அரசியல்
Published:Updated:

ஒன் பை டூ

ஜே.சி.டி.பிரபாகர் - சரவணன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜே.சி.டி.பிரபாகர் - சரவணன்

“அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத்தான் முதல்வர் தொடங்கிவைக்கிறார். புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை” என்ற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு...

ஜே.சி.டி.பிரபாகர், அமைப்புச் செயலாளர், அ.தி.மு.க.

“முற்றிலும் உண்மைதான்! அம்மா ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை மட்டுமே இந்த எட்டு மாத காலத்தில் ஒவ்வொன்றாகத் தொடங்கி வைத்துக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதையும் தாங்களே செய்ததுபோல பில்டப் வேறு. 11 மருத்துவக் கல்லூரிகள் அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டவைதான். துறைவாரியாக ஸ்டாலின் தொடங்கிவைக்கும் திட்டங்களும்

அ.தி.மு.க அரசு இருந்தபோது முன்னெடுக்கப்பட்டவைதான். எங்கள் திட்டங்களை அவர்கள் திட்டங்கள்போலத் தொடங்கிவைப்பதைக்கூட மக்கள்நலன் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அம்மா மினி கிளினிக், பொங்கல் பரிசுத்தொகை போன்ற அ.தி.மு.க-வின் சில திட்டங்களை நிறுத்தியிருப்பது, நிச்சயமாக மக்கள் விரோதப்போக்கு. அதேபோல், புதிய திட்டங்கள் எதையும் இந்த அரசு நிறைவேற்றவும் இல்லை. 500 வாக்குறுதிகளில் 300-ஐ நிறைவேற்றிவிட்டதாகச் சொல்கிறார். அவை என்னென்ன திட்டங்கள் என்பதை ஏன் இதுவரை வெளியிடவில்லை?!”

ஒன் பை டூ
ஒன் பை டூ

சரவணன், செய்தித் தொடர்பாளர், தி.மு.க

“இதைவிடப் பெரிய காமெடி எதையும் நான் சமீபத்தில் கேட்டதில்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதைப் பார்த்தால், அ.தி.மு.க ஆட்சியைவிட்டுச் சென்றுவிட்டதால், அவர்கள் மேற்கொண்ட திட்டங்களைத் தொடங்காமலேயே வைக்க வேண்டும் என்கிறாரா? ஒரு திட்டம் பல்வேறு கட்டங்களுக்குப் பிறகுதான் முடிவுக்கு வருகிறது. ‘இந்தத் திட்டம் வரும்’ என்று நம்பியிருக்கும் மக்களுக்கு, வெற்று அறிவிப்போடு நிறுத்துவதைத்தான் கடந்த அ.தி.மு.க அரசு செய்தது. முடிவுக்கு வந்த திட்டங்களைத் தொடங்குவதுதானே ஓர் அரசுக்கு அழகு? கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கிவைத்த, பெயர் சொல்லும் அளவுக்கான இரண்டு திட்டங்களையாவது அ.தி.மு.க-வினரால் சொல்ல முடியுமா? கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கலாம், ஆனால் அதை ஊழலில் மூழ்கடித்துவிட்டார்கள். ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் நாங்கள், புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்து, அது செயல்பாட்டுக்கு வருவதற்குக் குறைந்தது ஒன்றரை ஆண்டுகளாகும். முதல்வர்மீது இருக்கக்கூடிய காழ்ப்புணர்ச்சி, பொறாமை காரணமாக இப்படிப் பேசுகிறார் எடப்பாடி. “நாமும் முதல்வராக இருந்தோம். ஆனால், இப்படியெல்லாம் செய்ய முடியவில்லையே” என்கிற ஆதங்கம், ஆற்றாமையில்தான் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்!”