Election bannerElection banner
Published:Updated:

பூம்புகார் அதிமுக வேட்பாளரைப் புறக்கணிக்கக் கோரும் அதிமுக மாவட்ட மன்றச் செயலாளர்

விஜயபாலன்
விஜயபாலன்

பூம்புகாரில் அ.தி.மு.க. வேட்பாளர் பவுன்ராஜைப் புறக்கணிக்க வேண்டும் என அ.தி.மு.க மாவட்ட மன்றச் செயலாளர் விஜயபாலன் பேசியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூம்புகாரில் அ.தி.மு.க வேட்பாளர் பவுன்ராஜைப் புறக்கணிக்க வேண்டும் என அ.தி.மு.க மாவட்ட மன்றச் செயலாளர் கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது பூம்புகார் தொகுதியில் கிராமம்தோறும் சைக்கிளில் சென்று கிளைகள் அமைத்து கட்சியைக் கட்டமைத்தவர் விஜயபாலன். எம்.ஜி.ஆர் காலத்தில் தொடர்ந்து இரண்டு முறை பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர். தற்போது மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவர் பதவியிலிருந்த விஜயபாலனுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் என்ற 'டம்மி'பதவி  அளித்துள்ளனர். அவரைப் பேட்டிக்காக அணுகியபோது, முதலில் மறுத்தவர் பிறகு ``உண்மைகளைச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. கேள்விகளைக் கேளுங்கள்" என்றார்.

 அதிமுக வேட்பாளர்  பவுன்ராஜ்
அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ்

``தி.மு.க-வில் இருந்த பவுன்ராஜை அ.தி.மு.க-வில் சேர்த்ததே நீங்கள்தானாமே?’’

``பவுன்ராஜின் மொத்தக் குடும்பமும் தி.மு.க ஆதரவாளர்கள். பவுன்ராஜை எங்கள் கட்சியைச் சேர்ந்த இலுப்பூர் முத்துகிருஷ்ணன், லோகநாதன் ஆகியோர் என்னிடம் அழைத்து வந்தனர். அப்போது அமைச்சராக இருந்த வெள்ளூர் வீராசாமி முன்னிலையில் 1984 -ல் பவுன்ராஜைக் கட்சியில் சேர்த்தேன். பிறகு1989-ல் தி.மு.க-வைச் சேர்ந்த சித்திக் எம்.எல்.ஏ-வானவுடன் பவுன்ராஜ்  தி.மு.க-வுக்கு மாறிவிட்டார். அதன் பிறகு 1991-ல் பூராச்சாமி நம் தொகுதியின் வேட்பாளராக இருந்தபோது மீண்டும்  சேர வருகிறார். கழக முன்னோடிகள் அனைவரும் அவரைச் சேர்க்கக் கூடாது என்று வற்புறுத்தியும்கூட அதையும் மீறி நான்தான் கட்சியில் சேர்த்தேன். 1996 - ல் அ.தி.மு.க தோல்வியடைந்தவுடன் மீண்டும் தி.மு.க-வில்  சேருவதற்கு முயற்சி எடுத்தார். ஆனால் அவர்கள் சேர்த்துக்கொள்ளவில்லை."

``மாவட்டச் செயலாளர், மூன்றாம் முறையாக வேட்பாளர் என்ற பவுன்ராஜின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?"

``பதவிக்கு வந்த பிறகு, தான் ஏதோ பரம்பரை ஜமீன்போலவும், தனக்குத் தனிச் செல்வாக்கு இருப்பதுபோலவும் எண்ணிக்கொண்டு கழக முன்னோடிகளை அவமானப்படுத்துவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  தொண்டர்களையும் மதிப்பதில்லை. அரசுப் பணிகள் பெற அவரை நாடி வந்தால் ஏழையாக இருந்தாலும், கழகத் தொண்டனாக இருந்தாலும் பல லட்சங்களை பெற்றுக்கொண்டுதான் வேலை வாங்கித் தருகிறார். அரசு ஒப்பந்தப் பணிகள் அனைத்தையும் மனைவி, மகன், தம்பி, தம்பி மனைவி எனக் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் ஒப்பந்தம் எடுத்து, கடந்த 10 ஆண்டுகளில் கனமாகச் சம்பாதித்துவிட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள்."

விஜயபாலன்
விஜயபாலன்

``கழக முன்னோடிகளை பவுன்ராஜ் அவமானப்படுத்துகிறார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?"

``திருக்கடையூரில் நடந்த கழக நிகழ்ச்சியொன்றில் முன்னாள் எம்.எல்.ஏ பூராச்சாமியைக் கடுமையாகத் திட்டி தாக்க முயன்றார். அதேபோல் செம்பனார்கோயிலில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சியில் மேடையிலேயே முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதனை அசிங்கமாகத் திட்டி அடிக்க முயன்றார். மேடையில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.'

``பவுன்ராஜ் மாவட்டச் செயலாளரானதில் கட்சிக்கு என்ன பிரச்னை வந்துவிடப்போகிறது?"

`` மூன்று முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், ஐந்து ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்களின் பரிபூரண ஆதரவுடன்தான் செந்தில்நாதன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதும் ஒதுங்கியிருந்த பலரும் செந்தில்நாதன் தலைமையை ஏற்றுக்கொண்டு வேகமாகச் செயல்பட்டார்கள். கட்சிக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அந்தப் பதவியை குறுக்குவழியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மூலம் கோடிகளில் பணத்தைச் செலவு செய்து பெற்று சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறார் பவுன்ராஜ்.’’

விஜயபாலன்
விஜயபாலன்

``இந்தத் தேர்தலில் மயிலாடுதுறையில் அதிமுக-வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?"

``கட்சியினரை ஏக வசனத்தில் திட்டுவது, தொகுதி வளர்ச்சிப் பணிகளில் அக்கறை காட்டாதது போன்ற காரணங்களால்  அவர்மீது அனைத்துத் தரப்பு மக்களும், கழகத் தொண்டர்களும் மிகப்பெரிய வெறுப்பில் இருக்கிறார்கள். அவர் மீண்டும் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் பவுன்ராஜ் செயல்பாடுகளால் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளிலும் கட்சி  வலுவிழந்து கிடக்கிறது. மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க-வுக்கு வெற்றி என்பது கேள்விக்குறியே!" என்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு