பிரீமியம் ஸ்டோரி
‘‘எம்.ஜி.ஆர் உருவாக்கிய `அ.தி.மு.க’ என்கிற கட்சியின் தலைக்கு மேலாகத் தொங்குகிறது கோடரி. அ.தி.மு.க எனும் ‘கொடி’மரத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டே ‘அடி’மரத்தை வெட்டுவதற்கு டெல்லியுடன் கரம்கோக்கத் தயாராகிவிட்டார்கள் சிலர். இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவது, கட்சியின் முதற்கட்ட, இரண்டாம்கட்டத் தலைவர்களை வளைப்பது, ரெய்டு அஸ்திரங்களை ஏவுவது, உருட்டல்கள், மிரட்டல்கள் எனத் தமிழகத்தில் தனது நீண்டகாலக் கனவுகளில் ஒன்றைக் காட்சியாக்கும் முனைப்பில் வேக வேகமாக வேட்டையைத் தொடங்கிவிட்டது பா.ஜ.க’’ என்று வருத்தத்துடன் கூறினார் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர்.

டிசம்பர் 21-ம் தேதி மதியம், அ.தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து, ‘வரும் டிசம்பர் 27-ம் தேதி, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தேர்தல் பரப்புரை தொடங்கப்படும். ஜனவரி 9-ம் தேதி செயற்குழு, பொதுக்குழு நடைபெறும்’ என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் மும்முரமாகியிருக்கும் ரஜினி, பொங்கலுக்குப் பிறகு புயல் வேகத்தில் களமிறங்கவும் தீர்மானித்திருக்கிறார். அதேநேரத்தில், ஜனவரி 27-ம் தேதி சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவும் அரசியலில் ஒரு கை பார்க்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். இதற்கு முன்னதாகவே பிரசாரத்தைத் தொடங்கி, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் முதல்வர் பழனிசாமிக்கு ஏற்பட்டிருக்கிறது. கூடவே சில உட்கட்சி சிக்கல்களும்... அதன் வெளிப்பாடாகத்தான் அவசர அவசரமாக டிசம்பர் 19-ம் தேதி தனது சொந்த மாவட்டமான சேலம், எடப்பாடியிலிருந்து பிரசாரத்தை அவர் தொடங்கினார் என்கிறது கட்சி வட்டாரம்.

இவை பற்றியெல்லாம் நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், “இன்றுவரை முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை பா.ஜ.க ஏற்கவில்லை. அதனால்தான், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை டெல்லிதான் முடிவு செய்யும்’ என்று அவ்வளவு துணிச்சலாகக் கூறினார். முருகனின் பேச்சு கொடுத்த அதிர்ச்சியே விலகாத நிலையில், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, ‘மக்களிடம் கொள்ளையடித்த பணத்தைத் தேர்தல் நேரத்தில் பணமாகத் திருப்பிக் கொடுப்பதுதான் தமிழக அரசியல். பா.ஜ.க-வுக்கு மக்கள் வாக்களிக்க வில்லையென்றால் கார் டயரை விழுந்து கும்பிட்ட வர்கள்தான் தலைவர்களாக வாய்ப்பார்கள்’ என்று அ.தி.மு.க-வை பகிரங்கமாகவே தாக்கினார்.

ஜோதிடத்தின்மீது நம்பிக்கைகொண்ட எடப்பாடி தரப்பு, டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகே பிரசாரத்தைத் தொடங்குவது என்று தீர்மானித்திருந்தது. ஆனால், டெல்லியின் அடுத்தடுத்த அட்டாக்குகள், பல்வேறு நாளிதழ் பதிப்புகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட பிரமாண்ட சுயவிளம்பரங்கள், ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்று, கூட்டணிக்கு அழைப்பு விடுத்த பன்னீரின் தன்னிச்சையான துணிச்சல்... இவற்றையெல்லாம் பார்த்து மிரண்ட எடப்பாடி தரப்பு வேறு வழியில்லாமல்தான், ‘இனியும் தாமதித்தால், மீண்டும் தனது முதல்வர் வேட்பாளர் பொறுப்புக்கே பங்கம் வந்துவிடும்’ என்று தேர்தல் பிரசாரத்தைச் சூட்டோடு தொடங்கிவிட்டது. இதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றும் வகையில் டெல்லியின் ஆசியுடன் தனது ரெளத்திரத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார் பன்னீர். கட்சிக்குள் உக்கிரமான போர் ஒன்று சீக்கிரமே மூளலாம்” என்றார் பதைபதைப்புடன்.

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்

எடப்பாடியை மிரட்டிய பன்னீர்!

அ.தி.மு.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “டிசம்பர் 19-ம் தேதி, சேலம் மாவட்டத்தில் முதல்வர் திடீர் பிரசாரத்தைத் தன்னிச்சையாகத் தொடங்கி 2,500 ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தது, தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்திலிருந்த பன்னீரை கடும் ஆத்திரமடையச் செய்தது. அன்றிரவே எடப்பாடியின் நெருங்கிய வட்டாரத்திலுள்ள ஒருவரை போனில் அழைத்தவர், ‘அம்மா உயிரோடு இருந்தவரை, தேர்தல் பிரசாரம் ஆரம்பிப்பதற்கு முன்பு என்னையும் செங்கோட்டையனையும் அழைத்துப் பேசுவார். செங்கோட்டையன்தான் பிரசார ரூட் மேப்பைப் போட்டுத் தருவார். கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்குக்கூடத் தெரிந்த இந்த விஷயம், எடப்பாடிக்குத் தெரியாதா... தம்பிதுரை தலைமையில் தேர்தல் பிரசாரக்குழு என்று ஒன்றை அமைத்திருக்கிறோம். அதுவாவது எடப்பாடிக்கு நினைவிருக்கிறதா? கடந்த வாரம் நடந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் வழிகாட்டுதல்குழுவை அழைக்காமல் புறக்கணித்தவர், இம்முறை தேர்தல் பிரசாரக்குழுவை புறக்கணித்திருக்கிறார்.

தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்காக கட்சியை அழிவுப்பாதையில் கொண்டு செல்ல எடப்பாடிக்கு எந்த உரிமையும் கிடையாது. இனியும் இதே போக்கு தொடர்ந்தால், நான் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறேன். என் பொறுமைக்கும் எல்லை உண்டு’ என்று மிரட்டும் தொனியில் வெடித்தாராம். இந்தத் தகவல் அப்படியே எடப்பாடியின் கவனத்துக்கும் எடுத்துச்செல்லப்பட, சில நிமிடங்களில் பன்னீரின் லைனுக்கு வந்த எடப்பாடி, ‘இது ஒரு சின்ன விஷயம். இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க. நாளைக்கு (டிசம்பர் 20-ம் தேதி) கிறிஸ்துமஸ் விழா முடிஞ்சதும் உட்கார்ந்து பேசிக்கலாம் வாங்க’ என்று அழைத்திருக்கிறார். இதன் பிறகு, அன்றிரவு 9 மணிக்கு ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரகளை மேலும் சூடானது.

எடப்பாடியை மிரட்டிய பன்னீர்!

“என்னையே தியாகம் செய்யத் தயார்!”

கூட்டத்தின் தொடக்கத்திலேயே எடப்பாடியின் ‘திடீர்’ பிரசார அறிவிப்பைக் குறிப்பிட்டுப் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘சர்வாதிகாரமாக யாரும் நடந்துகொள்ளக் கூடாது. கட்சியின் சீனியர் களான எங்களிடம்கூட தகவல் சொல்லாமல், பிரசாரத்தைத் தொடங்கியதற்கு என்ன அவசரம்?’ என்று பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறார். பதிலுக்கு எடப்பாடி, ‘ஏன்ங்க, எங்கூரு நிர்வாகிகள் கேட்டுக் கிட்டதாலதான் பிரசாரத்தை ஆரம்பிச்சேன்னு தெளிவா பேட்டி கொடுத்திருக்கேன். மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டா என்ன அர்த்தம்?’ என்று குரலை உயர்த்தவும், ‘மீடியாகிட்ட பேசுறதையெல்லாம் எங்ககிட்ட சொல்லாதீங்க’ என்று வைத்திலிங்கம் பதிலுக்கு உஷ்ணமாகவும், அலுவலகத்தின் முதல் தளம் அதிர்ந்திருக்கிறது. ஒருவழியாக இருவரையும் அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

சசிகலா வருகைக்கு முன்பாக, பொதுக் குழுவைக் கூட்டி, எடப்பாடியை ஒற்றைத் தலைமையாக நிலைநிறுத்துவதற்கு கொங்கு புள்ளிகள் மும்முரமாகியுள்ளனர். இந்தத் தகவலையும் கூட்டத்தில் போட்டு உடைத்துவிட்டார் பன்னீர். “நீங்க முதல்வர் பதவியை வாங்கிக்கிட்டு வந்தீங்க. நான் என்கிட்ட இருந்த முதல்வர் பதவியைக் கொடுத்துட்டு வந்திருக்கேன். எனக்கு இழக்குறதுக்கு ஒண்ணுமில்லை. எல்லா பதவிகளையும் விட்டுட்டு கட்சியைக் காப்பாத்துவேன். அதுக்காக எந்த முடிவையும் எடுக்கத் தயங்க மாட்டேன். என்னையே தியாகம் செய்யவும் தயார்’ என்று கூட்டத்தில் பன்னீர் வெடித்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை.

அதாவது, தங்கள் திட்டங்களுக்கு எடப்பாடி ஒத்துழைக்கவில்லையென்றால், அ.தி.மு.க-வை உடைத்து, பன்னீர் தலைமையில் ஓர் அணியை உடைத்துக்கொண்டுவர டெல்லி முடிவெடுத் திருக்கிறது. பன்னீர் அணியை ரஜினியுடன் கைகோக்க வைப்பதுதான் திட்டம். அதைத்தான் பூடகமாகச் சொல்லி கூட்டத்தில் எச்சரித்திருக் கிறார் பன்னீர். ஜனவரி மூன்றாவது வாரத்தில் ரஜினியின் அரசியல் பணிகள் வேகமெடுக்கும். அதற்குள் எடப்பாடி தரப்பினர்மீது ரெய்டுகளை ஏவி, அவரை முடக்குவதற்கு பா.ஜ.க தயாராகிறது. பன்னீரும் பனிப்போரை தீவிரப்படுத்திவிட்டார். ஜெயலலிதாவின் பிறந்தநாளான வருகின்ற பிப்ரவரி 24-ம் தேதியன்று ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படவிருக்கிறது. திறப்புவிழா வுக்கு பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாகச் செல்வார்களா அல்லது இரு அணிகளாகச் செல்வார்களா என்று தெரியவில்லை” என்றார்கள் விரிவாக!

ஓ.பி.எஸ் - ரஜினி
ஓ.பி.எஸ் - ரஜினி

கடுப்பேற்றிய ஹைதராபாத் சந்திப்பு!

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பன்னீர் வாழ்த்து சொல்லி, கூட்டணிக்கு வரவேற்றதிலிருந்தே எடப்பாடி தரப்பு பன்னீர் - டெல்லி காய்நகர்த்தல்களை உற்று நோக்கத் தொடங்கிவிட்டது. பன்னீர், அவரின் மகன்கள், ஆதரவாளர்கள் என அனைவரின் பின்னாலும் நிழல்போலத் தொடர்கிறார்கள் எடப்பாடியின் உளவுப் பிரிவினர். இது பன்னீர் தரப்புக்கும் தெரியாமல் இல்லை.

இந்தநிலையில்தான் ஹைதராபாத்திலிருந்த ரஜினியை பன்னீர் தரப்பிலிருந்து சிலர் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பா.ஜ.க தரப்பில் நம்மிடம் பேசிய சீனியர்கள் சிலர், “2019 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடங்களை தி.மு.க ஒதுக்கிய நிலையில், வெறும் ஐந்து இடங்களை மட்டுமே ஒதுக்கி அ.தி.மு.க எங்களைச் சிறுமைப்படுத்தியது. இதை டெல்லியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பேனரில்தான் சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ சீட் வீதம் சீட்கள் எதிர்பார்க்கிறோம். இதற்கு எடப்பாடி உடன்படவில்லையென்றால் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் பல்வேறு வகைகளில் முடக்கப்படுவார்கள். அவர்கள்மீதான ஊழல் புகார்கள் உட்பட பல்வேறு வழக்குகளும் தயாராக எங்களிடம் உள்ளன. சிலர் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கவே முடியாது” என்றார்கள்!

கடந்த 1989-ல் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கைகோத்தது ஜெ. அணி. சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணியுடன் கைகோத்தது வி.என்.ஜானகி அணி. அன்று சிவாஜி... இன்று ரஜினி.

‘கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எதிரிகளே இல்லை...’ என்று முழங்கிய ஜெயலலிதாவின் கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் கோடரிகளுடன் சூழ்ந்திருக்கிறார்கள் எதிரிகள். கழகம் தப்புமா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்!

***

ஓ.பி.எஸ் தலைமையில் புதிய அ.தி.மு.க!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான வழக்கைத் தொடுத்திருக்கும் முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமியிடம் பேசினோம். “பா.ஜ.க கொடுத்த அழுத்தத்தால்தான், ரஜினி அரசியல் இயக்கம் தொடங்கினார். அதனால், பா.ஜ.க ரஜினியுடன் பயணிக்கவே விரும்பும். அ.தி.மு.க தலைவர்கள், ‘நாங்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் தொடர்கிறோம்’ என்று அறிவித்த பிறகும்கூட, டெல்லியிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. அ.தி.மு.க-வையும் மனதில்வைத்துதான் ‘ஆட்சி மாற்றம், ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்’ என்று ரஜினி சொல்கிறார். அதனால், ஊழல் பின்னணிகொண்ட அ.தி.மு.க-வுடன் ரஜினி கூட்டணி வைக்க மாட்டார். பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வை உடைக்க அனைத்து அஸ்திரங்களையும் கையிலெடுக்கும். நான் அ.தி.மு.க தலைமைமீது தொடர்ந்துள்ள வழக்குகளும் இதற்குக் கைகொடுக்கும். மேலும் பா.ஜ.க., இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவே முயலும் என்று கருதுகிறேன். எனது கணிப்பின்படி, எடப்பாடி தரப்பினருக்கு இனி சிக்கல்தான். பன்னீரை வைத்து புதிய அ.தி.மு.க-வை உருவாக்க பா.ஜ.க திட்டமிடுகிறது. அதை ரஜினியுடன் அணி சேரவைத்து தேர்தலைச் சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு