Published:Updated:

சென்னை: `தி.மு.க-வில் 4 மா.செ-க்கள்; அ.தி.மு.க-வில் யாருமில்லை!’ - ஆதங்கத்தில் நிர்வாகிகள்

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

அ.தி.மு.க-வில் புதிய மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை என அந்தக் கட்சியிலிருக்கும் இஸ்லாமியர்கள் தலைமைக்கு தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரட்டை தலைமையின் கீழ் கட்சியும் ஆட்சியும் நடந்துவருகிறது. வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க-வில் கூடுதல் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் பட்டியல் கட்சிக்குள் கடும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இருப்பதால் சிறுபான்மையினரின் வாக்குகள் கடந்த தேர்தல்களில் அ.திமு.க-வுக்கு கிடைக்கவில்லை. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், எம்.பி தேர்தல் ஆகியவற்றில் அ.தி.மு.க-வின் வெற்றி பல இடங்களில் கேள்விக்குறியானது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அ.தி.மு.க-வின் சிறுபான்மை பிரிவினர் பல்வேறு சிரமங்களையும் சங்கடங்களையும் சந்தித்தனர். அதுதொடர்பாக, கட்சித் தலைமைக்கும் சீனியர்களுக்கும் அ.தி.மு.க-வில் உள்ள சிறுபான்மை பிரிவிலிருக்கும் சீனியர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், சிறுபான்மை பிரிவினரின் வாக்குகளைப் பெற அ.தி.மு.க தலைமை கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ராஜ்ய சபா தேர்தலில் எம்.பி சீட்டை முகமதுஜானுக்கு கட்சித் தலைமை வழங்கியது.

இந்தநிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலில் சிறுபான்மை பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்களாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் இல்லை என்று குறிப்பிட்டு தென்மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மூத்த நிர்வாகி, தன்னுடைய ஆதங்கத்தை கட்சியின் தலைமைக்கு வெளிப்படையாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவர், `50 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்சியிலிருக்கும் எனக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. அதனால், இனிவரும் தேர்தல்களில் என் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் என்னால் எப்படி ஓட்டு கேட்க முடியும்’ என்றும் கூறியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
`திமுக, அதிமுக-வுக்கு டஃப் கொடுக்க முடியாது!’ -முருகனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் மாநில பாஜக?

இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் பட்டியலில் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையில் அவர்களின் ஓட்டுக்கள் அ.தி.மு.க-வுக்குத் தேவையில்லையா என்ற கேள்வியையும் தலைமையிடம் சிலர் கேட்டுள்ளனர். அதனால் சென்னை மாவட்ட நிர்வாகிகள் பட்டியலின்போது இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். அதனால் அ.தி.மு.க தலைமை, தீவிர ஆலோசனையில் உள்ளது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

அரை டஜன் அமைப்புச் செயலாளர், ஆளுக்கொரு தொகுதி... என்ன நடக்கிறது அ.தி.மு.க-வில்?

இதுகுறித்து அதிருப்தியிலிருக்கும் சிறுபான்மை பிரிவினர் கூறுகையில், ``தி.மு.க-வில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி சா.மு.நாசர், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நீலகிரி மாவட்டத்தில் முபராக், நெல்லை மாவட்டத்தில் அப்துல் வகாப் ஆகியோர் மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர். ஆனால், அ.தி.மு.க-வில் இஸ்லாமியர்கள் யாரும் மாவட்டச் செயலாளர் பதவியில் இல்லை. இஸ்லாமிய சமுதாய மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில், அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஓட்டுமொத்த சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் தி.மு.க-வுக்கும் கிடைக்க அ.தி.மு.க-வே வழிவகை செய்கிறது. தற்போது, பதவியிலிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சீனியர்களாக உள்ளனர். எனவே, இளைஞர்களுக்கு கட்சியில் வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். நிச்சயம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என நம்புகிறோம்" என்றனர்.

சென்னை: முன்னாள் முதல்வரின் மகளுக்கு செல்போனில் தொல்லை! - போலீஸ் ரேடாரில் 3 நம்பர்கள்
அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்
விகடன்

இதுகுறித்து அ.தி.மு.க-வின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு,``சிறுபான்மை பிரிவில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை கட்சிக்காக உழைப்பவர்களுக்கு பதவிகள் தானாகத் தேடிவரும். இது ஜெயலலிதாவின் ஸ்டைல். அதைப்போலத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளனர். அ.தி.மு.க, எப்போதும் அரவணைத்து செல்லும். இந்தக் கட்சி ஆலமரம் போன்றது. தலைமைக்கு வந்துள்ள தொண்டர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு