Published:Updated:

``அதிமுக மீதான பாஜக-வின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வேண்டும்!'' - கேட்கிறார் கல்யாண சுந்தரம்

''ரெயின் கோட் அணிந்துகொண்டு மக்களுக்கு உணவுப் பொட்டலம் கொடுப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுதான் மக்கள் பணி என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்'' என்கிறார் கல்யாண சுந்தரம்.

ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அ.தி.மு.க - தி.மு.க இடையிலான முட்டல் மோதல் அரசியல் அனல் பறக்க ஆரம்பித்திருக்கிறது. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தினால், தி.மு.க தரப்பிலோ, 'சென்னைப் பெருவெள்ளத்துக்குக் காரணமே அ.தி.மு.க ஊழல் ஆட்சிதான்' என பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கல்யாண சுந்தரத்திடம் பெருவெள்ள பாதிப்பு, தி.மு.க அரசின் செயல்பாடு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம்.

''கடந்தகால அ.தி.மு.க அரசின் முறைகேடுகளே சென்னைப் பெரு வெள்ளத்துக்குக் காரணம் என தி.மு.க தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறதே?"

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

''ரெயின் கோட் அணிந்துகொண்டு, மக்களுக்கு உணவுப் பொட்டலம் கொடுப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுதான் மக்கள் பணி என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். ஷாமியானா பந்தல் அமைத்து, அதன் கீழ் நின்று ஒரு முதல்வர், வெள்ள நீரோட்டத்தைப் பார்வையிடுகிறார் என்றால், இதெல்லாம் வெற்று விளம்பரம்தானே!

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலும் நான்கைந்து முறை இதே போன்ற பெரு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் அ.தி.மு.க அரசு துரிதமாகச் செயல்பட்டது. பக்கத்து மாநகராட்சி பணியாளர்களையெல்லாம் சென்னைக்கு அழைத்து வந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம். எனவே, அ.தி.மு.க-வுக்கு எதிரான பத்திரிகைகள்கூட அன்றைய அரசின் செயல்பாடுகளைப் பாராட்டித்தான் எழுதின. ஆனால், தி.மு.க அரசு இந்த ஆறு மாத காலத்தில் தூர்வாரும் பணிகளை ஓர் இடத்தில்கூட மேற்கொள்ளவில்லை.''

சென்னை வெள்ளம்: `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு; நடவடிக்கை நிச்சயம்’ - முதல்வர் ஸ்டாலின்

''கொரோனா ஒழிப்பில் முழு கவனம் செலுத்திவரும் தி.மு.க அரசு, 'அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், நீர்நிலைகளைத் தூர்வாரியதாகக் கணக்கு மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது' எனச் சொல்கிறதே?''

''தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்திலேயே, நாங்களும் கொரோனாவை எதிர்கொண்டிருக்கிறோம். எனவே, தூர்வாரவில்லை என்ற உண்மையை மறைக்க கொரோனா பணியை தி.மு.க-வினர் காரணம் காட்டக் கூடாது. மழை பெய்ய ஆரம்பித்து முதல் இரண்டு நாள்களில், அ.தி.மு.க மீது குற்றச்சாட்டு வைக்காமல், வெறுமனே போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு, ஊடகங்கள் வழியே மக்களைக் கவர்ந்துவிடலாம் என்றுதான் தி.மு.க நினைத்துக்கொண்டிருந்தது. நிலைமை கைமீறிப் போன பிறகு, எங்கள்மீது பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

'அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், சரிவரத் தூர்வாரப்படவில்லை' என்று தி.மு.க-வினருக்கு இப்போதுதான் தெரிகிறது என்று சொன்னால்கூட, அத்தியாவசியப் பணியான பேரிடர்ப் பணிகள் குறித்து இந்த ஆறு மாதங்களிலும் அவர்கள் கவனம் செலுத்தவேயில்லை என்றுதானே அர்த்தமாகிறது?"

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

''ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் வாங்குவதில்தான் முன்னாள் அமைச்சர் வேலுமணி கவனம் செலுத்தியிருக்கிறார் என்று முதல்வர் நேரடியாகக் குற்றம்சுமத்துகிறாரே?''

''அ.தி.மு.க ஆட்சிக் காலத்துக்கு முன்பு அதே உள்ளாட்சித்துறையில் பொறுப்பு வகித்துவந்தவர் மு.க.ஸ்டாலின். மத்தியிலும்கூட அவர்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிதான் ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்தது. ஆனாலும்கூட, 'மு.க.ஸ்டாலின் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்' என எந்தப் பாராட்டையும் அன்றைய மத்திய அரசு வழங்கவில்லை.

ஆனால், கூட்டணியிலிருந்தாலும் பா.ஜ.க-வின் ஆட்சிப் பொறுப்பில் நாங்கள் பங்கெடுக்காத சூழலிலும்கூட, இந்திய அளவில் உள்ளாட்சிப் பணிகளில் சிறந்து விளங்கியதாக 143 விருதுகளை மத்திய அரசிடமிருந்து பெற்றிருக்கிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. செத்துப்போனதாகச் சொல்லப்பட்ட எத்தனையோ ஏரி, குளங்களை மீட்டெடுத்து, சுற்றுலாத்தலங்களாகக்கூட மாற்றப்பட்டிருப்பதெல்லாம், நீர் மேலாண்மையில் தமிழகம் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள். இதெல்லாம்தான் மு.க.ஸ்டாலினுக்குப் பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதனால்தான் எஸ்.பி.வேலுமணியை டார்கெட் செய்து குற்றச்சாட்டு, வழக்கு, ரெய்டு என்று தொடர்ந்து வன்மம் காட்டிவருகிறார்கள். இவையெல்லாம் தி.மு.க-வின் தோல்வியைத்தான் வெளிக்காட்டுகின்றன.''

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குட்டி; தட்டி எழுப்ப முயற்சி செய்த தாய் யானை; உருகவைத்த வீடியோ!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''அ.தி.மு.க ஆட்சிக்கு விருது வழங்கிய அதே மத்திய பா.ஜ.க-தான், 'நாட்டிலேயே அதிகமாக ஊழல் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு' எனக் கடந்தகாலத்தில் குற்றச்சாட்டும் வைத்திருக்கிறதே?''

''2018-ல் நாங்கள் பா.ஜ.க கூட்டணிக் கட்சி கிடையாது. எனவே, அ.தி.மு.க-வின் எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுவந்த தமிழக பா.ஜ.க-வும் தங்களுக்கான இடத்தைப் பிடித்துக்கொள்வதற்கான முயற்சிகளில் இருந்துவந்தது. இந்தச் சூழலில், தமிழகம் வந்திருந்த அமித் ஷா, 'திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது' என்று ஆளுங்கட்சிகள்மீது அவர்களுக்கு இருந்த சந்தேகத்தைப் பொதுவான குற்றச்சாட்டாகத்தான் முன்வைத்தார். எனவே, இதை அ.தி.மு.க-வுக்கு எதிரான குற்றச்சாட்டாகப் பார்க்க முடியாது. அ.தி.மு.க தரப்பிலும் இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் அப்போதே மறுத்துவிட்டோம்."

அண்ணாமலை
அண்ணாமலை

''தற்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைகூட, '100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில், கடந்த அ.தி.மு.க ஆட்சியிலிருந்தே ஊழல் நீடித்திருக்கிறதே' எனச் சொல்லியிருக்கிறாரே?''

''குற்றச்சாட்டை யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம். தமிழக பா.ஜ.க தரப்பில் இப்படியொரு குற்றச்சாட்டை அ.தி.மு.க மீது சுமத்தினால், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டிய பொறுப்பும் தமிழக பா.ஜ.க-வுக்குத்தான் இருக்கிறது. இல்லையென்றால், வெறுமனே குற்றச்சாட்டாக மட்டுமே தொடரும். எனவே, இது ஒரு பெரிய விஷயம் இல்லை!.

சட்டமன்றத் தேர்தலில், 65 இடங்களில் அ.தி.மு.க வென்றிருக்கிறது, தி.மு.க - அ.தி.மு.க இடையிலான வாக்கு வித்தியாசமும்கூட சொற்பமானதுதான் என்றால், அந்த அளவுக்கு மக்கள்நலப் பணிகளில் அ.தி.மு.க அரசு செம்மையாகச் செயல்பட்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.''

ஜெய்பீம் விவகாரத்தைத் தொடர்ந்து போஸ்டர் சர்ச்சையில் `சபாபதி' சந்தானம்!

''புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்ற ஆறு மாத காலத்துக்குள் விமர்சிக்க வேண்டாம் என்ற அரசியல் நாகரிகத்துடன் பொறுமை காத்தோம். ஏனெனில், நாங்கள் எதிர்க்கட்சிதான்; எதிரிக்கட்சி அல்ல.

சபரீசன்
சபரீசன்

ஆனால், ஆறு மாத காலத்துக்குள்ளாகவே தி.மு.க-வினரின் ஊழல், மழை வெள்ள் பாதிப்பு, மின்வெட்டு என அரசின் நிர்வாகத் திறமையின்மை மக்களுக்கே வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.

குறிப்பாக, மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நிழல் முதல்வராகவே செயல்பட்டுவருகிறார். அவரைச் சுற்றியே அனைத்து அமைச்சரவையும் இயங்குவதுபோல ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றப்பட்டு, ஊழல் என்பதே அரசுடைமையாக்கப்பட்டுவிட்டது.''

(இந்த `விறு விறு’ பேட்டியின் தொடர்ச்சி விகடன் இணையதளத்தில் நாளை வெளிவரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு