Published:Updated:

அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல் ரணகளம்!

அ.தி.மு.க தலைமையகம்
பிரீமியம் ஸ்டோரி
News
அ.தி.மு.க தலைமையகம்

- வீட்டுக்குள் தேர்தல்... அடிதடி பஞ்சாயத்து...

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான தேர்தல் முடிந்த கையோடு பரபரப்பாக ஆரம்பித்த அ.தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல், களேபரங்களுடன் முடிந்திருக்கிறது. டிசம்பர் 13 முதல் 23-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடந்த இந்தத் தேர்தலில் அடிதடி சம்பவங்களுக்கும், உள்ளடி வேலைகளுக்கும் பஞ்சமே இல்லை. இதையடுத்து, ‘‘மாவட்டவாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தும், தேர்தல் முறையாக நடைபெறவில்லை’’ என்று கொந்தளிக்கிறார்கள் தொண்டர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘பேரியக்கம்’ என்று அதன் தலைவர்கள் சொல்லிக்கொள்ளும் அ.தி.மு.க-வில், சில மாவட்டங்களில் போட்டியிட ஆட்களே இல்லாமல் போனதுதான் அதிர்ச்சி.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான உடுமலை நகரச்செயலாளர் ஹக்கீம், ‘மறுபடியும் நான்தான் நகரச் செயலாளர் ஆகப்போறேன். எனக்கு வேண்டப்பட்ட ஆளுங்க வார்டு செயலாளராக இருந்தால்தான் சரியா இருக்கும்’ என்று தனது எதிர்க் கோஷ்டியினர் யாருக்குமே தேர்தல் விண்ணப்பத்தைக்கூட கொடுக்கவில்லை என்கிறார்கள். நகராட்சியின் 28-வது வார்டு செயலாளரான குப்புசாமி, 7-வது வார்டு செயலாளரான தாயார், 26-வது வார்டு செயலாளர் கமால் பாய் எனப் பதவியிலிருக்கும் சிட்டிங் ஆட்களுக்கு விண்ணப்பப் படிவம்கூட கொடுக்கப்படவில்லை. இதனால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரனின் ஆதரவாளர்கள் கொதிப்பில் இருப்பதால், உஷ்ணமாகியிருக்கிறது திருப்பூர் உட்கட்சித் தேர்தல். அதேசமயம், கோவையில் களேபரங்கள் பெரிதாக இல்லை... “இங்கே வேலுமணி வெச்சதுதான் சட்டம். அவரை எதிர்த்து நாங்க பேச முடியுமா? இங்கிருக்குற மூணு மாவட்டங்கள்லயும் அவர் கைகாட்டுற ஆளுங்களுக்குத்தான் பதவி” என்று குறைபட்டுக்கொள்கிறார்கள் நிர்வாகிகள்!

அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல் ரணகளம்!

மதுரை மேயர் வேட்பாளராகத் தன் மகளை முன்னிறுத்தும் ஐடியாவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதற்குத் தோதான நபர்களையே கட்சிப் பதவிக்குக் கொண்டுவரத் துடிப்பதால், அதிருப்தியில் இருக்கிறார்கள் மதுரை மாநகர், மாவட்ட நிர்வாகிகள். குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன் ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர் என்பதால், சரவணனுக்கு ஆதரவான ஒரு நபர்கூட பொறுப்புக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் செல்லூர் ராஜூ. மேலும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் ராஜன் செல்லப்பாவுக்கு நெருக்கமாக இருக்கும் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகனின் ஆதரவு பெற்றவர்களையே கட்சி நிர்வாகிகளாக அறிவிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான், ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர் என்பதால் மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் அவர் பரிந்துரைத்த நபர்களின் பெயர்கள் ‘ரிஜெக்ட்’ செய்யப்பட்டதாகப் புகார் வாசிக்கிறார்கள் பெரியபுள்ளானின் ஆதரவாளர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க முன்னாள் அமைச்சர் பச்சைமாலும், முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவசெல்வராஜனும் முட்டி மோதுகிறார்கள். தளவாய் சுந்தரம் கைகாட்டும் நபருக்கே மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்ற நிலை இருப்பதால், குமரியில் குஸ்தி களைகட்டுகிறது. நெல்லை மாவட்டச் செயலாளரான தச்சை.கணேசராஜா உட்கட்சித் தேர்தலை மாவட்ட அலுவலகத்தில் நடத்தாமல் தனது வீட்டில் வைத்து நடத்தியது, நிர்வாகிகளிடம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாவட்டத் தேர்தல் பொறுப்பாளராக வந்திருந்த பன்னீரின் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத்தும் இவை எதையுமே கண்டுகொள்ளவில்லை.

ராதாகிருஷ்ணன், ஜெயராமன், வேலுமணி, செல்லூர் ராஜூ, உதயகுமார், பச்சைமால்
ராதாகிருஷ்ணன், ஜெயராமன், வேலுமணி, செல்லூர் ராஜூ, உதயகுமார், பச்சைமால்

வேலூர் மாநகர மாவட்டத்தில், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் ஆசி பெற்றவர்களுக்குத்தான் கட்சிப் பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று புழுங்குகிறார்கள் நிர்வாகிகள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் களப்பணியாற்றாதவர்களுக்குப் பொறுப்பு வழங்குவது, வயதான நிர்வாகிகளை ஒரேடியாக ஓரங்கட்டுவது என ஏக பஞ்சாயத்துகள் இங்கு கிளம்பியிருக்கின்றன. திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரனின் ஆட்களுக்கு மட்டுமே கட்சிப் பதவிகளில் முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பது அனலைக் கிளப்பியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆரணியில் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலையிலேயே கட்சி நிர்வாகிகள் அடிதடியில் இறங்கியிருக்கிறார்கள்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் சண்முகநாதனும், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனும் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். அதனால், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வார்டு செயலாளர், வட்டச் செயலாளர் பதவிகளைக் கைப்பற்ற இரு அணியினருக்கும் கடும் போட்டி நிலவுகிறது. ‘‘எத்தனை வார்டு செயலாளர் பதவி நம்ம அணிக்குக் கிடைக்குதோ, அதைவெச்சுத்தான் வர்ற மாநகராட்சி எலெக்‌ஷன்ல கவுன்சிலர் சீட்டுகளை வாங்க முடியும்’’ என்று தன் ஆதரவாளர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் செல்லப்பாண்டியன்.

தளவாய் சுந்தரம், கே.பி.முனுசாமி, கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், சண்முகநாதன், செல்லப்பாண்டியன்
தளவாய் சுந்தரம், கே.பி.முனுசாமி, கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், சண்முகநாதன், செல்லப்பாண்டியன்

மேற்கண்ட ஊர்களின் நிலவரம் இப்படியென்றால் கரூர், தென்காசி, நீலகிரி மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் காத்தாடுகின்றன... அங்கெல்லாம் விருப்ப மனு வாங்கக்கூட ஆட்கள் வரவில்லை. கீழ்கோத்தகிரி பகுதியில் சில கிளைச் செயலாளர் பதவிகளுக்குப் போட்டியிடவே ஆள் இல்லாததால், அ.தி.மு.க உறுப்பினர் அட்டையே இல்லாத ஒருவரைத் தேடிப்பிடித்து, பொறுப்பு கொடுத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தலைநகர் சென்னையில், மாவட்டச் செயலாளர்கள் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டவர்களுக்கு மட்டுமே கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும், வடசென்னையில் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் பாபு முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் சிலர் அடித்துக்கொண்ட சம்பவம் கட்சியில் அனல் கிளப்பியிருக்கிறது.

மறைந்த ஜெயலலிதா சர்வ அதிகாரமும் கொண்ட தலைவராகக் கட்சியை வழிநடத்தினாலும்கூட, அவர் இருந்தபோது உட்கட்சித் தேர்தல் ஜனநாயகத்துடனேயே நடந்தது என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். ஆனால், இப்போதைய தேர்தல் கட்சியில் அதிகாரம் படைத்தவர்களின் நேரடி நியமனங்களாகவே நடந்துள்ளன; வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இதன் தாக்கம் மோசமாக எதிரொலிக்கும் என்று புலம்புகிறார்கள் தொண்டர்கள்.