Published:Updated:

முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை... முக்கியப் பிரச்னைகள் குறித்து மனு அளித்த அதிமுக எம்.எல்.ஏ!

இசக்கி சுப்பையா

``அம்பாசமுத்திரம் செல்லும் சாலை மிக மோசமாக இருப்பதால் அதைச் சீரமைக்க அகிம்சை வழியில் கோரிக்கை விடுத்துள்ளேன். நடவடிக்கை இல்லாவிட்டால் மக்களைத் திரட்டிப் போராடுவேன்’’ என்றார், எம்.எல்.ஏ-வான இசக்கி சுப்பையா.

முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை... முக்கியப் பிரச்னைகள் குறித்து மனு அளித்த அதிமுக எம்.எல்.ஏ!

``அம்பாசமுத்திரம் செல்லும் சாலை மிக மோசமாக இருப்பதால் அதைச் சீரமைக்க அகிம்சை வழியில் கோரிக்கை விடுத்துள்ளேன். நடவடிக்கை இல்லாவிட்டால் மக்களைத் திரட்டிப் போராடுவேன்’’ என்றார், எம்.எல்.ஏ-வான இசக்கி சுப்பையா.

Published:Updated:
இசக்கி சுப்பையா

தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதியில் தீர்க்கப்படவேண்டிய 10 முக்கியப் பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் தெரியப்படுத்துமாறு கோரியிருந்தார். அதை ஏற்று அம்பாசமுத்திரம் தொகுதியின் அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வான இசக்கி சுப்பையா இன்று தனது கோரிக்கையை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் அளித்தார்

ஆட்சியரிடம் மனு அளித்த இசக்கி சுப்பையா
ஆட்சியரிடம் மனு அளித்த இசக்கி சுப்பையா

அந்த மனுவில், ``அம்பாசமுத்திரம் முதல் கோபாலசமுத்திரம் வரை அதிகமாக நெல் பயிரிடப்படுகிறது. அதனால் விவசாயிகளின் நலன் கருதி நெல்லைப் பாதுகாக்கும் வகையில் குடோன் அமைக்க வேண்டும். வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் மருத்துவமனைகளின் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைக் குறிப்பிட்டிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., ``அம்பாசமுத்திரம் தொகுதியில் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டிய பத்து கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்திருக்கிறேன். அம்பாசமுத்திரம் தொகுதி விவசாயிகள் அதிகம் உள்ள இடம். விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் பயனடையும் வகையில், கன்னடியன், நதியுன்னி, வடக்கு மற்றும் தெற்கு மேலழிகியான் கால்வாய்களில் தடுப்புச்சுவருடன்கூடிய தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

ஆட்சியர் அலுவலகத்தில் கட்சியினருடன் இசக்கி சுப்பையா
ஆட்சியர் அலுவலகத்தில் கட்சியினருடன் இசக்கி சுப்பையா

பாபநாசம் அணையிலீருந்து பாண தீர்த்தம் அருவிக்கு சோலார் மின்சாரம் மூலம் பசுமைப் படகு போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். மணிமுத்தாறு அணைப் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தும் பூங்கா நீண்டகாலமாகப் பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டிக் கிடப்பதைச் சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன்.

அகஸ்தியர் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி மறுக்கிறது. அதனால் சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதால் அது பற்றியும் ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன்.

நெல்லையிலிருந்து அம்பாசமுத்திரத்துக்குச் செல்லும் சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. அமெரிக்காவுக்குக்கூட எளிதில் சென்றுவிட முடியும். ஆனால், அம்பாசமுத்திரத்துக்குச் செல்ல முடியாது என்று இருக்கும் நிலைமையை மாற்றும் வகையில் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.அகிம்சை வழியில் சாலை குறித்து கோரிக்கை வைத்திருக்கிறேன். நடவடிக்கை இல்லாவிட்டால் மக்களைத் திரட்டிப் போராடுவேன்” என்று இசக்கி சுப்பையா தெரிவித்தார்.