Published:Updated:

ஈரோடு: ஜெ., நினைவு தின போஸ்டர்; கிழித்தெறியச் சொன்னாரா அதிமுக எம்.எல்.ஏ?! - உச்சத்தில் கோஷ்டி பூசல்

கிழித்தெறியப்பட்ட ஜெயலலிதா நினைவஞ்சலி போஸ்டர்
கிழித்தெறியப்பட்ட ஜெயலலிதா நினைவஞ்சலி போஸ்டர்

`அ.தி.மு.க-வில் தனக்கு எதிராக அரசியல் செய்யுறவன், அம்மாவோட போட்டோவை ஒட்டுனாக்கூட, அதைக் கிழிச்சியெறிவேன்னு நடந்துக்கிறதெல்லாம் நாகரிகமான அரசியல் இல்லை’ என எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்துக்குக் கட்சிக்குள்ளிருந்தே எதிர்ப்பு குரல் எழுந்திருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவுதினத்தை, தமிழகம் முழுக்க அ.தி.மு.க-வினர் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தி, அமைதியாக அனுசரித்தனர். ஆனால், ஈரோடு மாவட்டம் பெருந்துறைத் தொகுதியில் ஜெயலலிதாவின் நினைவுநாளில்கூட, உட்கட்சிப் பூசல் உக்கிரமாக வெடித்திருக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்...

பெருந்துறையில் ஒட்டப்பட்ட ஜெ., நினைவஞ்சலி போஸ்டர்
பெருந்துறையில் ஒட்டப்பட்ட ஜெ., நினைவஞ்சலி போஸ்டர்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை யூனியன் 4-வது வார்டில் கவுன்சிலராக இருப்பவர் ஜெயக்குமார். அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், ஈரோடு புறநகர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க மாணவரணிச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். இவருக்கும், பெருந்துறைத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான தோப்பு வெங்கடாசலத்துக்கும் இடையே சமீபகாலமாக கடுமையான பனிப்போர் நடந்துவருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்துக்கு எதிராக, தனியாகக் களமிறங்கி நான்கு கவுன்சிலர் சீட்டுகளைப் பிடித்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறைத் தொகுதியில் சீட் வாங்கத் தீவிரமாகச் செயல்பட்டுவருவது போன்ற ஜெயக்குமாரின் செயல்பாடுகள், தோப்புவை உக்கிரமாக்கியிருக்கின்றன. இதன் காரணமாக ஜெயக்குமாரின் ஒவ்வொரு செயல்பாடுக்கும் தோப்பு வெங்கடாசலம் நெருக்கடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இந்தநிலையில், ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெருந்துறைத் தொகுதி முழுக்க ஜெயலலிதாவுக்கு நினைவஞ்சலி போஸ்டர்களை நேற்று முன்தினம் ஜெயக்குமார் ஒட்டியிருக்கிறார். விடியற்காலை அந்த போஸ்டர்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டுக் கிடந்திருக்கின்றன. பெருந்துறை டவுன் பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்களும் இதில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

`தூய்மைப் பணியாளர்களைவைத்து அம்மாவின் போஸ்டர்களைக் கிழிக்கச் சொல்லும் அளவுக்கு எந்த அதிகாரியும் உத்தரவிட்டிருக்க மாட்டார். நிச்சயமாக இது தோப்பு வெங்கடாசலத்தின் வேலையாகத்தான் இருக்கும்’ என ஜெயக்குமார் தரப்பு கொதித்துப்போயிருக்கிறது. உடனே 100-க்கும் மேற்பட்டோருடன் திரளாகச் சென்று பெருந்துறை டி.எஸ்.பி-யைச் சந்தித்த ஜெயக்குமார் `சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரளித்திருக்கிறார்.

டி.எஸ்.பி அலுவலகத்துக்கு புகாரளிக்க வந்த ஜெயக்குமார் தரப்பினர்
டி.எஸ்.பி அலுவலகத்துக்கு புகாரளிக்க வந்த ஜெயக்குமார் தரப்பினர்

மேலும் ஒரு பெரும் கூட்டத்துடன் அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேரில் சந்தித்து, `தான் ஒருத்தன்தான் பெருந்துறையில அரசியல் செய்யணும்னா, மற்ற கட்சிக்காரங்க எல்லாம் தேவையில்லையா... அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக தோப்பு வெங்கடாசலம் தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் நடந்துக்கிட்டுவர்றார். அவர்மீது நடவடிக்கை எடுக்கணும்’ என கோரிக்கைவைக்க இருக்கின்றனராம்.

லோக்கல் கட்சியினரோ, `அ.தி.மு.க-வில் தனக்கு எதிராக அரசியல் செய்யுறவன், அம்மாவோட போட்டோவை ஒட்டுனாக்கூட, அதைக் கிழிச்சியெறிவேன்னு நடந்துக்கிறதெல்லாம் நாகரிகமான அரசியல் இல்லை. வார்த்தைக்கு வார்த்தை அம்மாவின் விசுவாசின்னு வெளியே சொல்லிக்கிட்டு, இப்படித் தன்னோட பொலிட்டிக்கல் மைலேஜுக்காக வாழ்க்கை கொடுத்த அம்மா போட்டோவையே கிழிச்செறியச் சொன்னார்னா, உண்மையிலேயே அம்மா ஆன்மா மன்னிக்காது’ எனக் குமுறுகின்றனர்.

இது தொடர்பாக தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்கள் சிலரிடம் பேச முயன்றோம். ஆனால், அவர்கள் நமது அழைப்பை ஏற்கவில்லை. இது தொடர்பாக அவர்கள் விளக்கம் தரும்பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம்!

அடுத்த கட்டுரைக்கு