Published:Updated:

அதிமுக அலுவலகத்தில் அதகள மோதல் ஆரம்பம்?! - திடீர் விசிட் வருவாரா சசிகலா?

அதிமுக செயற்குழுவில் பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
News
அதிமுக செயற்குழுவில் பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

சசிகலா ஒரிரு நாள்களில், பொதுச்செயலாளர் என்கிற பேனரில் அ.தி.மு.க கட்சி அலுவவலகத்துக்கு முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென வருகை தருவார் என்பது அவரின் ஆதரவாளர்கள் சொல்லும் செய்தி.

டிசம்பர் மாதம் பிறந்ததுமே, அதிமுக உட்கட்சித் தேர்தல் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா என்கிற பட்டிமன்றம் நடந்துகொண்டிருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, டிசம்பர் 1-ம் தேதியன்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமைக் கழகத்தில் செயற்குழுக் கூட்டம் கூடியது. இரட்டைத் தலைமைதான் என்று முடிவு செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, டிசம்பர் 7-ம் தேதியன்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான தேதி குறிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கழக அமைப்புத் தேர்தல்களுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக, கிளைக்கழகம் முதல் மாநகராட்சி வட்டக்கழக நிர்வாகிகள் வரையிலான பதவிகளுக்கான தேர்தல் 13.12.21 முதல் 23.12.21 வரை நடக்கவும் அறிவிப்பு வெளியாகியது.

அதிமுக செயற்குழு
அதிமுக செயற்குழு

கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் படலம் டிசம்பர் 3-ம் தேதி ஆரம்பமானது. அதிமுக தொண்டர்கூட போட்டியிடலாம் என்பது விதி. ஆனால், ஆரம்பமே அடிதடியில் தொடங்கியிருக்கிறது. சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ஓமப்பொடி பிரசாத் சிங் என்கிற பிரமுகர் தன் கையில் கத்தையாக போட்டோ மற்றும் ஆவணங்களுடன் தலைமைக்கழக அலுவலகத்துக்கு வந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`இந்த இரண்டு நாள்களில் புதிதாக யாராவது வந்தால், விடாதீர்கள். கட்சியின் விரோத சக்திகள் புதிய ஆட்களை அனுப்பி ஏதாவது கலாட்டா செய்வார்கள். இதைவைத்து நீதிமன்றத்தில் மொத்த தேர்தலும் நடக்க தடை கோருவார்கள். கவனமாக இருங்கள்’ என்று எடப்பாடி தரப்பினர் தனது கட்சி நிர்வாகிகளிடம் சொல்லியிருந்தனர். சென்னையின் பல பகுதிகளிலிருந்து கட்சியின் முக்கியஸ்தர்கள் தலைமைக்கழகம் முன்பு கூடி நின்றனர். அப்போதுதான் பிரசாத் சிங் என்பவர் உள்ளே வரப் பார்க்க. அவரிடமிருந்த ஆவணங்களை வாங்கிப் பார்த்து தடுத்து நிறுத்தினர். அங்கே தள்ளு முள்ளு ஏற்பட்டு, பிரசாத் சிங்கிடம் போதிய ஆவணங்கள் இல்லை என்று சொல்லித் திருப்பி அனுப்பினர்.

பிரசாத் சிங், அவராக வந்தாரா அல்லது அவரைப் பின்னாலிருந்து யாராவது இயக்குகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், அவர் கட்சிக்காரர்தான். கட்சிக்கான பிரசார விஷயங்களில் ஆர்வம் காட்டுவார் என்கிறது நடுநிலையான அதிமுக வட்டாரம்.

அதிமுக தலைமைக் கழகம்
அதிமுக தலைமைக் கழகம்

அவசரம் அவசரமாகத் தேர்தலை நடத்துகிறார்கள். தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய எந்த ஒரு தொண்டரையும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். சர்வாதிகாரத்துடன் நடந்துகொள்ளும் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வத்தை சும்மா விட மாட்டோம். அவர்களைப் போட்டியின்றி தேர்தெடுக்க முடிவு செய்து, இப்படி அடாவடியில் இறங்கியிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்கிறார்கள் பிரசாத் சிங்கின் ஆதரவாளர்கள்.

செயற்குழு கூடிய அதே நாளில் டெல்லி தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்குப்போன பெங்களூரு புகழேந்தி, ``அதிமுக-வின் விதிகளைத் திருத்தியது சட்டத்து முரணானது” என்று தேர்தல் கமிஷனிடம் புகார் மனு அளித்ததாக மீடியாக்களிடம் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகளைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார் சசிகலா. டிசம்பர் 2-ம் தேதியன்று சசிகலா விடுத்துள்ள அறிக்கையில், ``அண்மைக்காலமாக எந்தவிதக் காரணமும் இல்லாமல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உதாசீனப்படுத்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், தாங்களாக ஒதுங்கிக்கொண்டு செயல்படாமல் இருப்பவர்கள் அனைவரும் கவலைப்படாமல் சிறிது காலம் பொறுத்திருங்கள். உங்கள் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். விரைவில் அதிமுக-வின் நிலை மாறும். தலை நிமிரும். இது உறுதி. உண்மைகளும் நியாயங்களும் என்றைக்கும் தோற்றதாக சரித்திரம் இல்லை. எத்தனை இடர்ப்பாடுகள், சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து என் உயிர்மூச்சு உள்ளவரை நம் இயக்கத்தைக் காத்து தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை நான் உழைத்துக்கொண்டேயிருப்பேன். ஒய்ந்துவிட மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

டிசம்பர் 3-ம் தேதியன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலை ரத்துசெய்யக் கோரி கே.சி.பழனிச்சாமி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். உறுப்பினர்களை முறைப்படுத்தவில்லை, உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பது கே.சி.பழனிச்சாமியின் கோரிக்கை.

அதிமுக
அதிமுக

ஆக, களேபேரங்கள் ஆங்காங்கே கிளம்பிவிட்டன. ஒருவேளை, கட்சியின் அமைப்பு தேர்தல் திட்டமிட்டபடி நடந்து முடிந்தால், கட்சியின் கீழ்மட்டம் முதல் தலைமைக் கழக நிர்வாகிகள் வரையிலான பதவிகளுக்கான நியமனங்கள் நடக்கும். கட்சியின் முக்கியப் பதவியில் இருப்பவர்கள் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை வைத்திருக்கிறார்கள். ஒரே பதவிதான் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வத்திடமிருக்கும் பொருளாளர் பதவி வைத்திலிங்கத்துக்குப் போகலாம் என்கிறார்கள். தலைமை நிலையச் செயலாளராக கே.பி.முனுசாமியின் பெயர் அடிபடுகிறது. அமைப்புச் செயலாளர்களாக தற்போதுள்ளவர்களால் டிராஃபிக் ஜாமே ஏற்படுகிறதாம். அதனால், அவர்களில் பாதிப்பேரைக் குறைத்து 30 பேர் மட்டுமே இருக்கும்படியாக செய்யப்போகிறார்களாம். ஏற்கெனவே அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவில் 11 பேர் இருந்தார்கள். அவர்களில், மாணிக்கம் என்பவர் பா.ஜ.க-வுக்குச் சென்றுவிட்டார். மீதி இருப்பவர்கள் 10 பேர்கள். இவர்களுடன் கூடுதலாக எட்டுப் பேரை புதிதாகச் சேர்த்து அந்தக் குழுவை வலுப்படுத்த பேசிக்கொண்டிருக்கிறார்கள. ஏற்கெனவே இருக்கும் குழுவிலுள்ள திண்டுக்கல் சீனிவாசனைக் கழற்றிவிட்டு, அவருக்கு பதில் செல்லூர் ராஜூவை நியமிக்கப்படலாம் என்கிறார்கள். இவர்களைத் தவிர, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தம்பித்துரை, தனபால், கே.பி.அன்பழகன், இசக்கி சுப்பையா, சிவபதி ஆகியோருக்கு வாய்ப்புகள் வரலாமாம். இந்த வழிகாட்டுதல் குழுவின் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்படுவார் என்கிற தகவலும் பரபரக்கிறது.

சசிகலா ஒரிரு நாள்களில், பொதுச்செயலாளர் என்கிற பேனரில் அ.தி.மு.க கட்சி அலுவவலகத்துக்கு முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென வருகை தருவார் என்பது அவரின் ஆதரவாளர்கள் சொல்லும் செய்தி. `அப்படி வந்தால், தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புங்கள்’ என்பது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் உத்தரவு. தலைமைக்கழக வாசலில் இரண்டு கோஷ்டியினரின் ஆதரவாளர்கள் குவிந்துகிடக்கிறார்களாம்.

தமிழக அரசியல் களத்தில் உள்ள அனைவரின் கண்களும் அ.தி.மு.க அலுவலகத்தை நோக்கித் திரும்பியிருக்கின்றன. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

ஓ. பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி
ஓ. பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையே, செயற்குழுக் கூட்டத்தைவிட்டு எடப்பாடி ஏன் அவசரமாகக் கிளம்பிப்போனார் என்ற கேள்வியும் தலைமைக் கழகத்தை வட்டமடிக்கிறதாம். இது தொடர்பாக விசாரித்தபோது, ``புதன்கிழமையன்று பகல் 12 மணிக்கு ராகுகாலம் ஆரம்பிக்கும். அந்த நேரத்துக்கு முன்பே, தலைமைக் கழகத்திலிருந்து புறப்பட வேண்டும் என்று அருகில் இருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தாராம் எடப்பாடி பழனி்சாமி. அதன்படியே, செயற்குழுக் கூட்டம் முடிந்ததும், விடுவிடுவென வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டாராம். அவர் போன வேகத்தைப் பார்த்த மற்றவர்கள் ஏதோ கோபித்துக்கொண்டு போவதாக நினைத்திருக்கிறார்கள். அடுத்து,ஓ.பன்னீர்செல்வத்திடம் ராகுகால சப்ஜெக்ட் ஞாபகப்படுத்தப்பட்டதாம். அதனால், அவர் அங்கிருக்கும் அறையில் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தாராம். அதைப் பார்த்த தங்கமணி, வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோருடன் போய் அமர்ந்து பொது விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தாராம். ராகுகாலம் முடிந்ததும்,ஓ.பன்னீர்செல்வம் அவரின் வீட்டுக்குக் கிளம்பியிருக்கிறார். மற்ற மூவரும் நேராக எடப்பாடி வீட்டுக்குப் போய் அங்கே ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம்” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.