தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக, அண்மையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை அதிகரிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. தி.மு.க அரசு சொத்து வரியை உயர்த்தியதைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தலைமையிலும், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் தலைமையிலும், மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து திருச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''கொரோனா காலகட்டத்தில் மக்கள் மிகவும் சிரமப்பட்டுவரும் நிலையில், தி.மு.க அரசு மக்களின் மீது திட்டமிட்டு வரிச்சுமையை விதித்துள்ளது. ஸ்டாலின் எப்போது தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றாரோ, அன்றிலிருந்தே அவர் தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. அவருடைய வீட்டு மக்களைப் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறார். மத்திய அரசின் மீது பழியைப்போட்டு, தி.மு.க அரசு சொத்து வரியை உயர்த்தியிருக்கிறது'' என்றார்.

அதேபோல, சென்னை ஆர்பாட்டத்தில் பேசிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், ``தமிழகத்தில் கடன் அளவு உயர்ந்துகொண்டே செல்கிறது. இப்படி இக்கட்டான சூழலில் சொத்து வரியை உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. தி.மு.க தலைமையிலான மக்கள் விரோத அரசின் ஆட்சி தற்போது நடைபெற்றுவருகிறது. `ஸ்டாலின் வரப்போறாரு விடியல் தரப்போறாரு’ என்று வீதி வீதியாகச் சொன்னார்கள். எந்த விடியலும் வரவில்லை. ஸ்டாலின் அரசு சொத்து வரியைத் திரும்ப பெறவில்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடிக்கும்'' என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் நடிகை விந்தியா இது தொடர்பாக, ``அம்மா கொண்டுவந்த இலவச மடிக்கணினித் திட்டம், இலவச மிதிவண்டித் திட்டம் என மாணவர் நல திட்டங்கள் அனைத்தும் தி.மு.க அரசால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது அம்மா உணவகத்தையும் படிப்படியாக மூடிக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மக்கள் இனியும் சும்மா இருக்க மாட்டார்கள்! இன்னும் ஐந்தாண்டுகளில் தி.மு.க ஆட்சியை ஓட ஓட விரட்டியடிப்பார்கள்'' என்றார்.