அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கஞ்சா குற்றங்கள் மற்றும் காவல்துறையின் லாக் அப் மரணங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை தலைகீழாக நின்று போராடினாலும் எழுப்ப முடியாது. ஆபரேஷன் கஞ்சா 2.0 வெற்றி எனில், ஏன் தற்போது ஆபரேஷன் கஞ்சா 3.0 நடவடிக்கையினை காவல்துறை தொடங்கியுள்ளது என்று, காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் விளக்க வேண்டும்.

கடந்த இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பு, நான்கு பேர் அடங்கிய கஞ்சா போதை கும்பல், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆங்காங்கே உள்ள கடைகளில் நுழைந்து, கடை உரிமையாளர்களை கத்தி மற்றும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவர்களைத் தாக்கி, பணம் மற்றும் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில் சுமார் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டு வருகிறது... இதுவரை முழுமையாகக் கண்டுபிடிக்க முடியாதது ஏன்... கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்... போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கைதுசெய்ய தடுப்பவர்கள் யார்... கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்பதில் ஐயமில்லை.

அதேபோல், கடந்த 20.12.2022 அன்று, சென்னை, திரு.வி.க. நகரைச் சேர்ந்த 26 வயதுடைய தினேஷ்குமார் என்பவர் அடையாறு துரைப்பாக்கம் பகுதியில் பேருந்தில் செல்லும்போது ஒரு பயணியிடம் இருந்து செல்போனை திருடியதாகப் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தினேஷ்குமாரோடு பயணம் செய்த அவருடைய நண்பர் ஒருவர், திருடிய செல்போனை எடுத்துக்கொண்டு ஓடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. காவல் துறையினர் கடுமையாக விசாரித்ததில், தினேஷ்குமார் அவருடைய மனைவிக்கு போன்செய்து, தன்னுடைய நண்பரிடமிருந்து செல்போனை வாங்கிவரச் சொல்லியிருக்கிறார். தினேஷ்குமாரின் மனைவி கெளசல்யா, செல்போனை வாங்கி துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவுடன், தினேஷ்குமாரை விடுவித்த நிலையில், அவர் மிகுந்த உடல்நிலை பாதிப்புடன் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்ற தினேஷ்குமாருக்கு உடல்நிலை மிகவும் நலிவடைந்ததால், அவரை அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், தினேஷ்குமார் ஏற்கெனவே மரணமடைந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

உள்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல்துறையினர் இல்லை என்பதை இதுபோன்ற தொடர் லாக்அப் மரணங்கள் நிரூபிக்கின்றன. ஒருசில காவலர்களின் அதிகார வரம்பு மீறல்களினால் இதுபோன்ற நிலை தொடருமானால், புகார் கொடுக்கக்கூட பொதுமக்கள் காவல் நிலையம் செல்ல அஞ்சுவார்கள். தமிழகம் முழுவதும் ஒருபுறம் விடியா அரசின் காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் முறையாக விசாரிக்காமல் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அதே நேரத்தில், இந்த சமுதாயத்தையே சீரழிக்கக்கூடிய போதைப்பொருள் வியாபாரிகளைச் சுதந்திரமாக நடமாட விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எந்தத் தகுதியும் இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், அந்த மாநிலம் எந்த அளவுக்கு அதல பாதாளத்திற்கு சென்று சீரழியும் என்பதற்கு தமிழகத்தின் தற்போதைய நிலையே சான்றாகும். இனியாவது காவல்துறையினரை தங்களது ஏவல்துறையாகப் பயன்படுத்தாமல், சட்டம்-ஒழுங்கையும், குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தும் வகையில், அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த விடியா தி.மு.க அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என்று கூறப்பட்டிருக்கிறது.