Published:Updated:

``நேற்று வந்தவன் எங்களை முண்டியடிக்கக் கூடாது!"- எதிரணியினருக்கு பாட்டிலே பதிலடி கொடுத்த அமைச்சர்

ஆவடியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம்
ஆவடியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம்

ஆவடியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க அமைச்சர் மாஃபா என்கிற பாண்டியராஜனிடம் மேடையிலேயே அ.தி.மு.க பிரமுகர் சுல்தான் தகராறு செய்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஆவடியில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீமின் ஆதரவாளரான மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சுல்தான் பேசுகையில், ``எம்.ஜி.ஆரைப் போல முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பள்ளிக் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்துவருகிறார். 70 வயதாகும் நடிகர் ஒருவருக்கு கிட்னி மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் ரஜினி சென்றால் மாற்றப்பட்ட கிட்னி பஞ்சராகிவிடும். இன்னொரு நடிகரான கமல்ஹாசன் பரமக்குடிக் கலவரம் நடந்தபோது ஒரு அனுதாபம்கூட கூறவில்லை.

ஜெயலலிதாவுடன் அமைச்சர் மாஃபா
ஜெயலலிதாவுடன் அமைச்சர் மாஃபா

இன்னொரு நடிகர், வருமானவரித்துறையில் மாட்டியிருக்கிறார். கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர முடியாது. அ.தி.மு.க ஆட்சியில்தான் ஆவடி மாநகராட்சியானது. மேயர் தேர்தலில் யாருக்கு சீட் கிடைக்கிறதோ என்று தெரியவில்லை. 48 உறுப்பினர்களில் 40 பேராவது ஜெயிப்போம். தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்குக் கட்டுப்படுவோம். கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் இன்று நடுரோட்டில் நிற்கிறோம். மேடையில் ஏறும்போதே அப்துல் ரஹீம், எதுவும் பேசக்கூடாது என்று கூறினார். பொது காரியம் செய்ய முடியவில்லை. முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் பல மாற்றங்கள் கட்டாயமாக இருக்கின்றன. நேற்று வந்தவன், எங்களை முண்டியடித்து அடித்துக்கொண்டு வரக்கூடாது. அது எவனாக இருந்தாலும் விடமாட்டேன். எங்கிருந்தோ வந்தவரை ஜெயலலிதாவுக்காக வெற்றி பெற வைத்தோம்'' என்று பேசி முடித்தார்.

சுல்தானின் பேச்சைக் கேட்ட அமைச்சர் தரப்பினர் அதிருப்தியடைந்தனர். சுல்தானின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன், `அச்சம் என்பது மடமையாடா' பாடல் மூலம் எதிரணியினருக்கு பதிலடி கொடுத்தார். மேலும், மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் பாண்டியராஜனிடம் அவரின் எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் தகராறில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அமைச்சர் தரப்பினர் நம்மிடம் கூறுகையில், ``கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கூட்டத்திலும் அமைச்சர் தரப்பினருக்கும் அவரின் எதிரணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அமைச்சர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் சரமாரியாகத் தாக்கப்பட்டார். அதன்தொடர்ச்சியாகத்தான் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் எதிரொலித்தது. இதுகுறித்து கட்சித் தலைமையிடம் புகாரளிக்க உள்ளோம்'' என்றனர்.

அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், ``கடந்த 22-ம் தேதி நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த தென்றல் மகி என்பவர் தாக்கப்பட்டார். என்னைப் பொறுத்தவரை அனைவரும் அ.தி.மு.க.வினர்தான். ஆவடியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டத்தின்போது சுல்தான் என்பவர் தன்னுடைய மனக்குமுறல்களைக் கூறினார். மேடையில் இருந்த என்னிடமும் சில கருத்துக்களை அவர் தெரிவித்தார். 67 வாக்குறுதிகளில் பட்டாபிராம் டைட்ல் பார்க், அம்மா மண்டபம், பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா உள்பட 40 வாக்குறுதிவாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன். மீதமுள்ள வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றிவிடுவேன். அ.தி.மு.க.விலிருந்து நான் விலகி வேறு கட்சியில் சேரப்போவதாக சிலர் வதந்திகளை பரப்பிவருகின்றனர். நான், அ.தி.மு.க.வில்தான் இருப்பேன் என்பதை உறுதியாக நேற்று நடந்த மீட்டிங்கில் சொல்லிவிட்டேன்'' என்றார்.

அமைச்சர் பாண்டியராஜன்
அமைச்சர் பாண்டியராஜன்

திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.கவினரிடம் கேட்டதற்கு, ``வெளி மாவட்டத்திலிருந்து ஆவடியில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற மாஃபா க.பாண்டியராஜனுக்கு எதிராக கோஷ்டி அரசியல் இந்த மாவட்டத்தில் இருந்துவருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பல கோஷ்டிகளாக அ.தி.மு.கவினர் உள்ளனர். ஆனால், அவர்களுக்கெல்லாம் பொது எதிரியாக அமைச்சர் பாண்டியராஜன் இருக்கிறார். இதுதொடர்பாக உளவுத்துறையும் ரிப்போர்ட் அளித்துள்ளது. விரைவில் கோஷ்டி பூசல் அரசியலுக்கு கட்சித் தலைமை முடிவெடுக்கவில்லை என்றால் திருவள்ளூரில் அ.தி.மு.கவின் வளர்ச்சி பாதிக்கப்படும்'' என்றனர்.

இதுகுறித்து சுல்தானிடம் பேசினோம். ``அமைச்சர் பாண்டியராஜனின் ஆதரவாளராக இருக்கும் ஒருவர் தி.மு.கவிலிருந்து அ.தி.மு.கவுக்கு வந்தவர். அவர் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுவருகிறார். அவரைத்தான் நேற்று வந்தவன் என்று குறிப்பிட்டேன். அதுதொடர்பாக அமைச்சர் பாண்டியராஜனிடம் விளக்கம் கேட்டேன். உள்கட்சி பூசல் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கவுள்ளோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு