Published:Updated:

ஆளுக்காளு நாட்டாமை! - அட்டைக்கத்திப் போர்

ஜெயலலிதாவின் நினைவிடத்தில், தள்ளுமுள்ளுக்கிடையே காரைவிட்டு இறங்கிய சசிகலாவின் கைகள் நடுங்கின.

பிரீமியம் ஸ்டோரி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போதெல்லாம், அ.தி.மு.க-வைக் குறிப்பிட்டு, ‘இது ராணுவக் கட்டுப்பாட்டோடு இயங்குகிற இயக்கம்’ எனத் தவறாமல் கூறுவார். இன்று அந்த ராணுவ இயக்கம், சசிகலா ஒருபுறம், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க தலைவர்கள் மறுபுறம், இடையில் சி.வி.சண்முகம் போன்ற மாவட்ட அளவிலான தலைவர்கள் ஒருபுறமென ஆளுக்கு ஆள் நாட்டாமை செய்யும் ஆலமரத்தடி ஆகிவிட்டது. ராமாவரத்தில் சசிகலா பேசும்போது, “நாம் ஒன்றாக வேண்டும். கழகம் வென்றாக வேண்டும்” என்று சமாதானக் கொக்கி போடுகிறார். இதற்கு பதிலடியாக விழுப்புரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “சசிகலா என்ன வேஷம் போட்டாலும் இனி தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்” என்கிறார். அதோடு பேச்சுவாக்கில், “நிஜத்துக்கே இங்கு வேலையில்லை, நிழலுக்கு என்ன வேலை?” என்று தன் கட்சித் தலைவர்களையும் சண்முகம் ஓங்கிக் குத்தியதுதான் உச்சகட்ட உள்குத்து. தொடங்கப்பட்ட 50 ஆண்டுகளில், 33 ஆண்டுகள் அரியணையில் இருந்த அ.தி.மு.க., இன்று அட்டைக்கத்திப் போரில் அதகளமாகியிருக்கிறது!

ஆளுக்காளு நாட்டாமை! - அட்டைக்கத்திப் போர்

கூடாத கூட்டம்... அப்செட்டில் சசி!

அக்டோபர் 16-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா செல்லவிருப்பதாக, ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் வெளியாகி அரசியல் வட்டத்தில் பரபரப்பானது. ‘பத்தாயிரம் பேர் திரளுவார்கள். அப்படியே ராயப்பேட்டை தலைமைக் கழகத்தைக் கைப்பற்றப்போகிறார் சசிகலா’ என்பது போன்ற ‘பரபர’ எதிர்பார்ப்புகள் அனலைக் கிளப்பின. ஆனால், நிஜத்தில் நடந்தது வேறு.

அன்றைய தினம் காலையில், சசிகலா வீடு அமைந்திருக்கும் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் சுமார் நூறு பேர் குழுமியிருந்தனர். சரியாக ராகுகாலம் முடிந்தவுடன், காலை 10:32 மணிக்கு, அ.தி.மு.க கொடிகட்டிய லேண்ட் க்ரூஸர் காரில் ஏறினார் சசிகலா. செல்லும் வழியில் பெரிய ஆரவாரம் ஏதுமில்லை. மெரினாவிலுள்ள காந்தி சிலை சந்திப்பில் மட்டும் ஒருசிலர் அ.தி.மு.க கொடியுடன் வரவேற்றார்கள். ஆனால், நினைவிடத்தில் சுமார் 5,000 பேர் கூடியிருந்தனர். டெல்டா, தென்மாவட்டங்களிலிருந்து கணிசமான அளவுக்கு சசி ஆதரவாளர்கள் வந்திருந்தனர். அ.தி.மு.க கொடிகளுக்கு நிகராக, அ.ம.மு.க கொடிகளும் பறந்தன.

சமாதி விசிட்டுக்குச் சில நாள்கள் முன்னதாக அ.ம.மு.க நிர்வாகிகளை அழைத்துப் பேசிய சசிகலா, அக்டோபர் 16-ம் தேதி, ‘மெரினாவே குலுங்கும் வண்ணம் கூட்டத்தைத் திரட்ட வேண்டும்’ என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லையென்பதால், சசி ஏக அப்செட். அ.ம.மு.க-வின் 12 மாவட்டச் செயலாளர்களும், சாருபாலா தொண்டைமான், செந்தமிழன் போன்ற சில மூத்த நிர்வாகிகளும்தான் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்திருந்தனர். தன்னிடம் பேசிய அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம், “சட்டமன்றத் தேர்தலின்போது, நம்ம கட்சிக்கு ஆதரவளிக்கச் சொன்னேன். அ.ம.மு.க சில தொகுதிகள்ல ஜெயிச்சாத்தான் அது உங்களுக்கு மரியாதைனு சொன்னேன். சில பேர் பேச்சைக் கேட்டுக்கிட்டு, என் பேச்சை உதாசீனப்படுத்துனாங்க. அதனால, நான் வரலை. உங்களுக்கு விருப்பம் இருந்தா நீங்க போங்க, நான் தடுக்கலை” என்று கூறினாராம் தினகரன். ‘அவரை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும்?’ எனக் கட்சி நிர்வாகிகள் பலர் மெரினா பக்கம்கூட எட்டிப் பார்க்கவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

“கூட்டத்தைத்தான் உருப்படியா திரட்ட முடியலை...”

ஜெயலலிதாவின் நினைவிடத்தில், தள்ளுமுள்ளுக்கிடையே காரைவிட்டு இறங்கிய சசிகலாவின் கைகள் நடுங்கின. சிறை செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதியில் ஆக்ரோஷத்துடன் மூன்று முறை ஓங்கி அடித்துச் சபதம் ஏற்ற பிறகு, நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு வருவதால், அவரது கால்கள் நடுங்கின. தள்ளாடியபடியே சமாதியைத் தொட்டு வணங்கியவர், கண்ணீர் வழிய மலரஞ்சலி செலுத்தினார். பிறகு என்ன செய்வதென்று அவருக்கும் தெரியவில்லை, உடனிருந்தவர்களுக்கும் புரியவில்லை. கும்பிட்டபடியே வெகுநேரம் நின்றுகொண்டிருந்தார். அதற்குள் வந்திருந்த ஐந்தாயிரம் பேரில், ஆயிரம் பேர் கிளம்பிவிட்டனர்.

தொண்டர்கள் சசிகலாவை நெருங்கிப் புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டியடிக்க, இளவரசியின் மகன் விவேக்தான் கூட்டத்துக்குள் புகுந்து சசிகலாவைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல உதவினார். ஒரே கூச்சலும் குழப்பமுமாக ஏரியா காட்சியளித்தது. அண்ணா சமாதியில் மலரஞ்சலி செலுத்திவிட்டு சசிகலா வீட்டுக்குப் புறப்படும்போது, கூட்டத்தின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழே சுருங்கிவிட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகளிடம், “கூட்டத்தைத்தான் உருப்படியா திரட்ட முடியலை. அட்லீஸ்ட் ஒழுங்குபடுத்தியாவது இருக்கலாமே?” என்று வெடித்துத் தீர்த்தாராம் விவேக். தவிர, சசிகலாவோடு டாக்டர் வெங்கடேஷும் ஒட்டிக்கொண்டு வந்ததை விவேக் விரும்பவில்லை என்கிறார்கள்.

சமாதியில் கூடிய கூட்டத்தோடு, அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு சசிகலா வந்துவிடுவாரோ என்கிற அச்சத்தில், அ.தி.மு.க நிர்வாகிகளான வளர்மதி, வெங்கடேஷ்பாபு, பாலகங்கா, விருகை ரவி, ராஜேஷ் தலைமையில் ஒரு கூட்டம் அ.தி.மு.க தலைமைக் கழகத்தைக் கட்டிக் காப்பதற்கு ரவுண்ட் கட்டி அமர்ந்திருந்ததுதான் உச்சகட்ட காமெடி.

ஆளுக்காளு நாட்டாமை! - அட்டைக்கத்திப் போர்

“ரெண்டு பேருல ஒருத்தர், நம்ம பக்கம் வந்துடுவாரு!”

அடுத்தநாள் அக்டோபர் 17-ம் தேதி, தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆரின் நினைவில்லத்துக்குச் சென்ற சசிகலா, அ.தி.மு.க கொடியை ஏற்றியும், ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா’ என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டைத் திறந்தும் வைத்தார். இங்கும் 500-க்கும் குறைவானவர்களே குழுமியிருந்தனர். நம்மிடம் பேசிய அ.ம.மு.க மாநில நிர்வாகி ஒருவர், “எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் லதா ராஜேந்திரனின் குடும்பத்தினர் சமீபத்தில் சசிகலாவைச் சந்தித்துப் பேசினர். அப்போது, லதாவின் மகன் குமார் ராஜேந்திரனை அரசியலில் ஒரு பெரிய ஆளாக்கிக் காட்டுவதாக சசிகலா தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதற்குப் பிரதி உபகாரமாக, எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கொடி ஏற்றிக்கொள்ளவும், கல்வெட்டு அமைக்கவும் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் ஒப்புக்கொண்டனர்” என்றார்.

ராமாவரம் நிகழ்ச்சியில் பேசிய பேச்சாளர்கள் சிலர், எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றனர். ‘அந்த ரெண்டு பேருல ஒருத்தர் எப்ப வேண்டுமானாலும் நம்ம பக்கம் வந்துடுவாரு’ என்று பேச்சாளர் ஒருவர், பன்னீரைக் குறிப்பிட்டு மறைமுகமாகச் சொல்ல, புன்னகையுடன் அதை ரசித்தார் சசி. கடைசியாக மைக் பிடித்த சசி “நெருக்கடிகள் என்னைச் சூழ்ந்திருந்தபோதுகூட, கழகத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்திவிட்டுத்தான் நான் சென்றேன். இந்த நேரத்தில் நமக்குத் தேவை ஒற்றுமை. நீர் அடித்து நீர் விலகாது. நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும்” என்றார். இது ஒருவகையில் அ.தி.மு.க தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட மறைமுகச் சமாதானத் தூதுதான்.

சசியின் சமாதி விசிட்டை ஒன்றும் இல்லாமலாக்கும் அளவுக்கு, மறுநாள் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி - பன்னீர் தலைமை, தொண்டர்கள் கூட்டத்தைக் கூட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமாதியில் கூடிய கூட்டம் 2,000-த்தைக்கூடத் தாண்டவில்லை. தேர்தலுக்கு விருப்ப மனு, வேட்பாளர் நேர்காணல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்த கூட்டத்தில் கால் பங்குகூடக் கட்சியின் பொன்விழா கொண்டாட்டத்துக்கு வரவில்லை. நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவர், “சென்னையிலுள்ள மாவட்டச் செயலாளர்கள் யாரும் பெரிய அளவில் ஆட்களைத் திரட்டி வரவில்லை. கட்சியின் தலைமைக் கழகம் இருக்கும் பகுதியின் பொறுப்பாளரான ஆதி ராஜாராமிடம் ஒப்படைக்கப்பட்ட கட்சிக் கொடிகட்டுவது போன்ற பொறுப்புகளைக்கூட அவர் சரியாகச் செய்யவில்லை. அண்ணா சாலையிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்குக்கூட யாரும் மரியாதை செலுத்தவில்லை.

ஆட்சியிலிருந்தபோது கொழித்த முன்னாள் அமைச்சர்களெல்லாம் ‘நாம் ஏன் செலவு செய்ய வேண்டும்?’ என்று அமைதியாகிவிட்டனர். தலைமையிலும், `எடப்பாடி செய்யட்டும்’ என பன்னீரும், `பன்னீர் செலவழிக்கட்டும்’ என எடப்பாடியும் அமைதி காக்கிறார்கள். யாரும் பணம் இறக்கவில்லை என்பதால், கூட்டமும் எதிர்பார்த்த அளவுக்குக் கூடவில்லை. இப்படி ஆளுக்கு ஆள் அலட்சியம் காட்டுவதால்தான் கட்சி சின்னா பின்னமாகிப்போயிருக்கிறது” என்றார்.

ஆளுக்காளு நாட்டாமை! - அட்டைக்கத்திப் போர்

தனி நாட்டாமை சண்முகம்!

இதற்கிடையே, விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சிப் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “சசிகலாவுக்கு இனி அ.தி.மு.க-வில் வேலையில்லை. எந்த வேஷம் போட்டாலும் இனி தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்” என்றெல்லாம் வெடித்தவர், கடைசியாக, “இங்கு நிஜத்துக்கே வேலையில்லை. நிழலுக்கு என்ன வேலை?” எனத் தற்போதைய தலைவர்களான பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெளிப்படையாகவே வெடித்தார். சமீபத்தில் கே.பி.முனுசாமியிடம் பேசிய சண்முகம் தரப்பினர், “ஆளாளுக்குச் சமூக அரசியல் பண்றாங்க. நாம் ஏன் வன்னியர் அரசியலைக் கையில் எடுக்கக் கூடாது. நாம ஒத்துமையா இருக்கவேண்டிய நேரமிது” என்றார்களாம். ஏற்கெனவே, கட்சித் தலைவர்கள் யாரையும் சண்முகம் மதிப்பதில்லை என்றொரு புகார் கட்சிக்குள் நீண்டகாலமாக இருக்கிறது. பன்னீர் சொல்லியும் தன் மாவட்டத்தைப் பிரிக்க சண்முகம் சம்மதிக்காதது, எடப்பாடி பழனிசாமியை அவ்வப்போது எதிர்த்து பேசுவது என சண்முகம் செய்யும் தனி நாட்டாமைத்தனம், கட்சிக்குள் பிரளயத்தையே உருவாக்கியிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அக்டோபர் 17-ம் தேதி மாலை, பன்னீரின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் ராமாவரம் தோட்டத்துக்கு வருவதாக இருந்ததாம். அன்றைய தினம்தான் தோட்டத்துக்கு சசிகலா வந்து சென்றதால், ‘நீ அங்கு செல்ல வேண்டாம்’ என்று சொல்லிவிட்டாராம் பன்னீர். தவிர, சசிகலாவுக்கு எதிராக ஜெயக்குமார் கடுமையாகப் பேசுவதைக் குறைத்துக்கொள்ளச் சொல்லுமாறு எடப்பாடியிடம் பன்னீர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆளுக்காளு நாட்டாமை! - அட்டைக்கத்திப் போர்

அட்டைக்கத்திப் போர்!

“சமாதி விசிட் மூலமும், ‘பொதுச்செயலாளர்’ எனத் தன் பெயர் பொறித்த கல்வெட்டைத் திறந்துவைத்ததன் மூலமும் `நான்தான் அதிமுக-வுக்கு நாட்டாமை’ என்கிறார் சசி. அவருக்கு எதிராகக் கூடுதலாகக் கூட்டத்தைத் திரட்டி ‘மாஸ்’ காட்டி அவரை ‘ஆஃப்’ செய்திருக்க வேண்டிய அ.தி.மு.க ரெட்டைத் தலைமைகள், ‘சசிகலாவுக்கு இங்கு இடமில்லை’ என்று வெறும் வார்த்தைகளை மட்டும் வீசிவிட்டு அமைதியாகிவிட்டனர். இரட்டைத் தலைமைக்குள் நடக்கும் யுத்தம் மற்றொரு தனிக்கதை. ‘நிழல்... நிஜம்...’ எனப் புதிதாக ஜிகினா கத்தி சுழற்றுகிறார் சி.வி.சண்முகம். வேலுமணி, வைத்திலிங்கம், செல்லூர் ராஜூ என ஆளாளுக்கு, தலைமைக்குக் கட்டுப்படாத தலைக்கட்டுகளாகத் தனிப்பஞ்சாயத்து செய்துகொண்டிருக்கிறார்கள். யாருக்கும் கட்டுப்படாதவராக, அன்வர் ராஜா ஒருபக்கம் உருளுகிறார்.எதிர்க்கட்சியாக வலுவாகக் களமாடவேண்டிய ஐம்பதாண்டுக்கால அ.தி.மு.க இயக்கம், தங்களுக்குள் அடித்துக்கொண்டிருக்கிறது. சரி, இந்த அடிதடிகளால் ஒரு தீர்வு கிடைக்குமா, அ.தி.மு.க புதுப்பொலிவு பெறுமா என்றால் கேள்விக்குறிதான். ஏனென்றால், நடப்பது வெறும் அட்டைக்கத்திப் போர்!” என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

விழா சுவாரஸ்யங்கள்!

* எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா சமாதிக்குச் செல்லும் வழியில், பன்னீரின் காரை அனுமதிக்க அண்ணா சதுக்க காவல் ஆய்வாளர் கருணாகரன் மறுத்துவிட்டார். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் வந்து சொன்னதும்தான், பன்னீரின் காருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், சற்று நேரம் ஏரியாவே அமளி துமளியானது.

* அக்டோபர் 17-ம் தேதி, எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் ஒரே காரில் வந்திருந்தனர். அவர்கள் அருகே வந்த பெண் நிர்வாகி ஒருவர், “எல்லாரும்தான் சம்பாரிச்சாங்க. உங்களை மட்டும் ஏன் தி.மு.க-காரங்க கட்டம் கட்டுறாங்க? மத்தவங்கல்லாம் ‘அண்டர்ஸ்டாண்டிங்’ல போயிட்டு இருக்காங்கண்ணா...’’ என்றார். இதைக் கேட்டதும் என்ன ரியாக்ட் செய்வது எனத் தெரியாமல் தங்கமணி நெளிந்தார்.

* எம்.ஜி.ஆர் நினைவிடத்திலிருந்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கிளம்பிச் சென்ற பிறகு, கழகத் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் மிக சீரியஸாக வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு