Published:Updated:

``சீமானை விமர்சிப்பதென்பது அரசியல்ரீதியாக பக்குவப்படாத தன்மை!" - கல்யாண சுந்தரம் விளக்கம்

``என்னால் நாம் தமிழர் கட்சியில் இணைக்கப்பட்ட எத்தனையோ தம்பிகள் இன்றைக்கும் அந்தக் கட்சியிலேயே பயணித்துவருகிறார்கள். என்னோடும் நல்ல தொடர்பில் இருந்துவருகிறார்கள்'' என்கிறார் கல்யாண சுந்தரம்.

(அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கல்யாண சுந்தரம் பேட்டியின் தொடர்ச்சி...)

பேட்டியின் முதல் பாகத்தைப் படிக்கக் கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்...

``அதிமுக மீதான பாஜக-வின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வேண்டும்!'' - கேட்கிறார் கல்யாண சுந்தரம்

''குற்றச்சாட்டுவைத்தால், ஆதாரம் காட்டுங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி சவால்விடுகிறார். ஆனால், நீங்களும்கூட வெறுமனே குற்றம்சாட்டுகிறீர்களே?''

''நான் முன்வைக்கும் வெளிப்படையான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவைப்படுகிறதா என்ன? அ.தி.மு.க ஆட்சி செய்துகொண்டிருந்த கடைசி நாள், கடைசி ஒரு மணி நேரம் வரையிலும்கூட தமிழ்நாட்டில் மின் துண்டிப்பு இல்லை. ஆனால், இன்றைக்கு தமிழகம் முழுக்க மின் பற்றாக்குறை ஏற்பட்டு மின்வெட்டு என்பது தொடர்கதையாகியிருக்கிறது. நேரடியான இந்த பாதிப்புக்கும்கூட அமைச்சர் ஆதாரம் கேட்பாரா?

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த நிலையில், தன் துறையைக்கூட சரிவர கவனிக்கத் தெரியாத அமைச்சர் செந்தில் பாலாஜியை, கோவை மாவட்டப் பொறுப்பாளராக நியமனம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பொறுப்புக்கு வந்த செந்தில் பாலாஜியும், சூலூரைச் சேர்ந்த அ.தி.மு.க கவுன்சிலர் மூன்று பேரைக் காசு கொடுத்து விலைக்கு வாங்கி, மு.க.ஸ்டாலினைச் சந்திக்கச் செய்கிறார்.

அ.தி.மு.க-வின் பெயரைச் சொல்லி, மக்களிடம் வாக்குகள் வாங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகொடுத்து மகிழ்வதென்பது எவ்வளவு பெரிய பச்சையான ஜனநாயகப் படுகொலை, மக்கள் துரோகம். இந்த வேலையைச் செய்ததற்காகவே செந்தில் பாலாஜி நீக்கப்பட வேண்டாமா?''

''முல்லைப்பெரியாறு அணைக்கு நேரடியாக சென்றிராத முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உச்ச நீதிமன்ற ஆணையின்படி அணையைத் திறந்துவிட்ட தி.மு.க அரசை விமர்சிக்கலாமா என்று கேட்கிறார்களே?''

'' `தமிழகப் பிரதிநிதிகள் இல்லாமல், முல்லைப்பெரியாறு அணையிலிருந்து நீரைத் திறந்துவிடக் கூடாது' என்பதை வெளிப்படையாகச் சொல்லித்தான் நாங்கள் போராடிவருகிறோம். ஆனால், 'தமிழகச் செயற்பொறியாளர்கள்தான் நீரைத் திறந்துவிட்டனர்' என்று தி.மு.க அரசு சமாதானம் சொல்கிறதென்றால், இதுவே நமது உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டோம் என்றுதான் அர்த்தம்.

அதாவது, தமிழகத்துக்கே தகவல் தெரிவிக்காமல் தமிழக அரசுப் பிரதிநிதிகளை அனுப்பிவைத்து, அணையைத் திறந்தது போன்ற பிரச்னை கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஒரு முறைகூட ஏற்படவில்லை. எனவே, அணைப் பகுதிக்குப் போகவேண்டிய சூழலும் ஏற்படவில்லை. ஆக, பிரச்னையே இல்லாத காலத்தில், 'ஏன் அணைப் பகுதிக்குச் செல்லவில்லை' என்று தி.மு.க கேட்பதே, எந்தவித தர்க்க அறிவும் இல்லாத கேள்வி.''

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

''சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைப்பதா, வேண்டாமா என்பதில் அ.தி.மு.க-வே இப்போது இரண்டுபட்டு நிற்கிறதுதானே?''

''இல்லை. ஊடகங்கள்தான் அப்படியொரு கருத்துருவாக்கத்தை உருவாக்கிவருகின்றன. ஏனெனில், சசிகலா குறித்து ஏற்கெனவே கட்சி ஒரு தெளிவான முடிவை எடுத்து அறிவித்திருக்கிறது. அதன்படியே செயல்பட்டும்வருகிறது. எனவே, இது குறித்துப் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''சசிகலா விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி சொல்கிற கருத்துக்கு நேர் எதிரான கருத்தை ஓ.பன்னீர்செல்வம் சொல்லிவருகிறாரே?''

''அப்படியில்லை... கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என அனைவரும் சேர்ந்து முடிவெடுத்த அறிவிப்பைத்தான் அனைவருமே சொல்லிவருகிறார்கள். ஆனால், செய்தியாளர்கள் கேட்கிற கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது 'யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்' என்பது போன்ற கண்ணோட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் சில வாசகங்களைப் பயன்படுத்திச் சொல்லியிருந்தார். உடனே, 'கட்சிக்குள் பூகம்பம் வரப்போகிறது' என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. இதோ ஒரு மாதம் ஆகிவிட்டது. ஒன்றும் நடக்கவில்லையே! எனவே தலைவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில்தான் இருந்துவருகிறார்கள். எந்தப் பிரச்னையும் இல்லை.''

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

''அ.தி.மு.க-வில் குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கம் பெருகிவிட்டதாகவும் கட்சியே இரண்டாகப் பிளவுப்பட்டு நிற்பதாகவும் பேசப்படுகின்றனவே?''

''மீண்டும் மீண்டும் இப்படியான குற்றச்சாட்டை அ.தி.மு.க மீது சிலர் வைத்துவருகிறார்கள். எனவே, தொடர்ச்சியாக நான் பேச நினைக்கும் விஷயம் இது. சாதிரீதியாக அ.தி.மு.க-வைச் சுருக்கிப் பார்ப்பதென்பதே தவறான பார்வை. சாதிக் கட்சிகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பலமாக இருக்கும். மற்ற இடங்களில் மிகக்குறைவான வாக்குகளை மட்டுமே பெறும்.

இதைச் சொல்லும்போது, கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க பலமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி சிலர் கேள்வி கேட்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க பலமாக இருக்கிறதுதான். அதுவே தமிழ்நாடு முழுக்க மற்ற பகுதிகளிலும்கூட கட்சி பெரிய அளவில் பலவீனப்படவில்லை. எந்தவொரு தொகுதியிலாவது அ.தி.மு.க 3-வது இடத்துக்கு வந்துவிட்டதாகச் சொல்ல முடியுமா? ஆக, அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் சாதி வெறியர்களா என்ன?''

மதுபோதையில் பொதுமக்களை அச்சுறுத்திய நபர்! - வீடுவரை துரத்திச் சென்று கைது செய்யவைத்த ஆட்சியர்

''10.5% உள் இட ஒதுக்கீட்டால் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க பாதிக்கப்படுகிறது என்று அ.தி.மு.க அமைச்சர்களே பேசியிருக்கிறார்கள்தானே?''

''எதிர்ப்பாகப் பேசுவதென்பது இல்லை. ஒருசில நேரங்களில் அவரவர் கருத்துகளைச் சொல்கிறார்கள். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் எந்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாவப்போவதில்லை. இதனால், தென் மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்பதும் உண்மை இல்லை. எனவே, இதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எதிர்க்கவேண்டிய அவசியமும் இல்லை!''

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

''ஆனால், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ஏற்புடையது அல்ல எனக் கூறி நீதிமன்றமே தடைவிதித்துவிட்டதே?''

''ஆமாம்... நீதிமன்றத் தடையும்கூட விவாதத்துக்கு உரியதுதான். அதாவது, எந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த விகிதாசாரம் நிர்ணயம் செய்யப்பட்டது என்ற கேள்வியைக் கேட்டுத்தான் நீதிமன்றம் தடைசெய்திருக்கிறது. அப்படியென்றால், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவருகிற 69% இட ஒதுக்கீடு வரையிலாக அனைத்துமே இந்த வழக்கின் அடிப்படையில் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறது. இதை மருத்துவர் ராமதாஸும் தெளிவாக விளக்கி அறிக்கை வெளியிட்டிருக்குகிறார். எனவே, இந்த விஷயத்தில் சமூகநீதியைப் பாதுகாக்க நினைக்கும் அனைத்துக் கட்சிகளுமே ஒன்றுகூடி முடிவெடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.''

ஆக்கிரமிப்பு விவகாரம்: அதிரடிகாட்டிய மாநகராட்சி ஆணையர்; போர்க்கொடி தூக்கிய திமுக நிர்வாகி!

''நாம் தமிழர் கட்சியிலிருந்து கருத்து முரண் ஏற்பட்டு, பிரிந்துவந்தபோதிலும், அண்மையில், சீமான் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறீர்களே..?''

''அரசியல் நாகரிகம் கருதி, ஓர் அரசியல் தலைவருக்கு நாம் வாழ்த்து சொல்கிறோம் அவ்வளவுதான்... சில மாதங்களுக்கு முன்பு சீமானுடைய தந்தையார் மரணமடைந்த வேளையிலும்கூட நான் வருத்தம் தெரிவித்து பதிவுகள் வெளியிட்டிருந்தேன்.

சீமான்
சீமான்

ஒருகாலகட்டத்தில் எனக்கும் சீமானுக்கும் இடையே சில கருத்து முரண்பாடுகள் இருந்தன. அதற்காக சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் விமர்சிப்பதுதான் என் வேலை என்று நான் பார்க்கவில்லை. இன்றைக்கு அதிகாரத்தில் இருந்துவரும் தி.மு.க-வைத்தான் நாங்கள் விமர்சிக்க வேண்டும். அதிகாரத்துக்கு வரத் துடிக்கும் காங்கிரஸைத்தான் கவனிக்க வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு, சீமானை விமர்சிப்பதென்பது அரசியல்ரீதியாக பக்குவப்படாத தன்மையாகத்தான் நான் நினைக்கிறேன்.

நாம் தமிழர் கட்சியில் நான் பயணித்தபோது, என்னால் கட்சிக்குள் இணைக்கப்பட்ட எத்தனையோ தம்பிகள் இன்றைக்கும் அந்தக் கட்சியிலேயே பயணித்துவருகிறார்கள். என்னோடும் நல்ல தொடர்பில் இருந்துவருகிறார்கள். ஓர் அரசியல் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டாலே, அந்தக் கட்சியோடு பகையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை கடந்தகால தமிழக அரசியலில் இருந்துவந்திருக்கிறது. அந்த நிலை இனியாவது இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு