அரசியல்
Published:Updated:

நிர்வாகிகள் ஒப்புக்கொண்டால், சசிகலாவை சேர்த்துக்கொள்ளலாம்!

ஜெ.சி.டி.பிரபாகர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெ.சி.டி.பிரபாகர்

- விளக்குகிறார் பிரபாகர்!

படம்: சாய் ராமநாதன்

“சசிகலாவைக் கட்சியில் சேர்த்துக்கொள்வது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவுசெய்வார்கள்” என்று ஓ.பி.எஸ் பேசிய பேச்சு அ.தி.மு.க-வுக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. “ஓ.பி.எஸ் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை” என முதலில் ஆதரவுக்கரம் நீட்டியவர் அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும், வழிகாட்டுதல்குழு உறுப்பினருமான ஜெ.சி.டி.பிரபாகர். அவரை நேரில் சந்தித்து மேலும் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“நீங்கள் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாகத்தான் பேசியிருக்கிறீர்கள் என்றாலும், மறைமுகமாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோலத் தெரிகிறதே..?”

“அப்படியில்லை. ‘எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், அதை ஜனநாயக முறைப்படி கலந்தாலோசித்து எடுக்க வேண்டும்’ என்று ஓ.பி.எஸ் சொன்னதைத்தான் நான் ஆதரித்துப் பேசினேன். தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில மாவட்ட நிர்வாகிகள் எல்லோரையும் அழைத்துப் பேச வேண்டும். ஆலோசனையின்போது மெஜாரிட்டியான நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்தால், கட்சியில் அவரைச் சேர்த்துக்கொள்வதில் தவறில்லை.”

“இந்த விஷயத்தில், ஏன் எடப்பாடியைப்போல நேரடியாக பன்னீர் பேசுவதில்லை?”

“ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பி.எஸ்., நேரடியாக அப்படிப் பேசிவிட முடியாது. கேள்வியைத் தொடங்கும்போதே ‘சசிகலாவைச் சேர்த்துக்கொள்வது பற்றி என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?’ என்றுதானே கேட்கிறார்கள்... அதற்கு, ‘தலைமைக் கழக நிர்வாகிகள் சேர்ந்துதான் முடிவெடுக்க முடியும்’ என்கிறார். தனிப்பட்ட முறையில், தான் எந்த முடிவும் எடுக்க முடியாது என்கிறார், அவ்வளவுதான். மேலும், எந்தக் காலத்திலும் பன்னீர்செல்வம் டேரிங்காக எந்த விஷயத்திலும் எடப்பாடி, ஜெயக்குமார் பேசுவதுபோலப் பேசியது கிடையாது. இந்த விஷயத்திலும் அப்படித்தான்.”

“சசிகலாவைச் சேர்த்துக்கொள்வது பற்றி உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ன?”

“எனது முடிவை ஆலோசனைக் கூட்டம் நடந்தால் அதில் தெரிவிப்பதாக இருக்கிறேன். அங்குதான் என் உள்ளத்தில் இருப்பதை நான் வெளிப்படுத்த முடியும்.”

“சசிகலா ஒருவேளை கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்று நினைக்கிறீர்கள்?”

“இவையெல்லாம்தான் விவாதத்துக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். தென் மாவட்டத்தினர் `சசிகலா வந்தால்தான் கட்சி மீள முடியும்’ என்று ஆதரவு கொடுக்கலாம்; மேற்கு மாவட்டத்தினர் சசிகலா பெயரைச் சொன்னாலே எதிர்ப்பு தெரிவிக்கலாம். அனைவரின் கருத்துகளையும் கேட்க வேண்டுமல்லவா? சசிகலாவின் வருகையால் ஏற்படும் சாதக, பாதகங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றுகூட அவசியமில்லை, கருத்துகளைக் கேட்டாலே போதும். அப்போதுதான் மேல்மட்ட மற்றும் கீழ்மட்ட நிர்வாகிகளின் எண்ணங்கள் வெளிப்படும்.”

“சசிகலாவின் சுற்றுப்பயணம் அ.தி.மு.க-வினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?”

‘‘நீண்டகாலமாக மக்களைச் சந்திக்காமல் இருந்தவர், இப்போது நேரம் கிடைப்பதால் சுற்றுப்பயணம் செய்கிறார், சந்திக்கிறார். சசிகலாவின் பயணம் அ.ம.மு.க-வினர் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்திருக்கலாம், அ.தி.மு.க-வினருக்கு அல்ல. அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்துவதே தவறு.”

“எனினும், சசிகலா சிறையிலிருந்து விடுதலையானபோது, வாகனம் கொடுத்ததிலிருந்து இப்போது தேவர் குருபூஜைக்கு அனுமதி பெற்றுக்கொடுத்திருப்பது வரை அ.தி.மு.க-வினர்தானே முன்னின்று செய்கிறார்கள்?”

“அ.ம.மு.க கட்சியில் இருப்பவர்கள் எல்லோருமே ஒரு காலத்தில் அ.தி.மு.க-வில் இருந்தவர்கள்தானே. அவர்கள் அனைவரிடமும் அ.தி.மு.க உறுப்பினர் அட்டை இருக்கிறது. புதிய அட்டை கிடைக்கப்பெற்றவர்கள் மட்டுமே கட்சியில் உறுப்பினர்கள் என்கிறபோதும், பழைய அட்டையை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே அ.தி.மு.க நிர்வாகிபோல நாடகமாடவும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரைவைத்து ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களும் சசிகலா பின்னால் செல்கிறார்கள் என்று சொல்ல முடியாது.”

“அ.தி.மு.க-வுக்குள் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான போர் நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறதே... இதில், உங்களைப் போன்ற பிற சமூகத் தலைவர்கள் நிலைமை எப்படியிருக்கிறது?”

“கொங்குப் பகுதியும், தென் பகுதியும் எப்போதுமே அ.தி.மு.க கோட்டைகளாக இருந்தவை. இப்போது கொங்குப் பகுதியில் அதிக இடங்களையும், தெற்கில் குறைவான இடங்களையும் பெற்றிருப்பதால், அப்படியொரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி, கட்சிக்குள் சமூகரீதியான மோதல்களெல்லாம் ஒன்றும் இல்லை. பிற சமூகத் தலைவர்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. சாதி, மத வேறுபாடுகள் இன்றிச் செயல்பட்டுவருகிறோம்.”

“ ‘கட்சியிலிருந்து எடப்பாடியை நீக்க வேண்டும்’ என்று சொன்ன ஓ.பி.எஸ் ஆதரவாளர் பஷீரைக் கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார்கள். தனது ஆதரவாளரையே தக்கவைக்க முடியாத அளவுக்கு பன்னீருக்கு பிரஷர் கொடுக்கப்படுகிறதா?”

“விஷயங்களுக்கு ஏற்ற மாதிரிதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ‘சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டிருக்கிறோம், கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்’ என்று சொன்னால் பிரச்னை இல்லை. ‘எடப்பாடி சிறுபான்மையினர்களுக்கு துரோகம் செய்துவிட்டார், கட்சியைவிட்டே நீக்க வேண்டும்’ என்று பஷீர் சொல்வது மிகப்பெரிய குற்றச்சாட்டு. அதனால்தான் நீக்கப்பட்டார். மற்றபடி, பன்னீருக்கு எந்தவித பிரஷரும் கொடுக்கப்படுவதில்லை.”

நிர்வாகிகள் ஒப்புக்கொண்டால், சசிகலாவை சேர்த்துக்கொள்ளலாம்!

“அப்படியென்றால் ஏன் இருவருக்குமிடையே சமரசம் பேசவிருப்பதாகச் சொன்னீர்கள்?”

“சமரசம் என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. இருவரையும் சந்தித்துப் பேசவிருக்கிறேன் என்று சொன்னதைத் திரித்துப்போட்டுவிட்டனர். சசிகலா விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகிக்கொண்டே செல்கிறது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று இருவரையும் தனித்தனியே சந்தித்துப் பேசவிருக்கிறேன்.”

“சசிகலா தாக்கல் செய்த ‘பொதுச்செயலாளர்’ பதவிக்கான வழக்கில், எடப்பாடி தரப்பு தனது வாதத்தை வைத்துவிட, ஓ.பி.எஸ் தரப்போ வாய்தா வாங்கியிருக்கிறது. இதுவும் சசிகலா ஆதரவு நிலைப்பாடு என்கிறார்களே?”

“சசிகலா தொடுத்த வழக்கு அக்டோபர் 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி மற்றும் செம்மலை தரப்பு வாதங்களை வைத்துவிட்டனர். ஓ.பி.எஸ் தரப்பில் முன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் அன்று ஆஜராகாததால்தான் கால அவகாசம் கேட்கப்பட்டது. அடுத்ததாக, நவம்பர் 10-ம் தேதி விஜயநாராயணன் ஆஜராகி பன்னீர்செல்வம் தரப்பு வாதத்தை வைப்பார்.”