அரசியல்
Published:Updated:

“வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது மத்திய அரசு!”

பொன்னையன்
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்னையன்

- போட்டுத்தாக்கும் பொன்னையன்

ரொம்பவே உஷாராக இருக்கிறார் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன். கேள்விகளை எதிர்கொள்வதில் அல்ல... கொரோனா தடுப்பு நடவடிக்கையில். பேட்டிக்காக சென்னை அண்ணா சாலையிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்றால், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சானிடைஸர் தெளிக்கப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது நமக்கு. அறையில் காத்திருந்த நம்மிடம், ‘மாஸ்க் போட்டுருக்கீங்கதானே?’ என்று கேட்டபடியே என்ட்ரி கொடுத்தார் பொன்னையன். இனி பேட்டி...

“கட்சி இணைப்பு குறித்து பன்னீரையும் எடப்பாடியையும் சந்திக்கவிருப்பதாக சசிகலா கூறியிருக்கிறாரே..?”

“(சிறு யோசனைக்குப் பின்னர்...) தீவிர தி.மு.க எதிர்ப்பைக் கடைப்பிடிக்கும் இ.பி.எஸ்-ஸும், கோபாலபுர வாரிசுகளுடன் நெருக்கமாகிப் போன ஓ.பி.எஸ்-ஸும் கொள்கைரீதியாக வடக்கு, தெற்காக மாறிவிட்டார்கள். இரு துருவங்களை யாராலும் சேர்க்க முடியாது. சசிகலா அம்மையாரின் கூற்றை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.”

“மூத்த தலைவரான உங்களுக்கு, கட்சி இப்படி நான்கு துண்டுகளாக உடைந்துகிடப்பது வருத்தமாக இல்லையா?”

“என்னைப் பொறுத்தவரை கட்சி உடையவே இல்லை. 94.5% நிர்வாகிகளுடன், இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க அதே வலிமையோடுதான் இருக்கிறது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட சில கும்பல்கள் பிரிந்து செயல்படுவதால் எந்த பாதிப்பும் இல்லை.”

“ஆனால், ரிமோட் வாக்குப்பதிவு குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஸிடம்தானே கருத்து கேட்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்?”

“தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்திய தேர்தல் ஆணையத்திலும் குளறுபடிகள் நடப்பதைத்தான் இது காட்டுகிறது. அ.தி.மு.க-வை, கட்சியின் சட்ட திட்டங்கள்தான் வழிநடத்துகின்றன. அதன்படி, எடப்பாடிதான் அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமைக்குச் சொந்தக்காரர்.”

“ `தனக்கு மட்டுமே அ.தி.மு.க சொந்தம் என்பதுபோல, எடப்பாடி சர்வதிகாரியாகச் செயல்படுகிறார்’ என்பதுதானே எதிர்த்தரப்பின் குற்றச்சாட்டே?”

“எங்களை பலவீனப்படுத்த, எதிரிகள் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லிக்கொண்டே யிருப்பார்கள். உண்மையில் என்னைப் போன்ற சீனியர்கள் மட்டுமல்ல, அனைத்துப் பொறுப்பாளர்களிடமும் கருத்து கேட்டு, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகுதான் எடப்பாடி எந்த முடிவையும் எடுப்பார்.”

“ஆட்சியில் இருந்தபோது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை எதிர்த்துவிட்டு, இப்போது ஆதரிப்பதுதான் ஆழ்ந்த சிந்தனையா?”

“இது ஒன்றும் மீறக் கூடாத கொள்கையில்லை. சூழலுக்கு ஏற்ப நிலைப்பாட்டை மாற்றலாம். அதேநேரத்தில், `ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தில் நடைமுறைச் சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. கருத்து என்பது வேறு, சாத்தியக்கூறுகள் என்பது வேறு.”

“ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது, இரட்டை இலைச் சின்னம் முடங்கும் என்கிறார்களே?”

“கடந்தகாலங்கள் என்பது வேறு. தற்போதைய நிலை என்பது வேறு. சட்டரீதியாக இரட்டை இலையை முடக்கவே முடியாது.”

“வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது மத்திய அரசு!”

“சட்டமன்றத்திலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அரசியலமைப்பின்படி ஒரு குறுகிய எல்லைக்குள் பணியாற்றும் அதிகாரம்தான் ஆளுநருக்கு இருக்கிறது. அதன்படி, மாநில அரசு கொடுக்கும் உரையில் இருப்பதை நீக்குவதோ, புதிதாகச் சேர்ப்பதோ மரபு கிடையாது. அப்படி மரபை மீறும் ஆளுநரின் செயல் ஏற்புடையது இல்லை. ஓர் ஆளுநர் தனது சொந்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்த நினைப்பது அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அதேநேரத்தில், ஆளுநருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை அரசு கொடுத்திருக்க வேண்டும்.”

“எப்படி... ஜெயலலிதா ஆட்சியின்போது அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டிக்குக் கொடுக்கப்பட்ட மரியாதைபோலவா?”

“சென்னா ரெட்டியையும், தற்போதைய ஆளுநரையும் ஒப்பீடு செய்ய முடியாது. தனிப்பட்ட முறையில் சென்னா ரெட்டியின் செயல்பாடு ஏற்புடையது இல்லை. ஆனால், ஆர்.என்.ரவியின் செயல்பாடு சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இருக்கிறது.”

“ ‘இந்தியா என்பது மதச்சார்ப்பற்ற நாடு இல்லை’ என்று பேசுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கருத்து இல்லையா?”

“தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் சிலவற்றைப் பேசிவருகிறார் ஆளுநர் என்ற வலுவான குற்றச்சாட்டை நான் மறுக்கவில்லை.”

“ `நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்றாலும், பல இடங்களில் பா.ஜ.க வெல்லும்’ என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கூறுகிறார்களே..?”

“ஆசை வேறு... சாத்தியக்கூறு வேறு. தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுகிறது பா.ஜ.க. காவிரிநீர்ப் பங்கீடு, நீட் தேர்வுக்கு விலக்கு, ஏழு தமிழர்கள் விடுதலை போன்றவற்றில் தமிழ்நாட்டுக்கு எதிரான கொள்கையோடு பா.ஜ.க செயல்பட்டதாக / படுவதாக மக்கள் எண்ணுகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சம்ஸ்கிருதம்தான் ஆள வேண்டும் என்ற வெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் மத்திய அரசு இருக்கிறது. தமிழ் என்றாலே வெறுக்கிறார்கள். இந்த வெறித்தனங்களிலிருந்து பா.ஜ.க மாற வேண்டும். கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், அவர்களால் தமிழ்நாட்டில் ஒருபோதும் வேரூன்ற முடியாது.”

“இவ்வளவு முரண்பாடுகளோடு ஏன் கூட்டணி அமைத்தீர்கள்?”

“கொள்கை வேறு... கூட்டணி வேறு. நாங்கள் கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். பா.ஜ.க தனது கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் நிற்கும் தொகுதியில் அவர்களுக்கு ஓட்டு கிடைக்காது. இது ஒரு முக்கியமான பிரச்னை. சிறுபான்மையின, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான் எங்கள் கொள்கை. பா.ஜ.க இதில் மாறுபட்டிருப்பதை நாங்கள் அணு அளவும் ஏற்றுக்கொண்டதில்லை. திருந்துவார்கள் என்று எண்ணுகிறோம்.”

“அப்படியென்றால் கூட்டணி?”

“அதைப் பொறுத்திருந்து பாருங்கள்!”