Published:Updated:

மௌன யுத்தம்... பார்ட் 2 பன்னீர்!

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்

ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு, பயங்கர டென்ஷனில் இருந்தார் பன்னீர். எடப்பாடியின் மகன் மிதுன் தரப்பினர்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைத் தூண்டிவிட்டு, அந்த ட்வீட்டைப் போட வெச்சாங்கனு அவருக்கு ஒரு தகவல் வந்திருக்கு.

மௌன யுத்தம்... பார்ட் 2 பன்னீர்!

ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு, பயங்கர டென்ஷனில் இருந்தார் பன்னீர். எடப்பாடியின் மகன் மிதுன் தரப்பினர்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைத் தூண்டிவிட்டு, அந்த ட்வீட்டைப் போட வெச்சாங்கனு அவருக்கு ஒரு தகவல் வந்திருக்கு.

Published:Updated:
ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்
‘கலகம் பிறந்தால்தான் வழி பிறக்கும்!’ என்பார்கள். அ.தி.மு.க-வில் இப்போது அதுதான் நடக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு ‘தர்மயுத்தம்’ தொடங்கினார் ஓ.பி.எஸ். துணை முதல்வர் பதவியிலும் அமர்ந்தார். ஆனால், ‘அந்தப் பதவிக்குரிய மரியாதை தரப்படவில்லை; தனது ‘டிமாண்ட்’களும் ஏற்கப்படவில்லை’ என்பதே பன்னீரின் மனப்புழுக்கம். இதன் வெளிப்பாடாகத்தான் இப்போது பார்ட்-2 யுத்தமாக ‘மெளன யுத்த’த்தைத் தொடங்கியிருக்கிறார் பன்னீர். `அவரது முந்தைய தர்ம யுத்தம் சசிகலாவுக்கு எதிரானது எனில், இப்போதைய மெளன யுத்தம் எடப்பாடிக்கு எதிரானது’ என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல்வர் வேட்பாளர் யார்?

கண்ணாமூச்சியைத் தொடங்கிவைத்தவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. தொடர்ந்து அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி,ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் ஆளுக்கொரு கருத்தை முன்வைத்தார்கள். முதல்வர் வேட்பாளர் சர்ச்சை நெருப்பாகப் பற்றிக்கொண்டது. சைரன் தெறிக்க அமைச்சர்களின் கார்கள் எடப்பாடி வீட்டுக்கும், ஓ.பி.எஸ் வீட்டுக்கும் மாறி மாறிச் சென்றதை மக்கள் சலிப்புடனும் வெறுப்புடனும் பார்த்தார்கள்.

மௌன யுத்தம்... பார்ட் 2 பன்னீர்!

பன்னீரின் தர்ம யுத்தத்துக்குப் பிறகு, 2017, ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதிதான் எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைந்தன. இப்போது 2020-ல் அதே ஆகஸ்ட் மாதம் மீண்டும் அடுத்த பிளவு ஏற்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் சர்ச்சையைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘தாய்வழி வந்த தங்கங்களெல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே...’ என்று ட்வீட்டைப் பதிவிட்டு, பிரச்னைக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார் பன்னீர். ஆகஸ்ட் 14-ம் தேதி, உள்ளாட்சித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் எடப்பாடி, பன்னீர் உட்பட பல அமைச்சர்களையும் ஒன்றாக மேடையேற்றி சமாதான போஸ் கொடுக்கவைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. நிலைமை சீரானதுபோலத் தெரிந்தது. ஆனால், அமைச்சர் கடம்பூர் ராஜூ, “2021-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்திப்போம்” என்று புதிய குண்டு வீசி, மறுபடியும் யுத்தத்தைத் தொடங்கி வைத்தார்.

என்னதான் நடக்கிறது அ.தி.மு.க-வில்?

முதல்வர், துணை முதல்வர் இடையே சமாதானம் ஏற்படுத்தும் குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் தரப்பில் பேசினோம். “ஓ.பி.எஸ் வீட்டுக்குப் போனதும் அவர் எங்ககிட்ட, ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ட்வீட் போடச் சொன்னது யாருன்னு எனக்குத் தெரியாதா? நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். ஆனா, ஆர்.பி.உதயகுமார் என்னையே அனுமதி இல்லாம மதுரை மாவட்டத்துக்குள்ள வரக்கூடாதுனு சொல்றாரு. மூணு வருஷமா நான் சொல்றது எதுவுமே நடக்குறது இல்லை. முதல்ல ராஜேந்திர பாலாஜியைப் பதவியிலிருந்து நீக்கச் சொல்லுங்க’னு கொந்தளிச்சிட்டாரு. அப்போ அமைச்சர் ஜெயக்குமார் குறுக்கிட்டு ‘அண்ணே... இதையெல்லாம் நீங்க முதல்வரிடமே நேரடியா பேசியிருக்கலாமே...’னு அவரைச் சமாதானப்படுத்தினார்.

மௌன யுத்தம்... பார்ட் 2 பன்னீர்!

ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு, பயங்கர டென்ஷனில் இருந்தார் பன்னீர். எடப்பாடியின் மகன் மிதுன் தரப்பினர்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைத் தூண்டிவிட்டு, அந்த ட்வீட்டைப் போட வெச்சாங்கனு அவருக்கு ஒரு தகவல் வந்திருக்கு. இதை வடமாவட்ட அமைச்சர் ஒருத்தரும் உறுதிப்படுத்தவே, கோபத்தின் உச்சிக்கே போயிட்டாரு பன்னீர். முதல்ல ராஜேந்திர பாலாஜி ட்வீட் செஞ்சப்பவே ‘நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்’னு தேனியில் போஸ்டர்கள் தயாரா இருந்துச்சு. பன்னீரின் ரெண்டாவது மகன் ஜெயபிரதீப்தான், ‘அதை ஒட்டினா தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும்’னு தடுத்துவெச்சிருந்தார்.

இன்னொரு பக்கம் ஆகஸ்ட் 15-ம் தேதி, கொங்கு அமைச்சர்கள் சிலர், ‘எடப்பாடிதான் முதல்வர்’னு அறிவிக்க முடிவு எடுத்தாங்க. கட்சியின் சீனியர் தலைவர் ஒருத்தரைவெச்சு அதை அறிவிக்கவும் முயற்சி செஞ்சாங்க. இந்தத் தகவல் சுதந்திர தின விழா மேடையில உட்கார்ந்திருந்த பன்னீர் மொபைல்ல மெசேஜா வந்தது. அதனாலதான் கோபமாகி, விழா முடிஞ்சதும் `விருட்’டுனு கிளம்பிட்டார். அவர் கிளம்பின வேகத்தைப் பார்த்த எடப்பாடி ஆதரவு அமைச்சருங்க திகைச்சுப் போயிட்டாங்க. அதனாலேயே அவங்களோட திட்டத்தை நிறுத்திட்டு, பன்னீரைச் சமாதானப்படுத்துற வேலையில இறங்கியிருக் காங்க” என்றார்கள்.

ரவீந்திரநாத் குமார் - ராஜேந்திர பாலாஜி
ரவீந்திரநாத் குமார் - ராஜேந்திர பாலாஜி

வாரிசு யுத்தம்!

இந்த விவகாரத்தில், தலைவர்கள் இடையிலான ஈகோவைவிட அவர்களின் வாரிசுகளிடமுள்ள ஈகோவே பிரச்னை பெரிதாக வெடிக்கக் காரணம் என்கிறார்கள். இது பற்றிப் பேசியவர்கள், “எடப்பாடி தரப்பில் அவரின் மகன் மிதுன், ஐ.டி டீம், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் டீம் என தனித்தனியாக அலுவலகம் அமைத்து வியூகம் வகுக்கிறார்கள். இதேபோல், பன்னீர் தரப்பிலும் அவரின் மகன் ரவீந்திரநாத் குமார் தலைமையில் ஒரு டீம் களத்தில் இறங்கியுள்ளது. இந்த இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட உரசலே பிரச்னைக்கு அடிப்படைக் காரணம்.

உண்மையில், பன்னீருக்குப் பெரிய ஆசையெல்லாம் எதுவும் இல்லை. `துணை முதல்வர் பதவியே போதும்’ என்று நினைக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனது துறை உட்பட பணி நியமனங்கள், பணியிட மாற்றங்கள், அரசு வீடுகள் ஒதுக்கீடு, சில டெண்டர்கள் என்று 300-க்கும் மேற்பட்ட ஃபைல்கள் அப்படியே நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. முதல்வர் தரப்பில் அதைச் சீண்டக்கூட இல்லை. இதுதான் பன்னீரின் கோபத்துக்குக் காரணம். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தைப் பெரிதாக்கியதே ரவீந்திரநாத் குமார்தான்.

இந்த விவகாரத்தில் மிதுன் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதால், இது ரவீந்திரநாத்துக்கு கெளரவப் பிரச்னையாகிவிட்டது. அதனால்தான், மனம் பொறுக்காமல் தேனிக்கு போன் போட்டு ஏற்கெனவே அடித்துவைத்திருந்த போஸ்டர்களை ஒட்டச் சொல்லிவிட்டார். சுதந்திர தின விழாவுக்காகக் கோட்டைக்குக் கிளம்பிய முதல்வரிடம், தேனி போஸ்டர் விவகாரத்தை உளவுத்துறையினர் கூறியுள்ளனர். இதில் அவர் ஏகத்துக்கும் அப்செட் ஆகிவிட்டார். இந்த விஷயம் துணை முதல்வர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. பதறிப்போன அவர், உடனடியாக போஸ்டரைக் கிழிக்கும்படி கூறியுள்ளார்.

மிதுன் குமார்
மிதுன் குமார்

ஆனால், முதல்வர் விடுவதாக இல்லை... ‘அவர் வீட்டு ஆளுங்க சொல்லித்தானே போஸ்டர் ஒட்டியிருக்காங்க... இது அவருக்குத் தெரியாதா?’ என்று ஆவேசமானார். ஒருவழியாக முதல்வரைச் சமாதானப்படுத்தி மூத்த அமைச்சர்களின் ஆலோசனை யுடன், ‘தேவையற்ற கருத்துகளைப் பொதுவெளியில் பேசக் கூடாது’ என்று ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதில் துணை முதல்வரிடமும் கையெழுத்து பெறப்பட்டது” என்றார்கள்.

பன்னீர் பின்னால் யார்?

பன்னீர் பின்னால் இப்போது எத்தனை மாவட்டச் செயலாளர்கள், எத்தனை எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்... தென் மாவட்டங்களில் அவருக்கு பேக்-அப்பாக இருப்பது யார், யார் என்பதைப் பட்டியல் எடுத்துவருகிறதாம் எடப்பாடி தரப்பு. இன்னொரு பக்கம், பன்னீருக்கு செக் வைக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணைய விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளார் எடப்பாடி. ஆணையத்தின் விசாரணையின் போது ஏழு முறை சம்மன் அனுப்பியும் அதில் ஆஜராகவில்லை பன்னீர். ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்தநிலையில், கடந்த வாரம் தமிழக அரசு சார்பில் ‘ஆணையத்தின் விசாரணையை நடத்தலாமா?’ என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தின் விசாரணையில் பன்னீர் ஏதாவது வார்த்தையைவிட்டால், அதைவைத்து அவருக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பதே எடப்பாடியின் திட்டம் என்கிறார்கள்.

மௌன யுத்தம்... பார்ட் 2 பன்னீர்!

சசியிடம் சரணடையத் தயார்!

சசிகலா வருகையும் கட்சியினர் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியைத் தக்கவைத்தாலும்கூட மக்கள் மத்தியில் எடப்பாடிக்கு செல்வாக்கு எதுவும் இல்லை. இந்த நிலையில், ‘எடப்பாடிக்கும் பன்னீருக்கும் சண்டை; கட்சி பிளவுபடுகிறது’ என்றால் கட்சிக்காரர்கள் சோர்ந்துவிடுவார்கள். எனவே, `இருவருக்குமிடையே சிக்கி கட்சி சின்னாபின்னமாவதைவிட, சசிகலாவிடமே கட்சி செல்லட்டும்’ என்று நினைக்கிறார்கள் சசி ஆதரவு அமைச்சர்கள். பன்னீருக்கும் இதில் பிரச்னை எதுவும் இல்லை. தனக்கு ஜூனியராக இருந்த எடப்பாடியிடம் சரண்டர் ஆவதைவிட ஏற்கெனவே விசுவாசம் காட்டிய பழைய எஜமானி சசிகலாவிடம் ‘மறப்போம், மன்னிப்போம்...’ என்று பூங்கொத்து கொடுக்கும் மனநிலையில் இருக்கிறார் பன்னீர்” என்றார்கள்.

வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க!

பா.ஜ.க இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. இது குறித்துப் பேசியவர்கள், “வரும் நவம்பரில் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகுதான் தமிழகத்தின் பக்கம் பா.ஜ.க தலைமையின் கவனம் திரும்பும். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை தி.மு.க-வை வீழ்த்துவதுதான் முதல் இலக்கு. இதில் ஜெயிக்க அ.தி.மு.க-வை தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். அதனால், முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அமைதியாக, அதேசமயம் ரசித்து வேடிக்கை பார்க்கிறது பா.ஜ.க. தவிர, அமைச்சர்கள் சிலரது ‘ஃபைல்கள்’ மத்திய அரசிடம் உள்ளன. இதனால் சசிகலா வருகைக்குப் பிறகு கட்சியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு, அதற்குப் பிறகு ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறது பா.ஜ.க” என்றார்கள்.

அமைச்சர்கள்மீது அதிருப்தி!

இன்னொரு தகவலையும் கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள்... “அ.தி.மு.க ஆட்சியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமைச்சர் பதவிகளில் குறிப்பிட்ட சிலரே பசைபோல ஒட்டியிருக்கிறார்கள். அவர்கள்மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் பெரும்பாலான

எம்.எல்.ஏ-க்கள். ‘வளமான’ துறைகளான உள்ளாட்சித் துறையை வேலுமணியும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறைகளை முதல்வர் எடப்பாடியும், டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையை தங்கமணியும் வைத்திருக்கிறார்கள். விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், வேலூரில் வீரமணி, டெல்டாவில் காமராஜ், விருதுநகரில் ராஜேந்திர பாலாஜி, மதுரையில் செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் குறுநில மன்னர்கள்போல ‘செழிப்பாக’ இருக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்களுக்குத்தான் எதுவும் மிஞ்சுவதில்லை. அதனால், அவர்களும் விரக்தியின் உச்சத்திலிருக்கிறார்கள். இதனால், எடப்பாடி - பன்னீர் இடையே கலகம் பெரிதாக வெடித்தால், கட்சியே இரண்டாகப் பிளக்கும் வாய்ப்பு உள்ளது” என்றார்கள்.

அ.தி.மு.க-வுக்குக் கலகம் ஒன்றும் புதிதல்ல. எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜெ - ஜானகி என இரு துருவங்களாக அ.தி.மு.க பிளவுற்றது. அந்தக் கால கட்டத்தில் சென்னையின் ஒரு நட்சத்திர ஹோட்டலில் அரங்கேறிய காட்சிகளெல்லாம் கூவத்தூர் காட்சிகளுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல. இறுதியில், ஜெயலலிதா வெற்றி பெற்றார். இந்தமுறை எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கலகத்துக்குக் காலம்தான் பதில் சொல்லும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism