அலசல்
அரசியல்
Published:Updated:

அ.தி.மு.க அவைத்தலைவர் பதவி- வாள்சுழற்றும் சண்முகம்... உசுப்பேற்றும் பன்னீர்... சாதிப்பாரா எடப்பாடி?

ஓ.பன்னீர்செல்வம், - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பன்னீர்செல்வம், - எடப்பாடி பழனிசாமி

தேர்தல் ஆணைய விதிப்படி ஆண்டுக்கொருமுறை பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். அ.தி.மு.க-வில் அவைத்தலைவர் தலைமையில்தான் அந்தக் கூட்டம் நடக்கும்.

அ.தி.மு.க-வில் அவைத்தலைவர் பதவிக்கான ரேஸ் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. சொல்லப்போனால், அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது அவைத்தலைவர் பதவியைக் குறிவைப்பவர்களின் லிஸ்ட். அதேவேளையில், தலைமைப் பொறுப்பிலிருக்கும் பன்னீரும் எடப்பாடியும் தங்களுக்குச் சாதகமானவர்களை அந்தப் பதவிக்கு கொண்டுவர காய்நகர்த்தல்களைத் தொடங்கிவிட்டார்கள் என்கிறது இலைக்கட்சி வட்டாரம்.

அ.தி.மு.க-வில், அவைத்தலைவர் பதவி அதிகாரம்மிக்க பதவியாக இல்லாவிட்டாலும் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவுக்குத் தலைமை தாங்கும் கௌரவமான பதவியாக இருக்கிறது. இதுவரை பாவலர் மா.முத்துசாமி, வள்ளிமுத்து, நாவலர் நெடுஞ்செழியன், பொன்னையன், புலவர் புலமைப்பித்தன், மதுசூதனன் ஆகியோர் அவைத்தலைவர்களாக பதவிவகித்திருக்கிறார்கள். அதிகபட்சமாக, 2007 முதல் 2021 வரை கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் மதுசூதனன் அந்தப் பதவியை வகித்திருக்கிறார். 2021, ஆகஸ்ட் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் அவர் மறைந்ததை அடுத்து, அந்தப் பதவி காலியாக உள்ளது.

தேர்தல் ஆணைய விதிப்படி ஆண்டுக்கொருமுறை பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். அ.தி.மு.க-வில் அவைத்தலைவர் தலைமையில்தான் அந்தக் கூட்டம் நடக்கும். அவரது கையெழுத்திட்டே பொதுக்குழு உறுப்பினர்களுக்கான அழைப்பிதழ், அது தொடர்பான அறிக்கைகள் வெளியாகும். வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் நடக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்குள் அவைத் தலைவரை நியமித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது அ.தி.மு.க.

அ.தி.மு.க அவைத்தலைவர் பதவி-  வாள்சுழற்றும் சண்முகம்... உசுப்பேற்றும் பன்னீர்... சாதிப்பாரா எடப்பாடி?

இந்த நிலையில்தான், அவைத்தலைவர் நாற்காலிக்குப் பலரும் முட்டி மோதுகிறார்கள். கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவர் இந்தப் போட்டி பற்றி நம்மிடம் பேசினார்... ‘‘அ.தி.மு.க-வில் அவைத்தலைவரை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உண்டு. தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப் பாளருக்கு அந்த அதிகாரம் மாறியிருக்கிறது. அவைத் தலைவர் பதவியைப் பிடிக்க பலரும் போட்டியிட்டாலும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகமும், பா.வளர்மதியும் அதில் தீவிரமாக இருக்கிறார்கள். தேர்தலில் தோற்று எம்.எல்.ஏ பதவியும் போனதால், ‘கட்சியில் கெளவரமான பொறுப்பு வேண்டும்’ என்று பன்னீர், எடப்பாடி இருவரிடமும் வாள் சுழற்றிவருகிறார் சி.வி.சண்முகம். வளர்மதிக்கும் அவைத்தலைவர் பதவியின்மீது ஒரு கண் இருக்கிறது. அதனால்தான், தன்னை எடப்பாடியின் தீவிர விசுவாசியாகக் காட்டிக்கொள்கிறார். இப்போதுதான் அவருக்கு மாநில மகளிரணிப் பொறுப்பு வழங்கப் பட்டிருப்பதால், அவைத்தலைவர் பதவி கிடைப்பது சந்தேகமே. அன்வர் ராஜா, தமிழ்மகன் உசேன், முன்னாள் சபாநாயகர் தனபால், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் அவைத் தலைவர் பதவியைக் கேட்கிறார்கள்.

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துவிட்டதாகக் கருதும் கட்சியின் சீனியர்கள் சிலர், இஸ்லாமியர் ஒருவரை அவைத்தலைவராக்க வேண்டும் என்கிறார்கள். அந்த வகையில் அன்வர் ராஜாவைச் சிலர் கை காட்டுகிறார்கள். ஆனால், அன்வர் ராஜா தடாலடியாகப் பேசுவார்; சில நேரங்களில் சசிகலாவுக்கு ஆதரவாகவும் பேசிவிடுவார். அதனால், எடப்பாடி தரப்பு அவரை அவைத்தலைவராக்க ஒப்புக் கொள்ளாது. அந்தவகையில், தமிழ்மகன் உசேனுக்குக் கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது தான்... ஆனால், ‘அமைச்சர்கள் அனைவரும் சொத்து சேர்த்துவிட்டனர். நான் மட்டும் இப்படியே இருக்கிறேன்’ என்று கட்சிக் கூட்டத்தில் வெளிப்படையாகவே அவர் பேசுகிறார். நாளை அவைத்தலைவர் பொறுப்பில் இருந்துகொண்டு அவர் இப்படிப் பேசினால் அது பெரிய பிரச்னையாகிவிடும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க அவைத்தலைவர் பதவி-  வாள்சுழற்றும் சண்முகம்... உசுப்பேற்றும் பன்னீர்... சாதிப்பாரா எடப்பாடி?

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டுவரலாம் என்கிறார்கள் சிலர். அந்தவகையில், முன்னாள் சபாநாயகர் தனபாலின் பெயர் அடிபடுகிறது. அவர், எம்.ஜி.ஆர் காலத்து நபர். ஜெயலலிதாவால் இருமுறை சபாநாயகராக அமர்த்தப்பட்டவர். ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். பன்னீரின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. ஆனால், எடப்பாடியின் முழுமையான ஆதரவு அவருக்கு இல்லை. அதேபோல, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் சசிகலாவுக்கு எதிராகத் தீவிரமாகப் பேசிவந்தாலும், முழுமையாகத் தனக்கு ஆதரவாகச் செயல்படுவாரா என்கிற சந்தேகம் எடப்பாடியிடம் இருக்கிறது’’ என்றவர், தொடர்ந்து எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் காய்நகர்த்தல்களையும் விவரித்தார்...

அ.தி.மு.க அவைத்தலைவர் பதவி-  வாள்சுழற்றும் சண்முகம்... உசுப்பேற்றும் பன்னீர்... சாதிப்பாரா எடப்பாடி?
அ.தி.மு.க அவைத்தலைவர் பதவி-  வாள்சுழற்றும் சண்முகம்... உசுப்பேற்றும் பன்னீர்... சாதிப்பாரா எடப்பாடி?

‘‘பொன்னையன்தான் எடப்பாடியின் சாய்ஸாக இருக்கிறார். வயதான காரணத்தால், பொன்னையனால் தீவிரமாகச் செயல்பட முடியாது; தான் சொன்னால் தலையாட்டிவிடுவார். அதனால், அவரை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவந்து தனக்குச் சாதகமான விஷயங்களைச் செய்துகொள்ள நினைக்கிறார் எடப்பாடி. மறுபக்கம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தரப்புடன் பேசிவருகிறது பன்னீர் தரப்பு. செங்கோட்டையன் ஒன்பதாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பெரும்பாலான துறைகளில் அவர் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக 2017-ல் கட்சி இரண்டு அணிகளாகப் பிளவுபட்டபோது, சசிகலா அணிக்கு அவைத்தலைவராக இருந்தவர் செங்கோட்டையன்தான். அதனால், அவரை அவைத்தலைவர் பதவியைக் கேட்கவைத்து உசுப்பேற்றும் வேலையைச் செய்துவருகிறது பன்னீர் தரப்பு. ஒருவேளை செங்கோட்டையனுக்கு பதவி தர எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இருவருக்கும் பொதுவான ஒருவரைக் கொண்டுவந்துவிடலாம் என்றும் கணக்கு போடுகிறார் பன்னீர்’’ என்றார்.

முதல்வர் வேட்பாளர் தொடங்கி கொறடா தேர்வு வரை தான் நினைத்ததைச் சாதித்த எடப்பாடி, இம்முறையும் அவர் நினைத்ததைச் சாதிப்பாரா... இல்லை சறுக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.