Published:Updated:

அ.தி.மு.க சதுரங்கம்... முடிவுக்கு வந்ததா ஆட்டம்?

அ.தி.மு.க சதுரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க சதுரங்கம்

அ.தி.மு.க செயற்குழுவில் பலரது கவனத்தையும் ஈர்த்த விஷயமே, ஒருங்கிணைப்பாளர் தேர்தல் குறித்தான விதிகள் திருத்தப்பட்டதுதான்.

அ.தி.மு.க சதுரங்கம்... முடிவுக்கு வந்ததா ஆட்டம்?

அ.தி.மு.க செயற்குழுவில் பலரது கவனத்தையும் ஈர்த்த விஷயமே, ஒருங்கிணைப்பாளர் தேர்தல் குறித்தான விதிகள் திருத்தப்பட்டதுதான்.

Published:Updated:
அ.தி.மு.க சதுரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க சதுரங்கம்

‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அடிக்கடிக் குறிப்பிடுவார். அதுபோல யாரும் எதிர்பாராதவிதமாக, அமைதியாக, தரமான சம்பவங்களுடன் நடந்துமுடிந்திருக்கிறது அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம். ‘கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ‘ஒரு ஓட்டு’ முறையின் கீழ் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்படும்’ என்று விதியை மாற்றி, அந்த விதியை இனி யாராலும் மாற்ற முடியாது என்று ‘ஒற்றைத் தலைமை’ சச்சரவுகளுக்கு ‘ஃபுல் ஸ்டாப்’ வைத்திருக்கிறது இந்தச் செயற்குழு. இதன் மூலம், ‘சசிகலாவுக்கான கதவுகள் முழுமையாக அடைக்கப்பட்டுவிட்டன’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். டிசம்பர் 7-ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், ‘அ.தி.மு.க செயற்குழுவால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம், கட்சிக்குள் நடக்கும் சதுரங்க ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டதா?’ என்பதை அறிய களமிறங்கினோம்!

அ.தி.மு.க சதுரங்கம்... முடிவுக்கு வந்ததா ஆட்டம்?

அன்வர் ராஜா நீக்கம்... சீனியர்களுக்கு செக்?

டிசம்பர் 1-ம் தேதி செயற்குழுவை முடித்துவிட்டு வந்த அமைப்புச் செயலாளர் ஒருவரிடம், அன்வர் ராஜா விவகாரம் குறித்துப் பேசினோம். “ஒருங்கிணைப்பாளர்கள்மீது வருத்தமிருந்தால், அவர்களிடம் தனிமையில் அன்வர் ராஜா பேசியிருக்கலாம். ஆனால் நவம்பர் 24-ம் தேதி நடந்த கழக நிர்வாகிகள் கூட்டத்தில், பேசக் கூடாத நேரத்தில் பேசி அவமானப்பட்டார். அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல், மீடியாக்களில் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்தார். இது கட்சிக்குள் ஏக களேபரத்தை உருவாக்கிவிட்டது. வெகுண்டெழுந்த வடமாவட்டக் கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் தலைமையில் கட்சித் தலைமையிடம் கொந்தளித்தனர். ‘செயற் குழுக் கூட்டத்துக்கு அன்வர் ராஜா வந்தால், தேவையில்லாததைப் பேசுவார். பிறகு கைகலப்பாகிவிடும். சிக்கலை வளர்க்காதீர்கள். அன்வர் ராஜாவைக் கட்சியிலிருந்து நீக்குங்கள்’ என்று வலியுறுத்தினர். செயற்குழுத் தீர்மானங்கள் தொடர்பாக நவம்பர் 30-ம் தேதி எடப்பாடியும் பன்னீரும் கலந்தாலோசித்தபோது, அன்வர் ராஜா குறித்தும் பேசினார்கள். அன்றே முடிவெடுத்து, இரவு 10:30 மணியளவில் அன்வர் ராஜாவைக் கட்சியைவிட்டு நீக்கி அறிக்கையும் வெளியானது.

அன்வர் ராஜாவின் நீக்கம், இஸ்லாமியச் சமூகத்திடையே மனக்கசப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான், தற்காலிக அவைத்தலைவராக இஸ்லாமியரான தமிழ்மகன் உசேனை நியமித்துள்ளனர். இந்த நீக்கத்தையும், புதிய நியமனத்தையும் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார் எடப்பாடி. ‘இனி எவரும் கட்சித் தலைமைக்கு எதிராகத் திரும்பிவிடக் கூடாது’ என்று மூத்த நிர்வாகிகளுக்கு ‘செக்’ வைத்ததோடு, நவம்பர் 24-ம் தேதி கூட்டத்தில் வழிகாட்டுதல் குழு பிரச்னையை எழுப்பி, தனக்கு மறைமுக அழுத்தம் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மற்றொரு ‘செக்’ வைத்துவிட்டார். அவைத்தலைவர் பொறுப்புக்கு செங்கோட்டையன் காய்நகர்த்திய நிலையில், தமிழ்மகன் உசேனை அந்தப் பொறுப்புக்கு நியமித்திருப்பதால், செங்கோட்டையன் தரப்பு திக்குத் தெரியாமல் நிற்கிறது. அவர் முன்வைத்த ‘வழிகாட்டுதல் குழுவுக்குக் கூடுதல் அதிகாரங்கள்’ கோரிக்கையை, பிறகு பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று ‘சைலன்ட்’ ஆக்கிவிட்டது எடப்பாடி தரப்பு” என்றார்.

விதிகள் திருத்தம் ஏன்? - அச்சுறுத்திய ‘ஆபரேஷன் 35’

அ.தி.மு.க செயற்குழுவில் பலரது கவனத்தையும் ஈர்த்த விஷயமே, ஒருங்கிணைப்பாளர் தேர்தல் குறித்தான விதிகள் திருத்தப்பட்டதுதான். இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய தென்மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் சிலர், “செயற்குழுவில் சச்சரவுகள் ஏதுமில்லை. தீர்மானத்தை வைகைச்செல்வன் வாசிக்க, இரங்கல் தீர்மானத்தை செம்மலை வாசித்தார். கட்சி விதி 20 (அ) பிரிவு 2-ன் படி, ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்’ என்றிருந்தது. அதில் திருத்தம் செய்து, ‘இருவரும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களால் தேர்வுசெய்யப்படுவார்கள்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த விதி திருத்தத்தை, கட்சியின் பொதுக்குழு, கழக ஒருங்கிணைப் பாளர்கள் நினைத்தாலும் இனி மாற்ற முடியாது. ஒற்றைத் தலைமையாக உருவெடுக்க நினைத்த எடப்பாடிக்கு இந்தத் திருத்தம் சறுக்கல்தான் என்றாலும், இந்தத் திருத்தத்தின் ஆணிவேரே சசிகலாவுக்கான ‘செக்’தான்.

ஆகஸ்ட் 2017-ல் அணிகள் இணைந்த பிறகு பொதுக்குழு கூட்டப்பட்டு, பொதுச்செயலாளர் என்கிற பதவி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவிகளை உருவாக்கி, அதில் பன்னீரும் எடப்பாடியும் அமர்ந்தனர். அதற்கு முன்பாக ஜெயலலிதா மறைந்த சில நாள்களில் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவைத் தற்காலிகப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்தனர். பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதால், சசிகலாவும் தாமாக அந்தப் பதவியை இழந்துவிட்டார் என்பதே எடப்பாடி - பன்னீரின் கணக்கு. இதை ஏற்றுக்கொள்ளாத சசிகலா, ‘பொதுச்செயலாளரான தன்னைக் கேட்காமல் பொதுக்குழுவைக் கூட்டியது. அதில் பொதுச்செயலாளர் பதவியை நீக்கிவிட்டு, புதிய ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை உருவாக்கியது தவறு. அந்தப் பொதுக்குழுவையே செல்லாதது என்று அறிவிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, ‘பொதுச்செயலாளர் பதவிக்கு ஒருவர் நிறுத்தப்பட்டு, தொண்டர்களால் தேர்வுசெய்யப்பட வேண்டும்’ என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில்தான், கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கொரோனாவைக் காரணம் காட்டி அ.தி.மு.க பொதுக்குழு கூடுவதை மார்ச், 2022 வரை தள்ளிவைக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு எப்போது கூட்டப்பட்டாலும், 35 மாவட்டச் செயலாளர்களை வளைத்து, அவர்கள் மூலமாகக் கட்சிக்குள் களேபரத்தை உருவாக்க சசிகலா டீம் ‘ஆபரேஷன் 35’ என்கிற வியூகத்தை வகுத்திருந்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலருடன் டீல் பேசிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ‘தை பிறக்கும் வரை சிக்னலுக்காகக் காத்திருங்கள். முதற்கட்டமாக ஒரு ஸ்வீட் பாக்ஸ் உங்களுக்கு வந்துவிடும். கட்சியை ‘கன்ட்ரோல்’ எடுத்த பிறகு மேற்கொண்டு மூன்று ஸ்வீட் பாக்ஸ் தருவார்கள்’ என்றிருக்கிறார். இந்தத் தகவல் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் மூலமாக ‘லீக்’ ஆனவுடன்தான், எடப்பாடி தரப்பு உஷாராகிவிட்டது.

கட்சித் தலைவர் பதவிகள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதுதான் சர்ச்சையாக நீடித்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல, ‘அடிப்படை உறுப்பினர்களால் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்று விதி மாற்றப்பட்டிருப்பதால், சசிகலா, கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்குகளின் சாராம்சமே அடிபட்டுப் போய்விட்டது. இந்த ஒருங்கிணைப்பாளர் தேர்தலில், ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக அ.தி.மு.க-வில் இருந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அதுவும், 2018-க்குப் பிறகு புதிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும். அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளராக ஒருகட்டத்தில் இருந்தவர்தான் சசிகலா. அவர் படத்தை முன்வைத்துத்தான் இன்றுவரை அ.ம.மு.க-வின் உள்ளாட்சி விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. அ.தி.மு.க-வுக்கு எதிரான ஓர் இயக்கத்தில் இருப்பவர், இந்தக் கட்சிக்கு எப்படித் தலைவராக முடியும்? தவிர, அவரிடம் புதிய அடையாள அட்டையும் கிடையாது. ஆக, சசிகலா அ.தி.மு.க-வுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் முழு முற்றாக அடைக்கப்பட்டுவிட்டன” என்றனர்.

அ.தி.மு.க சதுரங்கம்... முடிவுக்கு வந்ததா ஆட்டம்?

ஃபிஃப்டி ஃபிஃப்டி பவர்... குஷி மூடில் பன்னீர்!

இந்த விதிகள் திருத்தத்தில் பன்னீர் ஹேப்பி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். நம்மிடம் பேசிய பன்னீருக்கு நெருக்கமான தென்மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர், “ஒற்றைத் தலைமையாக உருவெடுக்கும் முயற்சியில் எடப்பாடி தீவிரமாக இருந்தார். அதற்கு ‘செக்’ வைக்கும்விதமாகத்தான் வழிகாட்டுதல் குழுவுக்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிப்பது, குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது என்று செங்கோட்டையன் முன்வைத்த கோஷத்தை வழிமொழிந்தார் பன்னீர். நவம்பர் 30-ம் தேதி பன்னீரிடம் பேசிய எடப்பாடி, ‘கட்சியில ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் நிரந்தரம் என்கிற விதியை உருவாக்கணும். நீங்க ஒத்துழைக்கணும்’ என்றிருக்கிறார். அதற்கு பன்னீர், ‘பொதுக்குழு உட்பட யாராலும் அந்த விதியை மாற்ற முடியாத அளவுக்குக் கட்டுப்பாடு விதியுங்கள். நான் கையெழுத்து போடுறேன்’ என்றவுடன், எடப்பாடிக்கு வேறு வழி தெரியவில்லை.

தற்சமயத்துக்கு சசிகலாவை சமாளிக்க இரட்டைத் தலைமைக்கு ஓகே செய்வதுபோல் செய்துவிட்டு, பின்னாளில் ஒற்றைத் தலைமையாகத் திட்டமிட்டிருந்தார் எடப்பாடி. ஆனால், ‘இந்த விதியில் மாற்றம் செய்யக் கூடாது’ என்று பன்னீர் முரண்டுபிடித்ததால், எடப்பாடியின் திட்டமெல்லாம் தவிடுபொடியாகிவிட்டன. இனி சம அதிகாரத்துடன் இரட்டைத் தலைமைதான் என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. டிசம்பர் 7-ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு அடுத்த ஒரு வாரத்திலேயே, உட்கட்சித் தேர்தலும் நடக்கவிருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரையில், பொதுச்செயலாளர் பதவிக்கு அவரை எதிர்த்து எவரும் விருப்ப மனு தாக்கல் செய்ததில்லை. அதனால், ஒருமனதாக அவர் தேர்வாகிவிடுவார். அதே பாணியில், பன்னீரும், எடப்பாடியும் ஒருமனதாக தேர்வாகவே வாய்ப்புகள் அதிகம்” என்றார்.

முடிவுக்கு வந்ததா ஆட்டம்?

இந்த விதிகள் திருத்தத்தின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் போட்டியிட முடியும். ‘ஒற்றை வாக்கு’ முறைப்படி, விருப்பப்பட்ட குழுவுக்கு அடிப்படை உறுப்பினர்கள் வாக்களிக்கலாம். இதிலிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் சிவன் பெயர்கொண்ட இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர், “ஒருவேளை பன்னீருக்கும் எடப்பாடிக்கும் இடையே எதிர்காலத்தில் முட்டிக்கொண்டால், அவர்கள் இருவரும் பிரிந்து ஆளுக்கொரு குழுவுடன் தனித்தனியாக ஒருங்கிணைப்பாளர் தேர்வில் போட்டியிடலாம். அல்லது, இவர்களது தலைமையை எதிர்த்து வேறு யாரேனும் ஒரு குழுவாக எதிர்த்து களமிறங்கலாம். கட்சித் தலைமைக்கு ஆளுமை இல்லையென்பது பட்டவர்த்தனமாகிவிட்டதால், என்னதான் விதிகளை மாற்றினாலும், இந்தச் சதுரங்க ஆட்டம் இப்போதைக்கு ஓயாது. தவிர, சசிகலா தொடர்ந்திருப்பது ‘2017 பொதுக்குழுவைச் செல்லாது’ என்று அறிவிக்கக் கோரும் வழக்கு. இதில் அவர் சார்பாகத் தீர்ப்பாகிவிட்டால், இந்த மாற்றங்கள் ஏதும் செல்லாததாகிவிடும்” என்றார்.

சட்டமன்றத் தேர்தல் தோல்வி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்விகளுக்குக் காரணம் என்னவென ஆராயப்படவில்லை. நகர்ப்புறத் தேர்தலுக்கான ஏற்பாடுகளோ, உத்திகளோ வகுக்கப்படவில்லை. ஆனால், அதிகாரத்தை யார் வைத்துக்கொள்வது, அது பறிபோகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்கிற கணக்குகளைச் சுற்றியே அ.தி.மு.க தலைமைகளின் கவலைகள் இருக்கின்றன. அ.தி.மு.க-வுக்குள் இதுவரை நிலவிய சதுரங்க ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக நினைக்கிறது இரட்டைத் தலைமை. ஆனால், ‘சதுரங்கம் ஆட வேண்டியதோ களத்தில். அதை மறந்துவிட்டார்களே...’ என்று நொந்துகொள்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்!

அ.தி.மு.க சதுரங்கம்... முடிவுக்கு வந்ததா ஆட்டம்?

“ஏமாற்று வேலையின்றி வேறில்லை...” - தடாலடி கே.சி.பழனிசாமி

அ.தி.மு.க-வில் நடந்துவரும் மாற்றங்கள் குறித்து, முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியிடம் பேசினோம். “பொதுச்செயலாளரோ, ஒருங்கிணைப்பாளர்களோ எந்தப் பெயரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் தொண்டர்கள் மூலம் தேர்வுசெய்யாமல், பொதுக்குழு மூலம் தேர்வுசெய்தது தவறு என்று எனது தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதில் பதில் மனுவைத் தாக்கல் செய்த பன்னீரும் எடப்பாடியும் என் தரப்பு வாதத்தை எதிர்த்தனர். தற்போது தேர்தல் தோல்வி, போயஸ் கார்டன், வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரமெல்லாம் ரிவர்ஸ் ஆவதால், இந்த முடிவுக்கு வந்துள்ளனர். எனினும், இதிலும் சில தவறுகளைச் செய்திருக்கிறார்கள். இரட்டைத் தலைமைக்கு ஒற்றை ஓட்டு என்பது எப்படிச் சரிவரும்? இதை முடிவுசெய்யும் அதிகாரம் செயற்குழுவுக்கு இல்லை. விதிகளை மாற்றிய மறுநாளே தேர்தலை அறிவித்தது, தங்களை எதிர்த்து எவரும் போட்டியிட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். இது ஓர் ஏமாற்று வேலையன்றி வேறில்லை” என்றார்.

செயற்குழு சுவாரஸ்யங்கள்

* கூட்டம் முடிந்து எடப்பாடி சென்ற பிறகு, உட்கட்சித் தேர்தல், அன்வர் ராஜா விவகாரம் குறித்து பன்னீர், வேலுமணி, தங்கமணி மூவரும் கட்சி அலுவலகத்திலுள்ள தனியறையில் வெகுநேரம் ஆலோசனை நடத்தினர்.

* நடிகை விந்தியா ஒவ்வொரு தலைவரிடமும் பறந்து பறந்து, ‘அண்ணே டீ சாப்பிடுங்க... அண்ணே சமோசா சாப்பிடுங்க’ என்று உபசரித்துக்கொண்டிருந்தார்.

* தற்காலிக அவைத்தலைவரான தமிழ்மகன் உசேன், பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோதே, ‘பேட்டி கொடுக்காதீங்க’ என்று கட்சி மேலிடத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. உடனடியாகப் பேட்டியை பாதியோடு முடித்துக்கொண்டு கிளம்பினார் தமிழ்மகன் உசேன்.

அ.தி.மு.க சதுரங்கம்... முடிவுக்கு வந்ததா ஆட்டம்?

‘‘இந்த நிலை மாறும்!’’ - சூளுரைத்த சசி

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து, டிசம்பர் 2-ம் தேதி அறிக்கை வெளியிட்ட சசிகலா, “ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும், விருப்பு வெறுப்புகளுக்காகவும் நம் இயக்கம் செயல்படுகிறது. இதைச் சரிசெய்து, நம் தலைவர்கள் வகுத்துத் தந்த சட்ட திட்டங்களின் பாதையில் இயக்கத்தைக் கொண்டுசெல்வோம். கழகத்தின் நிலை மாறும். இது உறுதி” என்று சூளுரைத்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism