Election bannerElection banner
Published:Updated:

`Danger Zone'ல் அமைச்சர்கள்... அதிமுக-வின் வெற்றிவாய்ப்பு எப்படி?

அ.தி.மு.க அமைச்சர்கள்
அ.தி.மு.க அமைச்சர்கள்

``அமைச்சர்களை விடுங்கள். துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸே மிகவும் நெருக்கடியான நிலையில்தான் இருக்கிறார்'' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான அ.தி.மு.க நிர்வாகிகள்.

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க தலைவர் ஸ்டாலினும் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இருவருக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்களும் நடந்துவருகின்றன. கொரோனா காலத்தில் வெளியில் எங்குமே செல்லாத, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸும் களத்துக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். மறுபுறம் தே.மு.தி.க-வின் வரவால் உற்சாகமாகியிருக்கிறார்கள் அ.ம.மு.க தொண்டர்கள். கோயம்புத்தூரில் மக்களோடு மக்களாக வாக்கிங் சென்றுகொண்டிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல். நாம் தமிழர் கட்சியின் சீமான், தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளையும் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இந்தநிலையில் ஆளும் அ.தி.மு.க-வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் உற்சாகத்தில் கால் பங்குகூட அந்தக் கட்சியின் பெரும்பாலான அமைச்சர்களுக்கு இல்லை என்கிறது அ.தி.மு.க வட்டாரம். ``அமைச்சர்களை விடுங்கள். துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸே மிகவும் நெருக்கடியான நிலையில்தான் இருக்கிறார்'' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான அ.தி.மு.க நிர்வாகிகள்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகிகள் சிலர்,

``எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் எப்படியும் ஜெயித்துவிடுவார். அதனால் அவர் மிகவும் உற்சாகமாகப் பிரசாரம் செய்துவருகிறார். ஆனால், அமைச்சர்கள் எல்லோரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அலைகின்றனர். ஏன் துணை முதல்வரும்கூட கடைசி ஒரு வாரம் தொகுதியைவிட்டு எங்கும் செல்லக் கூடாது என முடிவெடுத்திருக்கிறார். காரணம், போடி தொகுதியில் கள்ளர் மற்றும் மறவர் சமூக மக்களின் 25 சதவிகித வாக்குகளால்தான் கடந்தமுறை அவர் வெற்றிபெற்றார். ஆனால், இந்த முறை தி.மு.க சார்பில் போட்டியிடும் தங்கத் தமிழ்ச்செல்வன் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதனால் அந்த வாக்குகள் அவருக்கு விழுந்துவிடும். தவிர, அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் கணிசமான நாயுடு வாக்குகளை வாங்கிவிடுவார். கடந்த முறை தே.மு.தி.க-வும் இந்தத் தொகுதியில் 7,000 வாக்குகள் வரை வாங்கியிருக்கிறது. இந்தமுறை தினகரனின் அ.ம.மு.க-வில் அங்கம் வகிக்கிறது தே.மு.தி.க. அவர்கள் கணிசமாகப் பிரிக்கும் வாக்குகளும் எங்கே நமக்கு நெருக்கடியாக மாறிவிடுமோ என அச்சத்தில் இருக்கிறார் துணை முதல்வர்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
ஈ.ஜெ.நந்தகுமார்

அதேபோல, கரூர் தொகுதியில் போட்டியிடும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், தி.மு.க சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை எதிர்கொள்வதற்குக் கடுமையாகத் திணறிவருகிறார். தவிர, தொகுதியில் அவர்மீது கடுமையான அதிருப்தியும் இருந்துவருகிறது. அதனால், இந்த முறை அவர் ஜெயிப்பது கஷ்டம்தான். திருமங்கலத்தில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக, அ.ம.மு.க கூட்டணி சார்பில் மருது சேனை அமைப்பின் ஆதிநாராயணன் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் இருக்கும் கணிசமான அகமுடையார் சமூக வாக்குகளை அவர் பிரித்துவிடுவார். தவிர அவருக்கும் அமைச்சர் உதயகுமாருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அமைச்சருக்கு எதிராகப் பல போராட்டங்களையும் அவர் நடத்தியிருக்கிறார். அமைச்சரைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துக்காகத்தான் இங்கு போட்டியிடுகிறார்.

கடம்பூர் ராஜூவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. கடந்தமுறையே அவர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றார். தொகுதியில் கணிசமான நாயுடு சமூக வாக்குகள் இருந்தாலும் தொகுதியில் 20 சதவிகிதத்துக்கும் மேலாக இருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகளால்தான் அமைச்சர் வெற்றிபெற்றார். ஆனால், இந்தமுறை டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதால் அது அப்படியே அவருக்குப் போவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. தினகரனைத் தவிர கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பெரும்பாலானோர் தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த வாக்குகள் பிரிவது அமைச்சருக்குப் பின்னடைவு. கூடவே, அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்திருப்பது தினகரனுக்குச் சாதகமான ஒரு விஷயமாக இருக்கிறது

அமைச்சர்கள் வேலுமணி தங்கமணி
அமைச்சர்கள் வேலுமணி தங்கமணி

அதேபோல, திண்டுக்கல் தொகுதியில் ஏழு சதவிகித இஸ்லாமியர் வாக்குகள் இருக்கின்றன. பா.ஜ.க-வுடனான கூட்டணியின் காரணமாக அது கண்டிப்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு விழ வாய்ப்பில்லை. தவிர, அ.ம.மு.க சார்பில், ராமுத்தேவர் என்பவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரும் அமைச்சரின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த வாக்குகளும் பிரிய அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல, அமைச்சர் சி.வி. சண்முகம், கே.சி.கருப்பண்ணன், ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளிலும் கடுமையான இழுபறியே இருந்துவருகிறது. கடந்த 1991 தேர்தலிலிருந்து தொடர்ச்சியாக நாங்கள் வென்றுவரும் தொகுதியான சங்கரன்கோவிலில் இந்த முறை வன்னியர் இட ஒதுக்கீட்டின் காரணமாக எங்கள் கட்சியின் மீது மிகப்பெரிய அதிருப்தி இருக்கிறது. அந்தத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜலெட்சுமியை ஊருக்குள் செல்லவிடாமல் குறிப்பிட்ட சமூக மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தவிர, அ.ம.மு.க கணிசமான வாக்குகளைப் பிரிப்பதால் அங்கும் வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது.

பா.ஜ.க-வின் 'தொலைநோக்கு'த் திட்டம்... பதறும் அ.தி.மு.க!

அதேபோல, அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் கடம்பூர் ராஜூ, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், சரோஜா, வெல்லமண்டி நடராஜன், ராஜேந்திர பாலாஜி, எம்.சி.சம்பத், ஓ.எஸ்.மணியன், மாஃபா பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன், பெஞ்சமின் என அனைவரும் இந்தமுறை தேறுவது கஷ்டம்தான். அமைச்சர்களில் வேலுமணி, தங்கமணி, காமராஜ், விஜயபாஸ்கர், செங்கோட்டையன், கே.சி.வீரமணி ஆகியோர் வேண்டுமானால் ஜெயிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது'' என்றவர்கள் மேலும் சில சிஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்,

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

``ஆளும்கட்சி மீதான அதிருப்தி, எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் என்பதைத் தாண்டி உட்கட்சிப் பூசல்தான் இந்த முறை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அம்மா முதல்வராக இருந்தபோது ஒரு தொகுதியில் போட்டியிட பலர் விருப்பமனு அளித்திருந்தாலும், அம்மா ஒருவரைத் தேர்வு செய்த பிறகு அனைவரும் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், தற்போது அந்தச் சூழல் இல்லை. அனைவரையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் எடப்பாடிக்கு இல்லை என்றாலும் அனைவரையும் அழைத்துப் பேசி சமரசமாவது அவர் செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை.

8,000-க்கும் மேற்பட்டோர் போட்டியிட விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில், 234 பேர் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதமிருக்கும் 7,000-க்கும் மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் தற்போது தேர்தல் வேலை செய்யவில்லை. பல இடங்களில் சுயேச்சையாகவும் போட்டியிடுகிறார்கள். அவர்கள் அனைவரும் சாதாரண நபர்கள் இல்லை. முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் அவர்களுக்கென்று தொகுதிக்குள் கணிசமான செல்வாக்கு இருக்கிறது. முதல்வர் அழைத்துப் பேசவில்லை என்றால்கூட பரவாயில்லை. தொகுதி அமைச்சர்களோ, மாவட்டச் செயலாளர்கள்கூட அழைத்துப் பேசவில்லை. கூடவே வேட்பாளர்களிடமும், யாரையும் சென்று சந்திக்கக் கூடாது எனவும் கட்டளை பிறப்பித்திருக்கின்றனர். இதுவே இந்தமுறை அ.தி.மு.க-வின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமையப்போகிறது'' என்கிறார்கள் அதிருப்தியோடு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு