Published:Updated:

“ஆன்மிக அரசியல் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது!” - பொன்னையன் ‘பொளேர்’

பொன்னையன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்னையன்

படம்: என்.கார்த்தி

“ஆன்மிக அரசியல் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது!” - பொன்னையன் ‘பொளேர்’

படம்: என்.கார்த்தி

Published:Updated:
பொன்னையன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்னையன்
ரஜினியின் கட்சி தொடங்கும் அறிவிப்பு, பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம், சசிகலா விடுதலை பரபரப்பு... இவை குறித்தெல்லாம் அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் பொன்னையனைச் சந்தித்துப் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘அமித் ஷாவின் வருகைக்கு முன்தினம் நடந்த அ.தி.மு.க-வின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று தகவல் வந்ததே..?’’

‘‘பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்துப் பேசவில்லை. அதே சமயத்தில், கூட்டணி குறித்து இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தன்னிச்சையாக அறிவித்தார்கள் என்பதும் தவறானது. கூட்டணி என்பது, ஒரு நாளில் பேசி எடுக்க வேண்டிய முடிவு அல்ல. தொடர் பேச்சுவார்த்தை, ஆய்வு என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அது.’’

‘‘மத்திய அரசுக்கு எதிராக நீங்கள் தொடர்ந்து கருத்துகளைச் சொல்லிவந்தீர்கள். இந்தக் கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு அவையெல்லாம் சரியாகிவிட்டனவா... இல்லை, இன்னும் தொடர்கிறதா?’’

‘‘பா.ஜ.க-வின் திட்டங்களை ஆட்சி எந்திரங்கள் மூலம் நடைமுறைப்படுத்தும்போது, தமிழக மக்களின் நலனுக்கு மாறாக இருந்தால், அதைச் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. கடந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போதும் நடைமுறைச் செயல்பாடுகளைக் கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்திருக்கின்றன. ஜனநாயக அரசியலில் இது இயல்பாக இருக்கக்கூடியது.’’

‘‘ `அ.தி.மு.க அரசு சிறப்பாகச் செயல்படுகிறது’ என்கிறார் அமித் ஷா. ஆனால், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லையே..?’’

‘‘அ.தி.மு.க அரசைப் பாராட்டும் நிலைப்பாட்டைக் கருத்தில்கொண்டால், கூட்டணியை ஏற்கிறார்கள் என்றுதானே பொருள். ‘கூட்டணியோடு இருப்போம்’ என்று மாநில பா.ஜ.க-வினர் பல சமயங்களில் சொல்லித்தான்வருகிறார்கள்.’’

‘‘கடந்த முறை தமிழகத்துக்கு அமித் ஷா வந்தபோது, ‘ஊழல் ஆட்சி’ என்று அ.தி.மு.க அரசை விமர்சனம் செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் மாற்றம்?’’

‘‘அமித் ஷாவுக்குத் தரப்பட்ட, கிடைத்த அரைகுறைத் தகவல்களைவைத்து அப்படி ஒரு காலத்தில் கூறியிருக்கலாம். ஆழ்ந்தும் துல்லியமாகவும் ஆராய்கிறபோது உண்மை அவருக்குத் தெரிகிறது. அதனால், தற்போது பாராட்டுகிறார்.’’

‘‘பா.ஜ.க-வினர் 60 சீட்டுகள் வரை கேட்கிறார்கள் என்ற தகவல்கள் வருகின்றன. அப்படித் தருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?”

‘‘அப்படிப்பட்ட பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறவில்லை. யாருக்கு எந்த அளவுக்குக் கொடுப்போம் என்று இன்னும் பேசப்படவில்லை. அவரவர்களுக்கு எந்தத் தொகுதியில், என்ன செல்வாக்கு இருக்கிறது என்ற கள ஆய்வின் அடிப்படையில் நாங்கள் கொடுப்போம்; கேட்பவர்களும் அப்படித்தான் கேட்பார்கள்.’’

‘‘வேல் யாத்திரை மூலம் பா.ஜ.க-வும், 20 சதவிகித இட ஒதுக்கீட்டு கோரிக்கை மூலம் பா.ம.க-வும் அ.தி.மு.க அரசை அச்சுறுத்துகிறார்களா?’’

‘‘இவையெல்லாம் அ.தி.மு.க-வை எப்படி அச்சுறுத்தும்?’’

`` ‘எல்.முருகனை ஒரு மாதிரியும், உதயநிதியை ஒரு மாதிரியும் பாரபட்சத்தோடு அ.தி.மு.க அரசு கையாள்கிறது’ என்று தி.மு.க குற்றம்சாட்டுகிறதே?’’

‘‘மிகவும் தவறு. ‘கொரோனா விதிமுறைகளை மீறுங்கள்; சமூக இடைவெளியை விட்டுவிடுங்கள்; முகக்கவசத்தை அணியாதீர்கள்; ஒன்றிணைவோம்... ஒன்றிணைவோம்’ என்று கட்டிப்பிடித்துக்கொண்டு நடப்பதைப்போல உதயநிதியின் நிகழ்ச்சிகள் இருந்ததை நாடே அறியும். விதிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டத்தைக் காலில் போட்டு மிதிப்பதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.’’

பொன்னையன்
பொன்னையன்

‘‘சசிகலா சிறையிலிருந்து விரைவில் விடுதலையாகவிருக்கிறாராமே..?”

‘‘அதைப் பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை.’’

‘‘அவர் விடுதலையாகி வந்த பின்னர், அ.தி.மு.க-வில் யாரும் சென்று சந்திக்க மாட்டார்களா?’’

‘‘யாரும் அவரவர் எதிர்காலத்தைக் கெடுத்துக்கொள்ள மாட்டார்கள்.’’

‘‘சசிகலாதான் பலருக்கும் எதிர்காலத்தை அமைத்துக்கொடுத்தார் என்று சொல்லப்படுகிறதே!’’

‘‘ஜெயலலிதா என்ற ஆலமரத்தின் கீழ் அவர்கள் வாழ்ந்தார்கள். மற்றவர்களை வாழவைப்பதைப்போலச் சூழலை உருவாக்கினார்கள். அ.தி.மு.க-வுக்குக் களங்கம் ஏற்படக் காரணமாகியிருக்கிறார்களே தவிர, அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் அம்மா மட்டும்தான் காரணம்.’’

‘‘கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘யார் எந்தப் புதிய கட்சியை ஆரம்பித்தாலும், இருக்கிற கட்சிகள் எதுவாக இருந்தாலும், இரட்டை இலையை நேசிக்கும் மக்கள் அதிகப்படியாகத் தமிழகத்தில் இருக்கும் காரணத்தால், அ.தி.மு.க-வை யாராலும் அசைக்க முடியாது. மக்களுக்குச் சேவையாற்ற, தொடர்ந்து எங்கள் ஆட்சி மலரும். விளம்பரம் மூலம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு அரசியல் நடத்தும் யாராக இருந்தாலும், முதல்வர் எடப்பாடியரின் தூய்மை நிறைந்த பொதுவாழ்வுத் தொண்டால் அவர்கள் செயலிழக்கச் செய்யப்படுவார்கள்.’’

‘‘ஆன்மிக அரசியல் என்று சொல்கிறாரே ரஜினிகாந்த்?’’

‘‘ஆன்மிகத்தையும் அரசியலையும் இணைத்துச் செயல்படுவது பல்வேறு நம்பிக்கைகளையுடைய மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவிகரமாக இருக்காது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism