Published:Updated:

தொகுதிக்குள் முடங்கிய அமைச்சர்கள்... வலுக்கும் எதிர்ப்பு!

தொகுதிக்குள் முடங்கிய அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
தொகுதிக்குள் முடங்கிய அமைச்சர்கள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்தால் சில சமூகங்களிடம் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, 10.5 சதவிகிதம் வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவையே மக்களின் அதிருப்திக்குக் காரணம்.

தொகுதிக்குள் முடங்கிய அமைச்சர்கள்... வலுக்கும் எதிர்ப்பு!

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்தால் சில சமூகங்களிடம் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, 10.5 சதவிகிதம் வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவையே மக்களின் அதிருப்திக்குக் காரணம்.

Published:Updated:
தொகுதிக்குள் முடங்கிய அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
தொகுதிக்குள் முடங்கிய அமைச்சர்கள்

ஒருகாலத்தில் `அ.தி.மு.க-வின் கோட்டை’ என்று வர்ணிக்கப்பட்ட தென்தமிழகம், இன்று அ.தி.மு.க வேட்பாளர் களை விழிபிதுங்கவைத்திருக்கிறது. அமைச்சர்களே தங்கள் தொகுதிகளுக்குள் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். ஓரளவுக்குச் சொந்தச் செல்வாக்குள்ள ஒருசில அமைச்சர் களும் தங்கள் தொகுதியைத் தாண்டி வேறெங்கும் செல்வ தில்லை. தேர்தல் நெருங்க நெருங்க இந்த எதிர்ப்பலை வட மாவட்டங்களிலும் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் பிரசாரம் செல்வதற்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியைத் தாண்டி வேறு தலைவர்கள் இல்லாததால், அ.தி.மு.க-வின் பிரசாரக் கட்டமைப்பு வெகுவாக சுருங்கிவிட்டது.

தொகுதிக்குள் முடங்கிய அமைச்சர்கள்... வலுக்கும் எதிர்ப்பு!

“வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்தால் சில சமூகங்களிடம் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, 10.5 சதவிகிதம் வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவையே மக்களின் அதிருப்திக்குக் காரணம். ஏற்கெனவே அ.ம.மு.க., புதிய தமிழகம் தனித்து நிற்பதால் தென் தமிழகத்தில் எதிர்ப்பை எதிர்கொள்ளும் அ.தி.மு.க வேட்பாளர்கள், இந்த மூன்று அதிருப்தி விவகாரங்களால் திண்டாடிப் போயிருக்கிறார்கள்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்த எதிர்ப்பு, பிரசார களத்திலும் எதிரொலிக்கிறது.

சங்கரன்கோவிலில் போட்டியிடும் அமைச்சர் ராஜலட்சுமி வல்லராம்புரம் கிராமத்துக்கு பிரசாரத்துக்குச் சென்றபோது, கறுப்புக்கொடியுடன் அவர் வாகனத்தைc சூழ்ந்துகொண்ட மக்கள், “சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடிக்காமல், எப்படி இட ஒதுக்கீடு வழங்கினீர்கள்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளிக்க முடியாமல், அடுத்த நிமிடமே பிரசாரத்தை கேன்சல் செய்துவிட்டு, சிட்டாகப் பறந்துவிட்டார் ராஜலட்சுமி.

தொகுதிக்குள் முடங்கிய அமைச்சர்கள்... வலுக்கும் எதிர்ப்பு!

அமைச்சர் செல்லூர் ராஜூவின் முதல்நாள் பிரசாரத்திலேயே ஏழரை ஆரம்பித்தது. தனது மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட சோலை அழகுபுரத்தில் பிரசாரத்துக்குச் சென்றவரை வழிமறித்த அப்பகுதி மக்கள், “குடிசை மாற்று வாரியத்துல வீடு வாங்கித் தர்றதா சொல்லி, 950 பேருகிட்ட உங்க கட்சிக்காரங்க தலைக்கு 5,000 ரூபாய் வசூல் பண்ணிட்டாங்க. இதுவரைக்கும் வீடும் ஒதுக்கீடு செய்யலை; பணமும் திருப்பித் தரலை. இதுக்கு என்னா பதில் சொல்லப்போறீங்க? 2016 தேர்தல் பிரசாரத்துக்கு வந்தப்ப, எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா தர்றதா சொன்னீங்க. அதுவும் தரலை...” என்று வறுத்தெடுத்துவிட்டார்கள். அரண்டுபோன செல்லூர் ராஜூ, அவர்களைச் சமாதானப்படுத்திவிட்டு பிரசாரத்தைத் தொடர்வதற்குள் திணறிவிட்டார்.

திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட பாலதிருப்பதியில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனைச் சூழ்ந்துகொண்ட பெண்கள், “குடிநீர் பிரச்னையைச் சரிசெய்யறேன்னு சொல்லித்தானே ஜெயிச்சீங்க... இன்னும் அந்தப் பிரச்னை தீரலை. இப்ப என்னத்த சாதிச்சுட்டோம்னு திரும்பவும் ஓட்டுக் கேட்டு வர்றீங்க?” என்று கொதித்துவிட்டார்கள். பதில் சொல்ல முடியாமல் யூ டர்ன் போட்டுக் கிளம்பினார் சீனிவாசன். ஐயன்குளத்திலும் அமைச்சர் வாகனத்தை முற்றுகையிட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ராஜலட்சுமி - செல்லூர் ராஜூ - திண்டுக்கல் சீனிவாசன் - ஆர்.பி.உதயகுமார்
ராஜலட்சுமி - செல்லூர் ராஜூ - திண்டுக்கல் சீனிவாசன் - ஆர்.பி.உதயகுமார்

மேலூர் தொகுதியில் சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏ பெரியபுள்ளான் சென்றபோது, அவரை முற்றுகையிட்ட மக்கள், “யார் நீ, இவ்வளவு நாள் எங்க இருந்த, என்ன செஞ்ச?” என்று ஏக வசனத்தில் காய்ச்சி எடுத்துவிட்டார்கள். ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பிச் சென்ற பெரியபுள்ளான், சிறிது தூரம் சென்ற பிறகு, “மகத்தான வரவேற்பளித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி!” என்று வலிக்காத மாதிரியே மைக்கில் வசனம் பேசியதுதான் காமெடி.

உளுந்தூர்பேட்டை பிள்ளையார்குப்பம் பகுதியில், குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்காத சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏ குமரகுருவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அ.தி.மு.க எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பெண்கள் ரோட்டில் நிற்பதைப் பார்த்த அ.தி.மு.க-வினர் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்புவதற்குள் நொந்து நூலாகிவிட்டனர். சென்னை, வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் அசோக், கஸ்தூரிபாய் நகரில் பிரசாரத்துக்குச் சென்றபோது அவரை வழிமறித்த முதியவர் ஒருவர், “ஏம்பா, 2011-16 காலகட்டத்துல நீ இந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தப்ப குடியிருப்பு பட்டா தர்றதா சொன்னியே... ஞாபகம் இருக்கா? அதுவே இன்னும் நடக்கலை. இப்ப எதுக்கு வந்த?” என்று கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார்.

தேர்தல் பணிகளுக்காக 30 மண்டலப் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அ.தி.மு.க தலைமை. பூத் கமிட்டிகள் அமைப்பது தொடங்கி பிரசாரத்தை முன்னெடுப்பது வரை அனைத்தும் இவர்களின் பொறுப்பு. இவர்கள் அனைவருமே அவரவர் தொகுதிக்குள் முடங்கிப்போயிருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாவட்டத்தில் தேனி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், மதுரை மேற்கு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கான பொறுப்பை ஏற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திருமங்கலம் தொகுதியைவிட்டு வெளியே வருவதில்லை. மருதுபாண்டியர் சிலை வைப்பது தொடர்பான பிரச்னையால் அமைச்சருக்கு எதிராக அகமுடையார் சமூகத்தினர் அணிதிரண்டிருக்கிறார்கள். தேவேந்திர குல வேளாளர் பெயர் விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கும் பிள்ளைமார் சமூகத்தினர், சமீபத்தில் மறவன்குளத்தில் வ.உ.சி சிலைக்கு அமைச்சர் மாலையிடச் சென்றபோது கறுப்புக்கொடி சூழ அவரை முற்றுகையிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர். வேளாளர் பெயர் பிரச்னையால் சோழவந்தான் தொகுதி அ.தி.மு எம்.எல்.ஏ மாணிக்கத்துக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அலங்காநல்லூர் பகுதிக்கு அவர் வாக்குச் சேகரிக்கச் சென்றபோது அவரைத் தடுத்து, திருப்பியனுப்பிவிட்டார்கள் மக்கள்.

இதேப் பிரச்னையை தனது போடிநாயக்கனூர் தொகுதியில் சந்திக்கிறார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். குயவர்பாளையத்தில் பன்னீரைச் சூழ்ந்துகொண்ட மக்கள், வேளாளர் பெயர் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தனர். அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட பத்து மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவில்லை என்றும் எதிர்ப்பலை எழுந்துள்ளதால், சொந்தத் தொகுதியை காப்பாற்றிக்கொள்வதற்காகத் தனது வெளியூர் பிரசாரத் திட்டத்தையே மாற்றியிருக்கிறார் பன்னீர். வாக்குச் சேகரிப்பு முடிவதற்கு ஒரு டஜன் நாள்களே இருக்கும் நிலையில், அதில் ஏழு நாள்களைத் தன்னுடைய தொகுதியில் மட்டும் செலவழிக்க முடிவெடுத்திருக்கிறார். இதனால், தங்களுக்காகப் பன்னீர் பிரசாரத்துக்கு வருவார் என்று நம்பியிருந்த தென்மாவட்ட வேட்பாளர்கள் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் அ.ம.மு.க சார்பில் ஒரு முத்தரையரை வேட்பாளராகக் களமிறக்கியிருக் கிறார்கள். இதுதவிர, அ.தி.மு.க கட்சியிலிருந்து அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார். இப்படி, தொகுதியில் கணிசமாக இருக்கும் முத்தரையர் வாக்குகள் சிதறுவதாலும், முக்குலத்தோர் வாக்குகளை தி.மு.க., அ.ம.மு.க பிரிப்பதாலும் கதிகலங்கிப்போயிருக்கிறார் விஜயபாஸ்கர்.

இந்தத் தேர்தலில் ராஜபாளையத்துக்கு மாறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது அரசியல் எதிரி ராஜவர்மனின் ஆட்களால் பெரும் குடைச்சலைச் சந்திக்கிறார். போதாக்குறைக்கு தி.மு.க-வில் போட்டியிடும் செள.தங்கபாண்டியன் தரப்பு, வியாபாரிகளிடம் ஜி.எஸ்.டி பிரச்னையை மையப்படுத்தி ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்கிறது. இதனால், தனது தொகுதியைவிட்டு ராஜேந்திர பாலாஜி வெளியே வருவதே இல்லை. கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் இதே பிரச்னைதான். அங்கு அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதால், தன் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட அவருக்குத் தெரிவதில்லை. ராயபுரத்தில் ஜெயக்குமாரும், ஒரத்தநாட்டில் வைத்திலிங்கமும், நன்னிலத்தில் ஆர்.காமராஜும் தொகுதிக்குள்ளேயே முடங்கிவிட்டார்கள்.

விஜயபாஸ்கர் -  ராஜேந்திர பாலாஜி - கடம்பூர் ராஜூ - ஜெயக்குமார்
விஜயபாஸ்கர் - ராஜேந்திர பாலாஜி - கடம்பூர் ராஜூ - ஜெயக்குமார்

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சிலநாள்களாக சோர்ந்துவிட்டார்போல. வடமாவட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி என்று வலம்வந்துகொண்டிருக்கிறார். பிரசாரத்தின் கடைசி நாள்களில் அவரும் தனது எடப்பாடித் தொகுதிக்குள் முடங்கிவிடுவார் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரங்கள் எப்போதுமே திருவிழாபோல களைகட்டும். மாநிலம் முழுவதும் ஏழெட்டு இடங்களைத் தேர்வு செய்து, அந்தப் பகுதியின் வேட்பாளர்களையெல்லாம் ஒரே மேடையில் நிற்கவைத்து பிரமாண்ட பொதுக்கூட்டங்களை நடத்துவார். கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அந்த மேடையில் அணிவகுக்கக் செய்து கூட்டணி பலத்தைக் காட்டுவார். கூட்டணித் தலைவர்களுமே பிரசாரத்தில் பட்டையைக் கிளப்புவார்கள். ஆனால், எல்லாமே தலைகீழாக மாறிவிட்டன. இது தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism