திரம் இருப்பதை முதல்வரே ஒப்புக்கொண்டுவிட்டார். தவற்றை ஒப்புக்கொண்டால் பெருந்தன்மையா? வேடிக்கைதான்! ஒரு கொலைக் குற்றவாளி ‘நான்தான் கொலை செய்தேன்’ என்று ஒப்புக்கொண்டால், அது பெருந்தன்மையா? அதை நியாயப்படுத்திவிட முடியுமா என்ன?’’

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அ.தி.மு.க தயாரா... `சில மாவட்டங்களில் போட்டியிடவே ஆட்கள் இல்லை’ என்கிற செய்திகள் வருகின்றனவே?”

“100 சதவிகிதம் அ.தி.மு.க தயாராக உள்ளது. நேர்மையாக நடந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றிபெறுவோம். கனவுப் பறவைகள் அடைகாத்துப் பொரித்த கற்பனைக் குஞ்சுகள்தான், போட்டியிட ஆட்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு. ஒவ்வோர் ஊரிலும் நடக்கும் நேர்காணல் நிகழ்வுக்கு வந்து கூட்டத்தைப் பார்த்தாலே, அது பொய்யான குற்றச்சாட்டு என்பது புரிந்துவிடும்.”

“தமிழகத்தில் அ.தி.மு.க பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும், தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்படுவதாக பா.ஜ.க சொல்கிறதே?”

“வெறும் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஆட்சியை இழந்திருக்கிறோம். தி.மு.க-வை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்க்கும் வலிமை அ.தி.மு.க-வுக்கு மட்டுமே இருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். மற்றபடி, அவரவர்கள் கட்சியின் பெருமை பாடிக்கொள்ள அவரவர்களுக்கு உரிமை உள்ளது.”

“முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டுகள் பற்றி உங்கள் கருத்து?”

“எந்த அமைச்சர் வீடுகளிலிருந்தும் எதையும் கைப்பற்றவில்லை என்று அவர்களே எழுதிக்கொடுத்த பத்திரங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால், வேண்டுமென்றே சொத்து மதிப்புகளைக் கூட்டிக்காட்டி, கைப்பற்றியதாக மாயபிம்பத்தை ஊடகங்கள் மூலம் கட்டமைக்கிறார்கள். முழுக்க முழுக்கப் பழிவாங்கும் நடவடிக்கை என்பதற்கு ராஜேந்திர பாலாஜியின் வழக்கே உதாரணம்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism