Published:Updated:

எடப்பாடியின் பதவி வெறிதான் அனைத்துக்கும் காரணம்! - அ.தி.மு.க எம்.பி தர்மர் பொளேர்

தர்மர்
பிரீமியம் ஸ்டோரி
தர்மர்

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற அ.தி.மு.க-வுக்கு ஆறு இடங்கள் வேண்டும். ஆனால், என்னையும் சேர்த்து தற்போது நான்கு பேர்தான் இருக்கிறோம்.

எடப்பாடியின் பதவி வெறிதான் அனைத்துக்கும் காரணம்! - அ.தி.மு.க எம்.பி தர்மர் பொளேர்

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற அ.தி.மு.க-வுக்கு ஆறு இடங்கள் வேண்டும். ஆனால், என்னையும் சேர்த்து தற்போது நான்கு பேர்தான் இருக்கிறோம்.

Published:Updated:
தர்மர்
பிரீமியம் ஸ்டோரி
தர்மர்

அ.தி.மு.க-வில் தற்போது நடந்துவரும் பிரச்னைகளின் முக்கியப்புள்ளி மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் தன் பங்கு ஒதுக்கீட்டைப் பிடிவாதமாகக் கேட்டு, முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளர் தர்மருக்குக் கொடுத்ததுதான் இருவருக்கிடையிலும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து நடந்த பொதுக்குழுக் கூட்டம் முதல் தலைமை அலுவலக வன்முறை, நீதிமன்ற வழக்கு, எடப்பாடிக்கு ஓ.பி.எஸ் விட்ட தூது வரையிலான கேள்விகளை எம்.பி தர்மரிடம் முன்வைத்தேன்...

“உங்களை எம்.பி-யாகத் தேர்வுசெய்த விவகாரத்தில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்-ஸுக்கிடையே ஏற்பட்ட முரண்தான் ஒற்றைத் தலைமை நகர்வுக்குக் காரணமாக அமைந்தது என்கிறார்களே?”

“அப்படியெல்லாம் இல்லை. நான் கட்சிப் பதவி வேண்டுமென்றோ, தேர்தலில் நிற்க சீட் வேண்டுமென்றோ எப்போதும் கேட்டது கிடையாது. இரண்டு ராஜ்ய சபா எம்.பி சீட்டுகளில், ஒன்று தென் மாவட்டத்துக்கென்று முடிவானது. கிருத்திகா முனியசாமி இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருக்கிறார். அதேபோல சீட் கேட்டவர்களைவிட நான்தான் கட்சியில் சீனியர். பி.ஏ படித்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னார்கள். நான் தேர்வாகியிருப்பதாக எடப்பாடி அண்ணன் எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். எனவே, என்னுடைய தேர்வுதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் தொடக்கம் என்பதை ஏற்க முடியாது.”

எடப்பாடியின் பதவி வெறிதான் அனைத்துக்கும் காரணம்! - அ.தி.மு.க எம்.பி தர்மர் பொளேர்

“ஒற்றைத் தலைமை விவகாரத்துக்குப் பிறகு, ‘ஓ.பி.எஸ் சமூகரீதியாகச் செயல்படுகிறார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?”

“ஐயா எப்போதும் சமூகம் சார்ந்து செயல்பட்ட தில்லை. முதல்வராக இருந்தபோதுகூட அவர் அப்படிச் செயல்பட்டதில்லை. சமூகரீதியான கூட்டங்களில்கூட அவர் கலந்துகொள்ள மாட்டார். அவர் எல்லோருக்குமான தலைவ ராகவே இருந்தார்; இருக்கிறார். ஆனால், எடப்பாடி அண்ணன் அவரது சமூகம் சார்ந்தே இயங்குகிறார்.”

“சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ்-ஸால் தென்மாவட்டங்களில் அதிக இடங்களைக் கைப்பற்ற முடியவில்லையே?”

“மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 10.5 சதவிகிதம் வன்னியர்களுக்கு வழங்க எடப்பாடி முடிவுசெய்தார். அப்போது, தென்மாவட்டங்களில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஓ.பி.எஸ் எச்சரித்தார். ஆனால், அவர் கேட்கவில்லை. அதன் காரணமாகவே, சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்கு வாக்கு கிடைக்கவில்லை. பல ஊர்களில் எங்களால் பிரசாரத்துக்கே செல்ல முடியவில்லை. இதைத் தான் அவர்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள். பிறகு, ‘ஓ.பி.எஸ்-ஸால் தென்மாவட்டங்களில்கூட வேட்பாளர்களை வெற்றிபெறவைக்க முடிய வில்லை’ என்று கட்சிக்குள் தொடர்ந்து பேசி, ஓ.பி.எஸ்-ஸின் செல்வாக்கைக் குறைக்க முயன்றனர். இப்படியாக, ஒற்றைத் தலைமை விவகாரம் அவர்களால் நீண்டகாலமாகத் திட்டமிடப் பட்டிருக்கிறது.”

“அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நீங்கள் முக்கியப்புள்ளியாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறதே?”

“(சிரிக்கிறார்). தலைமை அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ் செல்லவிருப்பதாகக் கூறியதும், நாடாளு மன்றத்தில் பதவியேற்றவுடனே சென்னைக்குத் திரும்பினேன். அலுவலகச் சாலையில் நாங்கள் நடந்து செல்லும்போதே, அங்கிருந்தவர்கள் என் னுடன் வந்தவர்களை ஆயுதங்களால் தாக்கினர். அவர்களிடமிருந்து ஓ.பி.எஸ்-ஸைப் பாதுகாப்பாக அலுவலகம் கொண்டு செல்வதே எங்களுக்குப் போராட்டமாகிவிட்டது. எல்லாவற்றையும் அவர் கள் செய்துவிட்டு, எங்கள்மீது பழிபோடுகிறார்கள்.”

“ஓ.பி.எஸ் மற்றும் அவரின் பல ஆதரவாளர்களை எடப்பாடி கட்சியிலிருந்து நீக்கியபோதும், உங்களை மட்டும் ஏன் நீக்கவில்லை?”

“மாநிலங்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற அ.தி.மு.க-வுக்கு ஆறு இடங்கள் வேண்டும். ஆனால், என்னையும் சேர்த்து தற்போது நான்கு பேர்தான் இருக்கிறோம். என்னையும் கட்சி யிலிருந்து நீக்கியிருந்தால், கட்சிக்கு அங்கீகாரம் இல்லாமல் போயிருக்கும். அதேபோல, மாவட்டச் செயலாளர்களைத்தான் கட்சியிலிருந்து நீக்கினார்கள். நான் ஒன்றியச் செயலாளர்தான். இந்தக் காரணங்களால்தான் என்னை நீக்கவில்லை என்று கருதுகிறேன்.”

“ஒற்றைத் தலைமை விவகாரத்துக்குப் பிறகு, எடப்பாடி தரப்பிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா?”

“அம்மாவுக்குப் பின்னர் நான் ஓ.பி.எஸ்-ஸுக்கு விசுவாசமாக இருக்கிறேன். என்னை அழைத்தாலும் கூட நான் அவர்கள் பக்கம் போக மாட்டேன். இது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், என்னை மட்டும் அவர்கள் அழைக்கவில்லை.”

“பதவிக்காகத்தான் ஓ.பி.எஸ் இவ்வளவு பிரச்னைகள் செய்கிறார் என்று எடப்பாடி நேரடியாகவே கூறுகிறாரே?”

“முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லாப் பதவிகளையும் கட்சியின் நலனுக்காகத் தூக்கி எறிந்தவர் ஓ.பி.எஸ். ஆனால், கட்சிக்குள் இவ்வளவு பிரச்னைகள் வருவதற்கு எடப்பாடியின் பதவி வெறிதான் காரணம். தற்போது வழக்கில் வெற்றிபெற்றும், இணைந்து செயல்படலாம் என்று பெருந்தன்மையுடன் அழைப்பு விடுக்கும் ஓபிஎஸ்-ஸை அவர்கள் தவறாகப் பேசுகிறார்கள்.”

“தன்னால் தனியாகக் கட்சியை வழிநடத்த முடியாது என்பதால்தான், எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கிறாரா ஓ.பி.எஸ்?”

“அவரால் முடியாதது என்று எதுவுமில்லை. தர்மயுத்தம் நடத்தியபோதும், தற்போதும் பெரும்படையைத் தனிநபராக எதிர்த்து நின்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறாரே... தற்போது எங்களிடம் எடப்பாடி தரப்பிலிருந்து பல மாவட்டச் செயலாளர்கள் பேசுகிறார்கள். இன்னும் ஒரு மாதத்துக்குள் எங்கள் பக்கம் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களும், 10-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களும் வந்துவிடுவார்கள்.”

“சசிகலா, தினகரனுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்., இப்போது அவர்களுக்கு அழைப்புவிடுவது முரணாக இல்லையா?”

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்ட மன்றத் தேர்தலிலும் அ.ம.மு.க தனித்து நின்றதால் தான் வாக்குகள் சிதறி, பல இடங்களில் அ.தி.மு.க வெற்றி வாய்ப்பை இழந்தது. தமிழ்நாட் டைப் பொறுத்தவரை 65 சதவிகித வாக்காளர்கள் தான் கட்சியைச் சார்ந்து இருக்கிறார்கள். மீத முள்ள 35 சதவிகித வாக்காளர்கள்தான் வெற்றியை உறுதி செய்கிறார்கள். அதைப் பெறுவதற்கு பலமான அ.தி.மு.க தேவை. அதை மனதில் வைத்துத்தான் இணைந்து செயல்பட ஓ.பி.எஸ் எல்லோருக்கும் அழைப்பு விடுகிறார். இதில் தவறில்லை!”