Published:Updated:

வழிதெரியாமல் தவிக்கும் வழிகாட்டுதல் குழு! - தடுமாறும் அ.தி.மு.க!

அ.தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
News
அ.தி.மு.க!

அடுத்து அ.தி.மு.க ஆட்சிதான். அடுத்த முதல்வர் பழனிசாமிதான்” என்று அவர் கொளுத்திப்போட்ட சரவெடிதான் கட்சிக்குள் பல்வேறு பஞ்சாயத்துகளைக் கூட்டியது

அ.தி.மு.க-வில் வழிகாட்டுதல் குழு விரிவாக்கம்தான் இப்போது அரசியலில் ஹாட் டாபிக். டிசம்பர் 1 அன்று நடக்கும் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான காரசார விவாதங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, வழிகாட்டுதல் குழுவிலிருந்த முன்னாள் எம்.எல்.ஏ சோழவந்தான் மாணிக்கம், சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார். இந்த நிலையில், வழிகாட்டுதல் குழுவில் மீதமுள்ள 10 பேரில் யாரெல்லாம், யார் பக்கம் இருக்கிறார்கள் என்று ராயப்பேட்டை வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இங்கே...

வழிதெரியாமல் தவிக்கும் வழிகாட்டுதல் குழு! - தடுமாறும் அ.தி.மு.க!

வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டபோது எடப்பாடியின் சிபாரிசில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ் ஆகிய ஆறு பேரும், பன்னீரின் சிபாரிசில் ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், ப.மோகன், இரா.கோபாலகிருஷ்ணன், கி.மாணிக்கம் ஆகிய ஐந்து பேரும் இடம்பெற்றிருந்தனர். சமூக அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் இந்தக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு கடந்த நிலையில், சீட்டுக்கட்டைக் கலைத்துப்போட்டதுபோல மாறியிருக்கின்றன குழுவினரின் ஆதரவு நிலைப்பாடுகள்.

வழிதெரியாமல் தவிக்கும் வழிகாட்டுதல் குழு! - தடுமாறும் அ.தி.மு.க!

திண்டுக்கல் சீனிவாசன்

இந்தக் குழு உருவாக்கப்படும்போது எடப்பாடியின் தீவிர விசுவாசியாக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். “அடுத்து அ.தி.மு.க ஆட்சிதான். அடுத்த முதல்வர் பழனிசாமிதான்” என்று அவர் கொளுத்திப்போட்ட சரவெடிதான் கட்சிக்குள் பல்வேறு பஞ்சாயத்துகளைக் கூட்டியது. ஆனால், அதே சீனிவாசன்தான் சமீபத்தில் யூ டர்ன் அடித்து, “சசிகலா பற்றி எடப்பாடி பேசுவதையெல்லாம் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது” என்று கொந்தளித்ததாகத் தகவல்கள் வெளியாகின. வன்னியர் இட ஒதுக்கீடு, கட்சியில் கொங்கு மண்டலத்தினரின் ஆதிக்கம் உள்ளிட்ட சில விஷயங்களில் எடப்பாடிமீது வருத்தத்தில் இருக்கும் சீனிவாசன் இப்போதைக்கு பன்னீருக்கு ஆதரவாக இருக்கிறார்.

வழிதெரியாமல் தவிக்கும் வழிகாட்டுதல் குழு! - தடுமாறும் அ.தி.மு.க!

வேலுமணி... தங்கமணி

எடப்பாடி முதல்வராக இருந்தபோது அவருக்கு வலதும் இடதுமாக இருந்தவர்கள். ஆனால் தொடர் தேர்தல் தோல்விகள், ரெய்டு நடவடிக்கைகள், கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி மீதான நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், அவர்களிடமும் சில மனமாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறது இலை வட்டாரம். கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், கட்சிக் கூட்டத்துக்கு வந்தால்கூட பன்னீரைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத வேலுமணி இப்போது பன்னீரிடம், “அண்ணே... அண்ணே...” என்று உருகுவதைப் பீதியுடன் பார்க்கிறது எடப்பாடி முகாம். பன்னீர் கோவைக்குச் சென்றபோது தொடங்கி இதுவரை நான்கைந்து முறை இருவரும் சந்திப்பு நடத்தியிருக்கிறார்கள். தங்கமணி வெளிப்படையாகப் பேசாவிட்டாலும்கூட வேலுமணி ரூட்டையே இவரும் ஃபாலோ செய்வார் என்கிறார்கள். “கவுண்டர் அமைப்புகளெல்லாம் சேர்ந்து தேர்தலில் நின்றபோதுகூட குறிப்பிட்ட சதவிகித வாக்குகளைத்தான் வாங்க முடிந்ததே தவிர வெற்றிபெற முடியவில்லை. அதனால், கட்சியை பலப்படுத்த வேண்டுமானால் சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டுவருவதில் தவறில்லை” என்று இந்தக் கூட்டணி பேசிவருவதாகவும் தகவல்கள் கசிகின்றன.

வழிதெரியாமல் தவிக்கும் வழிகாட்டுதல் குழு! - தடுமாறும் அ.தி.மு.க!

ஆர்.காமராஜ்

வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டபோது எடப்பாடியின் தீவிர விசுவாசியாக இருந்தவர், இப்போது ‘இருவர்’ தலைமையிடமிருந்தும் தனியே... தன்னந்தனியே என ஒதுங்கியே இருக்கிறார். தவிர சசிகலா, திவாகரன் உள்ளிட்டவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகவும் டெல்டா வட்டாரம் முணுமுணுக்கிறது. காமராஜ், பன்னீரின் ஆதரவாளர் என்று சொல்ல முடியாவிட்டாலும் எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டில் அவர் இல்லை என்பதே உண்மை!

வழிதெரியாமல் தவிக்கும் வழிகாட்டுதல் குழு! - தடுமாறும் அ.தி.மு.க!

ப.மோகன், இரா.கோபாலகிருஷ்ணன்

பன்னீரின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள்தான். ஆனால், கட்சிச் செயல்பாடுகளில் இருவருமே ஆர்வம் காட்டுவதில்லை... ஒரு திரைப்படத்தில் வரும் திருமணவிழா காட்சியில், “காப்பி சாப்டீங்களா அண்ணா... டிபன் சாப்டீங்களா அண்ணா...” என்று வரும் இரட்டையர்போலவே ரணகளமாக நடக்கும் கட்சிக் கூட்டங்களிலும் சிரித்த முகமாக வலம்வருவது பலரையும் குழப்பமடையவைத்திருக்கிறது. அதிலும், இரா.கோபாலகிருஷ்ணனுக்கு மாற்றுக்கட்சிகளில் நண்பர்கள் அதிகமாகிவிட்டார்கள் என்றும் கிசுகிசுக்கிறது இலை வட்டாரம்!

வழிதெரியாமல் தவிக்கும் வழிகாட்டுதல் குழு! - தடுமாறும் அ.தி.மு.க!

ஜெயக்குமார்... சி.வி.சண்முகம்

ஆரம்பத்திலிருந்தே இருவரும் நடுநிலையாகத்தான் இருந்தார்கள். சொல்லப்போனால் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் பாலமாக இருந்தவர்களும் இவர்கள்தான். இருவருமே சசிகலாவைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இப்போது சி.வி.சண்முகம் தீவிர எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். சமீபத்தில் பொதுவெளியில் பேசுவது தொடர்பாக ஜெயக்குமாரிடம் எடப்பாடி தரப்பு சற்றே கடுமை காட்டியநிலையில் வழிகாட்டுதல் குழு விரிவாக்கம், அதிகாரப்பரவல் உள்ளிட்ட விஷயங்களில் பன்னீரின் கருத்தை ஜெயக்குமார் ஆதரிப்பதாகவே தகவல்கள் வருகின்றன.

வழிதெரியாமல் தவிக்கும் வழிகாட்டுதல் குழு! - தடுமாறும் அ.தி.மு.க!

ஜே.சி.டி.பிரபாகர்... மனோஜ் பாண்டியன்

ஆரம்பத்திலிருந்தே இருவரும் பன்னீரின் ஆதரவாளர்களாகவே தொடர்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பன்னீருக்காகக் குரல் கொடுப்பதும் இவர்களே. ஆனால், கடைசியாக நடந்த கூட்டத்தில் “பன்னீர், எடப்பாடி இருவருமே மாஸ் தலைவர்கள் இல்லை... வழிகாட்டுதல் குழுவை விரிவாக்கி, அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும்” என்று மனோஜ் பாண்டியன் பேசியிருக்கிறார். பன்னீர் தரப்பில், “என்னய்யா இப்படிப் பேசிட்ட?” என்று கேட்டபோதும்கூட “அண்ணே... உங்களுக்கு ஆதரவாத்தான் பேசியிருக்கேன்” என்று சமாளித்தாராம் மனோஜ்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை... இப்போதைக்கு இவர்களெல்லாம் பன்னீர் அல்லது எடப்பாடி ஆதரவு நிலைப்பாடு எடுத்திருந்தாலும் உள்ளுக்குள் பதற்றத்தில்தான் இருக்கிறார்கள். நாளையே கட்சி எடப்பாடி பக்கமோ, பன்னீர் பக்கமோ அல்லது சசிகலா பக்கமோ கைமாறிவிட்டால் என்ன செய்வது என்று வழி தெரியாமல் தவிக்கிறார்கள் என்பதுதான் நிஜம்!