Published:Updated:

`இனி சோலோ!' - எடப்பாடி பழனிசாமியின் வியூகம்... இனி பன்னீர்செல்வத்தின் நிலை?!

எடப்பாடி, பன்னீர்
எடப்பாடி, பன்னீர்

இனி அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை மட்டுமே இருக்க வேண்டும்... அது தான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், `பன்னீர்–பழனிசாமி' என்று இரட்டைத் தலைமையின் கீழ் செயல்பட்டுவந்த அ.தி.மு.க இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி பழனிசாமியின் முழு ஆளுமையின் கீழ் அடங்கி, ஒற்றைத் தலைமையாக மாறி வருகிறது. தர்மயுத்தம் நடத்தியபோது `ஒரு தலைவன் இருக்கின்றான்!’ என்று கொண்டாடிய அ.தி.மு.க-வினர், பன்னீருக்கு வாய்த்த இடம் எப்போதும் இரண்டுதான் என்று ஓப்பனாகவே கமென்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பன்னீர்செல்வம் ஜெயலலிதா
பன்னீர்செல்வம் ஜெயலலிதா

ஜெயலலிதா இருந்தவரை கட்சிரீதியான முடிவுகளை அவரே எடுத்தாலும், சில விவகாரங்களில் பெயரளவிலாவது சிலரிடம் ஆலோசனை கேட்டுவந்தார். குறிப்பாக வேட்பாளர்கள் தேர்வு என்று வரும்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கடைசியாக ஒரு முறை ஆலோசனை செய்த பிறகு முடிவை எடுப்பது ஜெயலலிதாவின் வழக்கம். அதிலும் அவருக்கு நம்பிக்கைக்குரிய நபராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுபோன்று பலமுறை ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காட்சிகள் மாறி, கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று கணக்குப் போட்டார் சசிகலா. அதற்கு சிக்கலை ஏற்படுத்தியவர் பன்னீர். சரி, பன்னீர் இடத்தில் பழனிசாமியை உட்காரவைத்து நாம் இயக்கலாம் என்று திட்டமிட்ட சசிகலாவின் திட்டம் காற்றிலே கரைந்துபோனது. பன்னீர் தொடங்கிய தர்மயுத்தம், பழனிசாமியின் பங்கீட்டு முறையால் முடிவுக்கு வந்தது. கட்சிக்கு பன்னீர், ஆட்சிக்கு பழனிசாமி என்கிற கணக்கில் இணைப்பு ஒப்பந்தம் எழுதப்பட்டது. ஆனால், அரசு ஒப்பந்தங்களே பலநேரம் காற்றில் பறக்கும்போது அரசியல்வாதிகள் போடும் ஒப்பந்தம் மட்டும் காப்பாற்றப்படுமா என்ற கேள்வி அப்போதே எழுந்தது. அதை இப்போது நிரூபித்துக் காட்டியிருக்கிறார் பழனிசாமி.

சசிகலா காலில் விழும் எடப்பாடி
சசிகலா காலில் விழும் எடப்பாடி

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற இடத்தில் பன்னீர் இருக்கிறார். அதாவது கட்சியின் அதிகாரமிக்க முதல் தலைவர் பன்னீர் செல்வம். அடுத்த இடமான இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே பழனிசாமி வசம் உள்ளது. ஆட்சி விவகாரத்தில் இது அப்படியே எதிர்மாறாக உள்ளது. இப்போதும் ஆட்சி அதிகாரத்தில் எடப்பாடி சொல்வதுதான் முடிவாகவுள்ளது. பன்னீரின் வார்த்தைக்கு அங்கே பெரிதாக மரியாதையில்லை. ஆனால், கட்சி விவகாரத்தில் அந்த எல்லைக்கோட்டை பன்னீரால் வரையறுக்க முடியவில்லை. இதுவே அவரின் தோல்விக்கான ஆரம்பம்.

இதுபற்றி பன்னீரின் முன்னாள் ஆதரவாளர்கள் சிலர் நம்மிடம் மனம் திறந்து பேசினர்...

"ஆரம்பத்தில் கட்சி விவகாரங்களில் பன்னீர் சொல்வதற்கு மறுப்பு சொல்லாமல் இருந்த பழனிசாமி, நாள்கள் செல்லச் செல்ல தனது ஆதிக்கத்தைக் கட்சிக்குள் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு அவர் கையில் எடுத்த யுக்தி, பன்னீர் அணியை பலவீனப்படுத்துவது. சசிகலாவின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டுப் பழகியவர்களையே பழனிசாமி தன் பக்கம் இழுத்துவிட்ட பிறகு, பவ்யத்தைக் காட்டியே பழக்கப்பட்ட பன்னீர் பின்னால் சென்றவர்களை தன் வயப்படுத்துவது பழனிசாமிக்கு பெரிய காரியமாக இல்லை.

ஜெயலலிதாவுக்கு 19.92 லட்சம்; ராமசாமி படையாச்சிக்கு 20 லட்சம்... எடப்பாடி ஆட்சியின் என்ன கணக்கு இது?!

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பன்னீர் அணிக்கு வெந்நீர் ஊற்றிய பழனிசாமி, அந்த அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களுக்கு ஏக மரியாதையும் கவனிப்பும் தனியாகச்செய்ய, ஒவ்வொரு எம்.எல்.ஏ-வும் பழனிசாமி பக்கம் சாய்ந்துவிட்டார்கள். இப்படி இரண்டு ஆண்டுகளில் பன்னீருக்கு என்று தனியாக ஒரு அணி இருந்துவிடக் கூடாது என்று தெளிவாக தனது திட்டத்தை செயல்படுத்தி வந்தார். ஒருகட்டத்தில் பன்னீர் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று புலம்ப ஆரம்பித்தார். இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்ப்பும் காட்டாமல் பன்னீரின் வாரிசுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதில் பழனிசாமியின் சூட்சுமமும் அடங்கியிருந்தது. தன் மகனை அரசியல் களத்தில் நேரடியாக இதுவரை இறக்காமல், பன்னீர் மகனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்ததே, அவரால் இனி எதிர்த்துப் பேசமுடியாது என்பதை அறிந்துதான்.

இப்படித்தான் தர்மயுத்த நாயகனாக நாங்கள் நினைத்த பன்னீர் தடுமாறினார். நம்பிவந்தவர்கள் முக்கியமா, நம் குடும்பம் முக்கியமா என்ற கேள்வி எழுந்தபோது குடும்பம் என்பதை டிக் செய்தார் பன்னீர். 2019-ம் தேதி ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க வுக்குக் கிடைத்த மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் அந்தக் கட்சியே நேரடியாகப் போட்டியிட்டது. அப்போது ஒரு சீட் பன்னீருக்கு ஒரு சீட் பழனிசாமிக்கு என்று பேச்சு இருந்தது. பன்னீர் பின்னால் படையெடுத்தவர்கள் நப்பாசையுடன் பன்னீரை சுற்றி வந்தனர். ஆனால் பன்னீர், `முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்வரிடமே இருக்கிறது’ என்று லாகவமாக ஒதுங்கிக்கொண்டார். இரண்டு இடங்களையும் பழனிசாமியே முடிவு செய்தார்.

அ.தி.மு.க நிர்வாகிகள்
அ.தி.மு.க நிர்வாகிகள்

பழனிசாமியுடன் இணைந்தபோது தன்னுடன் வந்தவர்கள் யாருக்கும் கட்சி ரீதியாக எந்தப் பொறுப்பையும் பன்னீர் வாங்கித்தரவில்லை. தற்போது கட்சியில் இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்களே. கட்சியின் முக்கிய முடிவுகள் மாவட்டச் செயலாளர்கள் மூலமே செயல்படுத்த முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் பழனிசாமி சொல்வதைச் செயல்படுத்தவே மாவட்டச் செயலாளர்கள் தயாராக இருக்கின்றனர். ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு பன்னீர் பின்னால் படையெடுக்க எந்த எம்.எல்.ஏ-வும் இல்லை. இன்றைய சூழ்நிலையில் பன்னீர் தர்மயுத்தத்தை மீண்டும் தொடங்கினால், அவரும் அவரின் மகன் மட்டுமே அந்த யுத்தத்தில் பங்கேற்கும் நிலை இருக்கிறது’’ என்றனர்.

இத்தகைய சூழலில்தான், பன்னீர் செல்வம் உட்பட பதினோரு எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் பதில் அளித்தது. பன்னீரின் பின்னால் அப்போது படையெடுத்த பதினோரு எம்.எல்.ஏ-க்களின் பிடி சபாநாயகர் கைக்குள் வந்தது. உடனடியாக இந்த பதினோரு பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த நோட்டீஸின் நினைவூட்டல் என்று கூறப்பட்டாலும் இதுவும் பன்னீருக்கு எடப்பாடி தரப்பிலிருந்து வைக்கப்பட்ட செக் என்றும் பேச்சு எழுந்துள்ளது. எடப்பாடிக்கு எதிராக பன்னீர் இனி எந்த முடிவு எடுத்தாலும் அவருடைய பதவிக்குப் பாதிப்பு என்கிற நிலை இப்போது உருவாகியிருக்கிறது. இதைத் திட்டமிட்டே ஏற்படுத்தி இருக்கிறார் பழனிசாமி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமியைத் தெரியும்... அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா?

சரி, எடப்பாடியின் அடுத்த மூவ் என்ன?

அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம்...

"அம்மாவின் வழியில் நடக்கும் அரசு என்று சொல்வது போலவே அம்மாவின் இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். ஆட்சி- கட்சி இரண்டுமே தன் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். கட்சி ஒற்றைத்தலைமையின் கீழ் வர வேண்டும். கட்சிக்கும் முதலாவதாக தானும் இரண்டாம் இடத்தில் பன்னீரும் இருக்கட்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அதற்கான காய் நகர்த்தல்களைச் சிறப்பாகச் செய்து முடித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பன்னீர் பின்னால் நின்றவர்கள் வழியே இல்லாமல் இப்போது எடப்பாடிக்கு சாமரம் வீசும் நிலை வந்துவிட்டது. பன்னீரோ தன்னை நம்பி வந்தவர்களுக்கு எந்த உதவியும் செய்யாததுதான் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் சரிந்ததற்குக் காரணம்.

சிறு பதவிகள் தவிர, முக்கியப் பதவிகள் எதிலும் பன்னீரின் ஆதரவாளர்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதேபோல் கட்சியை நிர்வகிக்க பதினோரு பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று இணைப்பின்போது சொல்லப்பட்டது. ஆனால், அதை லாகவமாக தடுத்துக்கொண்டே வந்துள்ளார் எடப்பாடி. ஒரு முறை கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் "விரைவில் குழு அமைக்கப்படும்'' என்று பன்னீர் காட்டமாகச் சொன்னதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக இருந்த எடப்பாடி, அதை இப்போது வரை செயல்படுத்தவில்லை. குழு அமைத்தால் தனது அதிகாரம் அடிபட்டுப் போய்விடும் என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான் அடுத்த பொதுக்குழுவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி பொதுச்செயலாளர் பதவியைப் பிடித்துவிட இப்போதே வியூகம் அமைக்க ஆரம்பித்துவிட்டார். அதை பன்னீர் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்’’ என்றார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
இனி அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத்தலைமை மட்டுமே இருக்க வேண்டும்... அது தானாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டுமென்று நினைத்திருக்கிறார் எடப்பாடி. கடந்த மூன்றாண்டுகளில் அதற்கான முயற்சிகளையும் எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஆனால், ஒரு தலைவனாக தமிழகமே எதிர்பார்த்த, அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட பன்னீர் செல்வம், தன் சுயநலத்தாலும் துணிவின்மையாலும் சாதாரண அரசியல்வாதியாக சரிந்து போயிருக்கிறார். இவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல; அ.தி.மு.க-வின் எதிர்காலமும் ஆட்சி முடிந்தபிறகுதான் தெரியவரும்.

அடுத்த கட்டுரைக்கு