அலசல்
சமூகம்
Published:Updated:

ஓ.பி.எஸ் இல்லாமல் அ.தி.மு.க-வுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை!

ஜே.சி.டி.பிரபாகர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜே.சி.டி.பிரபாகர்

ஜே.சி.டி.பிரபாகர் தடாலடி

‘‘அ.தி.மு.க தலைமையில், மெகா கூட்டணி அமைக்கப்படும்’’ என்று அறிவித்து, 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமிட்டிருக்கிறார் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்பு குறித்து ஓ.பி.எஸ் முகாமின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்தேன்...

“அ.தி.மு.க-வின் பொன்விழா நிறைவு ஆண்டிலும், உங்கள் உட்கட்சி மோதல்கள் ஒரு முடிவுக்கு வருவதுபோல தெரியவில்லையே?”

“ ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதுதான் அ.தி.மு.க தொண்டர்களின் உணர்வாக இருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்தபோதுகூட, ‘நிச்சயமாக எல்லோரும் ஒன்றுபட வேண்டும்’ என்றுதான் அண்ணன் ஓ.பி.எஸ் சொன்னார். இப்போதும் அவர் அதே உணர்வில்தான் இருக்கிறார்.”

“அப்படியானால், இரு தரப்பும் இணைவதற்குத் தடையாக இருப்பது யார்?”

“பிடிவாதமாக இருப்பவர் அண்ணன் இ.பி.எஸ்-தான் என்பது தமிழக மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறதே!”

“ ‘அ.தி.மு.க தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி’ என்ற எடப்பாடியின் அறிவிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அண்ணன் ஓ.பி.எஸ் இல்லாமல் அ.தி.மு.க-வில் எந்தவிதமான கூட்டணியும் அமைய முடியாது. அவரை ஏற்றுக்கொண்டிருக்கிற தொண்டர்களும், மக்களும் இருக்கிற வரையில் நிச்சயமாக அவரை பிரதானப்படுத்தித்தான் எந்த வெற்றியையும் பெற முடியும். இன்று அழைப்பு விடுப்பது இ.பி.எஸ் என்றாலும், ஓ.பி.எஸ் இல்லாமல் அ.தி.மு.க-வுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பது என்னுடைய தெளிவான முடிவு. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓ.பி.எஸ்-தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவார்.”

“ `சொந்த மாவட்டத்திலேயே ஓ.பி.எஸ்-ஸின் செல்வாக்கு சரிந்திருக்கிறது’ என்கிற விமர்சனம் இருக்கும்போது, அவர் தலைமையை அ.தி.மு.க ஏற்கும் என்கிறீர்களா?”

“நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்ற ஒரே இடம் தேனி தொகுதிதான். முதலமைச்சராக இருந்தும் இ.பி.எஸ்-ஸால் தன் சொந்தத் தொகுதியில்கூட, அ.தி.மு.க வேட்பாளரை வெற்றிபெற வைக்க முடியவில்லையே... இதை தமிழ்நாட்டில் இ.பி.எஸ்-ஸுக்கு செல்வாக்கே இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?”

ஜே.சி.டி.பிரபாகர்
ஜே.சி.டி.பிரபாகர்

“ஆனால், பெரும்பான்மையான நிர்வாகிகள், தொண்டர்கள் தன் பக்கமிருப்பதை சமீபத்திய இரண்டு பொதுக்கூட்டங்களிலும் இ.பி.எஸ் அணி வெளிப்படுத்தியிருக்கிறதே?”

“பெரும்பான்மையான நிர்வாகிகள் அவர்களுடன் இருப்பது உண்மைதான். ஆனால், பெரும்பான்மையான தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை பூலித்தேவன் மற்றும் தேவர் ஐயா நிகழ்வுகளுக்குச் சென்றபோது, எழுச்சியோடு கலந்துகொண்ட அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் வெளிப்படுத்தினார்களே... இப்போதும் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் நியமனம் என்று தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் ஓ.பி.எஸ். அப்படி அவர் வருகிறபோது தெரியும்... அ.தி.மு.க தொண்டர்களும் நிர்வாகிகளும் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது.”

“தேவர் ஜயந்தி நிகழ்வில் இ.பி.எஸ் கலந்துகொள்ளக் கூடாது என்று ஓ.பி.எஸ் தரப்பில் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?”

“அதில் இ.பி.எஸ் கலந்துகொள்ளாதது அவரது தனிப்பட்ட முடிவு. ஆனால், அண்ணன் ஓ.பி.எஸ் மூலம் பொதுவாழ்வில் எல்லாவிதமான சலுகைகளையும், பலனையும் அனுபவித்துவிட்டு, இப்போது அவர் மீதே சிலர் இதுபோல பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டுபோவதும் தரக்குறைவாக விமர்சிப்பதும், வருத்தமளிக்கிறது.”

“ஆனால், உங்கள் தரப்பிலும் இ.பி.எஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குவதுடன், அவரின் ரகசியங்களை வெளியிடப்போவதாகவும் பேசியிருக்கிறார்களே?”

“ஆமாம்... எங்களுக்கு எதிர்வினை காட்டவேண்டிய தேவை இருக்கிறது. அதிர்ச்சி அளிக்கக்கூடிய அந்த ரகசியத் தகவல்களைத் தயார்படுத்தி வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். அதைச் சரியான நேரத்தில் வெளியிடுவார்.”

“எடப்பாடி தரப்புக்கு விடப்படும் பிளாக்மெயில் என்று இதை என்று எடுத்துக்கொள்ளலாமா?”

“அது எப்படி பிளாக்மெயிலாகும்... இதுவரை அண்ணன் ஓ.பி.எஸ் சாந்தமாக, அமைதியாக யாரையும் புண்படுத்தாமல்தான் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால், இ.பி.எஸ் தரப்பு அபாண்டமான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அண்ணன் ஓ.பி.எஸ் மீது சொல்லிக்கொண்டேயிருக்கிறது. அதற்கு இது பதிலடி என்று வைத்துக்கொள்ளலாம்.”

“ `ஒன்றுபட வேண்டும்’ என்கிறீர்கள், பிறகு `இ.பி.எஸ்-ஸுக்கு பதிலடி கொடுப்போம்’ என்கிறீர்கள்... அ.தி.மு.க தொண்டர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்?”

“இது தவிர்க்க முடியாத சங்கடம்தான்... மனதுக்குச் சில நேரங்களில் வருத்தமாகவும் இருக்கிறது. இதையெல்லாம் தொடங்கியது அண்ணன் இ.பி.எஸ்-தான். எனவே, முடித்து வைக்கவேண்டியதும் அவர்தான்.”

“கடைசியாக ஒரு கேள்வி. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் போய்விட்டார்கள். நீங்கள் ஓ.பி.எஸ்-ஸை இவ்வளவு தீவிரமாக ஆதரிக்க என்ன காரணம்... அவரிடம் உங்களை அப்படி எது ஹெவியாகக் கவர்ந்தது?”

“தேர்தல் கமிஷனால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட பொதுக்குழுத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒருங்கிணைப்பாளரை, தொண்டர்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட அந்த தலைமையை, வேண்டாம் என்று சர்வாதிகாரப் போக்குடன் கட்சியைவிட்டு நீக்குவது மிகப்பெரிய அரசியல் அநியாயம். எனவே, நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று விரும்பித்தான் அண்ணன் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக நிற்கிறோம்.”