Published:Updated:

அதிமுக: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ்; எஸ்.பி வேலுமணிக்கும் பதவி! - வெளியானது அறிவிப்பு

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ்
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ்

அதிமுக தலைமைக் கழக அறிவிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வெளியாகியிருக்கிறது. அதன்படி...

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு மேல் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக கொறடாவைத் தேர்வு செய்வது, எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இ.பி.எஸ்
இ.பி.எஸ்

புதிய ஆட்சி அமைந்ததற்குப் பிறகு முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி நடைபெறவிருப்பதால் இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

`கருவாடு கூட மீன் ஆகும்.. சசிகலா, அதிமுக உறுப்பினர் ஆக  முடியாது!’ - சி.வி.சண்முகம் காட்டம்

இந்தநிலையில், அதிமுக தலைமைக் கழக அறிவிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சட்டமன்ற கொறடாவாக முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான, எஸ்.பி.வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். துணை கொறடாவாக அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ ரவி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அறிவிப்பு
அறிவிப்பு

அதே போன்று செயலாளராக பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ கே.பி.அன்பழகனும் துணைச் செயலாளராக ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதே போன்று கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ``சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் வளர்ச்சிக்கு, புகழுக்கு இழுக்கு விளைவிக்கும் அனைவரும் கழகத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இனி அது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கழகத்தின் மூத்த முன்னோடிகளை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சசிகலா அதிமுக-வை அபகரிப்பதாக தினமும் தொலைபேசியில் பேசிவருகிறார். சசிகலா தொலைபேசியில் பேசுவதை தினந்தோறும் ஒலிபரப்பி விநோத நாடகத்தை நடத்திவருகிறார். சசிகலாவுடன் உரையாடிய அனைவரும் அதிமுக=விலிருந்து நீக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை சசிகலாவுடன் உரையாடிய 15 நபர்கள் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அறிக்கை
அறிக்கை

அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதால் நீக்கம் என கட்சி அறிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு