Published:Updated:

“பிரசாரத்துக்கு வந்துடாதீங்க ஜி...” - அலறும் அ.தி.மு.க அமைச்சர்கள்

வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
News
வேலுமணி

ஒருகாலத்தில் ‘மோடி எங்கள் டாடி’ என்று கொஞ்சி மகிழ்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்போது, ‘டாடி இந்தப் பக்கமே வர வேண்டாம்னு சொல்லிடுங்க’ என்று பதறுகிறாராம்.

‘‘எங்கள் தொகுதிக்குப் பிரசாரத்துக்கு வாங்க... வாங்க...’’ என்று கட்சித் தலைவர்களை வரவேற்கும் வேட்பாளர்களைத்தான் பார்த்திருப்போம். ஆனால், ‘பிரசாரத்துக்கு வந்துடாதீங்க’ என்று அலறும் வேட்பாளர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அ.தி.மு.க-வில்தான் இந்தக் கூத்து! பா.ஜ.க தலைவர்கள் தங்கள் தொகுதியில் பிரசாரத்துக்கு வந்தால், சிறுபான்மையினரின் வாக்குகள் பறிபோய்விடும் என்று பதறும் அமைச்சர்கள் சிலர், ‘கேட்’ போடுவதுதான் கூட்டணிக்குள் களேபரத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

பா.ஜ.க-வுக்கு கேட் போடுவதில் முதல் ஆளாக நிற்பவர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுமார் 60,000 இஸ்லாமியர் வாக்குகள் உள்ளன. இந்தச் சூழலில் பா.ஜ.க மாநிலத் தலைவர்கள் சிலரிடம், ‘‘பா.ஜ.க தலைவர்கள் கோவைக்குப் பிரசாரத்துக்கு வந்தால், தொண்டாமுத்தூரிலுள்ள சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி அலை ஏற்படும். இதனால், நம் கூட்டணிக்குக் கிடைக்கும் வாக்குகள் கணிசமாகக் குறையும். தலைவர்களை வேறோர் இடத்தில் பிரசாரம் செய்யச் சொல்லுங்கள்’’ என்றிருக்கிறது வேலுமணி தரப்பு. அதை ஏற்றுக்கொள்ளாத பா.ஜ.க தலைவர்கள், ‘‘கோவை தெற்குத் தொகுதியில் பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுவதால், இங்கு பிரசாரம் செய்தே தீருவோம்’’ என்று சொல்லிவிட்டார்களாம். என்ன செய்வதென்று புரியாமல், வேலுமணி தரப்பு கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.

ஆர்.பி.உதயகுமார்  - செல்லூர் ராஜூ
ஆர்.பி.உதயகுமார் - செல்லூர் ராஜூ

ஒருகாலத்தில் ‘மோடி எங்கள் டாடி’ என்று கொஞ்சி மகிழ்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்போது, ‘டாடி இந்தப் பக்கமே வர வேண்டாம்னு சொல்லிடுங்க’ என்று பதறுகிறாராம். நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர், ‘‘விருதுநகரில் பா.ஜ.க வேட்பாளர் பாண்டுரங்கனுக்குப் போட்டியாக அ.ம.மு.க வேட்பாளர் கோகுலம் தங்கராஜ் கடுமையாகக் களப்பணியாற்றி வருவதால், டெல்லி தலைவர்களைப் பிரசாரத்துக்காக அங்கு களமிறக்க மாநிலத் தலைமை முடிவெடுத்தது. இதனால் ராஜபாளையத்தில் போட்டியிடும் ராஜேந்திர பாலாஜி பதறிப்போய்விட்டார். தனக்குத் தெரிந்த சில ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மூலமாக, ‘விருதுநகருக்கு பா.ஜ.க தலைவர்கள் வந்து வாக்கு கேட்டால், இருக்கும் வாக்குகளும் போய்விடும்’ என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து, மதுரையில் தலைவர்களை வைத்து பிரசாரம் செய்ய பா.ஜ.க-வினர் முடிவெடுத்திருப்பதால், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் அரண்டு போயிருக்கிறார்கள். ‘பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடும் மதுரை வடக்குத் தொகுதி உங்களுக்குத் தெம்பாக இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் டெல்டா பகுதியில் பிரசாரத்தை வைத்துக் கொள்ளுங்களேன்’ என்று அமைச்சர்கள் தரப்பினர் பா.ஜ.க-வுக்குத் தூதுவிட்டுள்ளனர். ஆனால், அதை கமலாலயம் ஏற்கவில்லை’’ என்றார்.

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் நிற்கும் குப்புராம், தொகுதிக்குப் பிரதமரை எப்படியாவது பிரசாரத்துக்காக அழைத்து வந்துவிட வேண்டுமென முயல்கிறார். இதற்கு கட்சிக்குள்ளேயே ஒருசிலர் முட்டுக்கட்டை போடுவதாலும், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் தொகுதிகளின் அ.தி.மு.க வேட்பாளர்கள், ‘அழைச்சுட்டு வந்துடாதீங்க...’ என்று அலறுவதாலும், டெல்லித் தலைவர்களின் ராமநாதபுரம் விசிட் கேள்விக்குறியாகியிருக்கிறதாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வேலுமணி - ராஜேந்திர பாலாஜி
வேலுமணி - ராஜேந்திர பாலாஜி

இதே கதைதான் திருநெல்வேலியிலும். அங்கு பா.ஜ.க சார்பில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன், ஒரு மத்திய அமைச்சரையாவது பிரசாரத்துக்காக அழைத்து வர வேண்டுமென துடிக்கிறார். ஆனால் பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரத்தில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் இதை எதிர்க்கிறார்களாம். குறிப்பாக, ‘இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாளையங்கோட்டை தொகுதியில் பெருத்த சேதத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்’ என அ.தி.மு.க தரப்பு பதறுவதால், பா.ஜ.க மாநிலத் தலைமை இன்னும் நயினாரின் கோரிக்கைக்கு இசைவு தெரிவிக்கவில்லை என்கிறது கமலாலய வட்டாரம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் பா.ஜ.க வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். பிரசாரத்துக்குக் கண்டிப்பாக பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வ ருவார்கள் என்பதால், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் தளவாய் சுந்தரம் வெளறிப்போயிருக்கிறாராம்.

தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் 30 தலைவர்களின் பெயர்ப்பட்டியலை மார்ச் 16-ம் தேதி பா.ஜ.க வெளியிட்டது. தினமும் ஒரு மத்திய அமைச்சர், மாநில முதல்வர்கள் என்று பிரசாரத்தை அதகளப்படுத்தவும் ஏற்பாடுகள் தீவிரமாகின. ஆனால், தமிழக அமைச்சர்கள் பலரின் வேண்டுகோள் காரணமாக, மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் பிரசாரப் பயணத் திட்டத்தை இறுதிசெய்ய முடியாமல் கமலாலயம் தடுமாறுகிறது. எந்த ஊருக்குச் செல்வதாகத் தேதி குறித்தாலும், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் “ஜி... நம்ம ஏரியாவுல பிரசாரத்துக்கு வர வேண்டாம் ஜி...” என்று கோரஸ் பாடுவதால் கடுப்பிலிருக்கிறது கமலாலயம். டென்ஷனான பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் ஒருவர், ‘‘2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி படத்தைப் போடாமலும், நம்மை உடன் அழைத்துச் செல்லாமலும்தான் அ.தி.மு.க-வினர் பிரசாரம் செய்தார்கள். மீண்டும் அதே தவற்றைச் செய்கிறார்கள்’’ என்று டெல்லிக்குப் புகாராகத் தட்டிவிட்டிருக்கிறார்.

பிரசாரம் முடிவதற்கு சில நாள்களே மீதமிருப்பதால், பா.ஜ.க-வை ஓரங்கட்டியே அந்த நாள்களையும் ஓட்டிவிட அ.தி.மு.க காய்நகர்த்துகிறது. டெல்லி தலைவர்களை ஒரு முறையாவது மேடையேற்றிவிட வேண்டுமென்று பா.ஜ.க மல்லுக்கட்டுகிறது. யார் ஜெயிக்கப் போகிறார்களோ?