Published:Updated:

``நாட்டில் என்ன நடக்கிறதென்றே ஸ்டாலினுக்குத் தெரியாது; மாய உலகத்தில் இருக்கிறார்!" - சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் - விழுப்புரம் ( தே.சிலம்பரசன் )

"ஸ்டாலின் ஒரு மாய உலகத்தில் இருக்கிறார். மனைவி, மகன், மருமகன் சொல்வதை மட்டும்தான் கேட்பார். அதைத் தவிர வேறு ஏதும் அவருக்கு தெரியாது." - சி.வி.சண்முகம்

``நாட்டில் என்ன நடக்கிறதென்றே ஸ்டாலினுக்குத் தெரியாது; மாய உலகத்தில் இருக்கிறார்!" - சி.வி.சண்முகம்

"ஸ்டாலின் ஒரு மாய உலகத்தில் இருக்கிறார். மனைவி, மகன், மருமகன் சொல்வதை மட்டும்தான் கேட்பார். அதைத் தவிர வேறு ஏதும் அவருக்கு தெரியாது." - சி.வி.சண்முகம்

Published:Updated:
சி.வி.சண்முகம் - விழுப்புரம் ( தே.சிலம்பரசன் )

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து நேற்றைய தினம் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையேற்றுப் பேசினார். அப்போது அவர், ``சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டு உங்களிடம் வந்திருந்த இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், கிட்டத்தட்ட 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்திருந்தார். அவற்றைச் சரியாக நிறைவேற்றினாரா என்றால் இல்லை.

அதிமுக ஆர்ப்பாட்டம் - விழுப்புரம்
அதிமுக ஆர்ப்பாட்டம் - விழுப்புரம்
தே.சிலம்பரசன்

இன்றைய ஆட்சியில், மின்சாரக் கட்டணம் மட்டும் உயரவில்லை... பெண்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டத்தைப் பறித்த அரசு இந்த ஸ்டாலின் அரசு. ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எங்கு சென்றாலும் இந்த மக்கள் ஆரத்தி எடுக்கிறார்கள் என தமிழ்நாட்டு தாய்மார்களைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். தேர்தல் நேரத்தில் உங்களுக்குச் சரியான பதிலடியை கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது மட்டுமின்றி, ஏழை எளிய மக்களுக்காக அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பசுமை வீடு திட்டம், மகளிர் ஸ்கூட்டி, அம்மா உணவகம், மாணவர்களுக்கு மடிக்கணினி போன்ற நல்ல திட்டங்கள் இன்றைய ஆட்சியில் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஓராண்டுக் காலத்தில், இரண்டு மூன்று மடங்கு கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சிமென்ட் விலை ஏறிவிடும். காரணம், சிமென்ட் ஆலை நடத்துவது எல்லாமே தி.மு.க-வின் பினாமிகள். அவர்களாகவே கூடி விலை நிர்ணயம் செய்துகொள்கிறார்கள். வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் தைரியமும் ஸ்டாலினுக்கு இருந்தால்... அம்மா ஆட்சியில் சிமென்ட் விலையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததைப்போல உங்களால் செய்ய முடியுமா... நிச்சயம் முடியாது. ஏனெனில், வாங்குவதே அவர்கள்தானே..!

முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க எம்.பி சி.வி.சண்முகம்
முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க எம்.பி சி.வி.சண்முகம்

இப்போது பால், தயிர், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்றவற்றுக்கும் 5% வரி போடப்பட்டிருக்கிறது. இதை மாநில அரசிடம் கேட்டால், மத்திய அரசுதான் போட்டுவிட்டது என்பார்கள். அப்போ நீங்கள் எதற்கு இருக்கிறீர்கள்... ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங் நடக்கும்போது, அதில் கலந்துகொண்ட பழனிவேல்ராஜன் அதை ஏன் எதிர்க்காமல் வாய் மூடி மௌனியாக இருந்து ஆதரித்தார். கடந்த ஜூன் மாதம் 28, 29-ம் தேதிகளில் சண்டிகரில் நடந்த கூட்டத்தில்தான் இந்த வரி போடப்பட்டது. இம்மாதம் 18-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் சாவகாசமாக 20-ம் தேதியன்று அதைக் கண்டித்து கடிதம் எழுதுகிறார் ஸ்டாலின். ஏன் அந்த எதிர்ப்பை கடந்த மாதம் 30-ம் தேதியே ஸ்டாலின் தெரிவிக்கவில்லை.

ஏனெனில், நாட்டில் என்ன நடக்கிறது என்றே ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் ஒரு மாய உலகத்தில் இருக்கிறார். மனைவி, மகன், மருமகள் சொல்வதை மட்டும்தான் ஸ்டாலின் கேட்பார். அதைத் தவிர வேறு ஏதும் அவருக்குத் தெரியாது. தமிழ்நாட்டில், நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத ஒரு முதலமைச்சர் அவர். ஆளத் தெரியாத ஒரு முதலமைச்சரை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம்.

கருணாநிதியிடமிருந்த கொஞ்ச நிர்வாகத் திறமையாவது இவருக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால், கருணாநிதியிடம் இருந்த கொள்ளையடிக்கின்ற புத்தி மட்டும்தான் இருக்கிறது. அப்பாவுக்கு தப்பாத பிள்ளை இவர். இந்த அரசிடம் வரி உயர்வைப் பற்றிக் கேட்டால், எதற்கெடுத்தாலும் மத்திய அரசை கைகாட்டிவிடுகிறது. இவர்களுக்கு மத்திய அரசை எதிர்த்து பேசுவதற்கு தைரியம் இல்லை, தெம்பில்லை, துப்பில்லை. திமுக-வின் 39 எம்.பி-க்கள் டெல்லியிலே பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்களா... இந்த ஸ்டாலின் அரசு இன்னும் எவ்வளவு நாள் தாங்குமோ என்ற பயத்தில்... டெல்லியில் அவரவர் அவர்களைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள். வாரிசுக்கு வாய்ப்பு வழங்கியதால் மகராஷ்டிராவில் நடந்தது தமிழ்நாட்டிலும் சீக்கிரமாக வரும்... வரும்... வரும்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
தே.சிலம்பரசன்

எம்.ஜி.ஆர் மாளிகையை உண்மையாக சூறையாடியது ஓ.பி.எஸ் இல்லை, ஸ்டாலின்தான். குறிப்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர்தான். 1.5 கோடி அ.தி.மு.க தொண்டர்களும் ஓ.பி.ஸ்-ஸைப்போல பச்சோந்திகள் இல்லை, ஒரு நாளும் மறக்க மாட்டோம். அ.தி.மு.க ஆட்சி அமையும்போது உங்களையும், உங்கள் மகனையும், அறிவாலயத்தையும் பார்க்கத்தான் போகிறோம். ஓ.பி.ஸ்-ஸை வைத்து அ.தி.மு.க-வை உடைத்து, கலவரம் செய்து, அழித்துவிடலாம் என நினைக்கிறீர்கள் ஸ்டாலின் அவர்களே... ஓ.பி.எஸ் பற்றி ஒன்று சொல்கிறேன், தன்னுடைய சுயநலத்துக்காக எதையும், யாரையும் எப்போதும் பலி கொடுக்கத் தயங்க மாட்டார். முதலமைச்சர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டதுமே, சசிகலாமீது கொலைப்பழி சுமத்தியதும், விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என சொன்னதும் இதே ஓ.பி.எஸ்-தான். தனக்கு காரியம் ஆக வேண்டுமென்றால், தன்னுடன் இருப்பவர்களையே காட்டிக் கொடுக்கின்ற துரோகி அவர். ஸ்டாலின் அவர்களே... அவரை நம்பி ஏதும் செய்துவிடாதீர்கள், உங்கள் மானத்தைச் சந்தி சிரிக்க வைத்துவிடுவார்.

ஸ்டாலின் ஆட்சிக்கு வரும்போது நீட் தேர்வை அகற்றுவோம் என்றார்... செய்தாரா... நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த மாணவியின் சாவைவைத்து அரசியல் செய்தவர்கள் தி.மு.க-வினர். இன்று என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்... உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்காத வரை இந்த நீட் விவகாரத்தில் எந்த சட்டத்தைக் கொண்டு வந்தாலும் செயல்படுத்த முடியாது. ஸ்டாலினை சொல்லிக் குற்றமில்லை, அவருக்கு நீட் தேர்வு என்றாலே என்னவென்று தெரியாது. தூத்துக்குடிக்குச் சென்ற அவர், நீட் தேர்வுக்கு படிக்கும் மாணவிகளிடம் முதலாம் ஆண்டா... இரண்டாம் ஆண்டா... என்று கேட்கிறார். இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

இன்று தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையின் கவனக்குறைவும்தான் முக்கியக் காரணம். சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அப்போது நேரில் சென்று விசாரிக்கவில்லை. இந்தக் கலவரம், தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மற்றும் உடையார் சமூக மக்கள் உட்பட குறிப்பிட்ட சில சாதியினரால் உருவாக்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டு உளவுத்துறை அறிக்கை என்று பத்திரிகையில் எப்படி வந்தது... இதற்குக் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற இந்த ஓராண்டில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன. மாணவிகள் இன்று தைரியமாக பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.

ஸ்டாலினுடைய ஒரே குடும்பம்தான் இந்தத் தமிழ்நாட்டை பட்டா போட்டு சூறையாடிக்கொண்டிருக்கிறது. தி.மு.க-வின் ஒன்றியச் செயலாளர்கள், போலீஸ் ஸ்டேஷனையே குத்தகை எடுத்து வசூல் வேட்டை நடத்துகிறார்கள். அப்படியிருக்க எப்படி போதைப்பொருள்கள் ஒழியும்... சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கும்... ஸ்டாலின் அவர்களே! எங்களைக் கைதுசெய்துவிடுவோம், ரெய்டுவிடுவோம் என எங்களை அச்சுறுத்தினாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம். அதுதான் எங்களுக்கு பூஸ்ட். இந்த ஆட்சியில் குழு அமைப்பதைவிட வேறு ஒன்றுமில்லை.

சி.வி.சண்முகம் - ஓ.பி.எஸ்
சி.வி.சண்முகம் - ஓ.பி.எஸ்

32 அமைச்சர்களுக்கும் மூளையே இல்லையா... உங்களால் சுயமாக ஒரு முடிவைக்கூட எடுக்க முடியாதா... ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய சந்துரு தலைமையிலான குழு ஒன்று அமைத்தீர்கள், அப்படியானால் சட்டத்துறைச் செயலாளர் எதற்காகப் பணியில் இருக்கிறார்... சரி, சந்துரு அறிக்கையைக் கொடுத்தாரே... அது என்ன ஆச்சு... ஆன்லைன் தடைச் சட்டம் எங்கே... மக்களே, இதெல்லாம் உங்களை ஏமாற்றுவதற்காக. மக்களை பாதிக்கும் வரி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் மக்கள் சரியான நேரத்தில் உங்களுக்குப் பாடத்தைக் கற்பிப்பார்கள்" என்றார் காட்டமாக.