Published:Updated:

அ.தி.மு.க தோல்விக்கு இ.பி.எஸ்-தான் காரணம்! - போட்டுத்தாக்கும் புகழேந்தி

தேர்தல்களின்போது தேர்வுக்குழு அமைத்து வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதோடு, தேர்வு செய்யப்பட்டவர்களோடு நேர்காணலையும் நடத்துவார் ஜெயலலிதா

பிரீமியம் ஸ்டோரி
தேர்தல் தோல்வி, பல்வேறு கட்சிகளிலும் புயலைக் கிளப்பியுள்ளது. அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யாரை எதிர்க்கட்சி தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பதிலேயே முட்டல் மோதல்கள் வெளிப்படையாக வெடித்தன. கடும் போட்டிக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ‘‘ஓ.பி.எஸ்-தான் எதிர்க்கட்சித் தலைவராக வர வேண்டும்’’ என்று குரல் கொடுத்த அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான புகழேந்தியிடம் பேசினோம்...

‘‘ஓ.பி.எஸ்-தான் எதிர்க்கட்சித் தலைவராக வர வேண்டும் என்று ஏன் இத்தனை பிடிவாதம் காட்டுகிறீர்கள்?’’

‘‘இது பிடிவாதம் அல்ல... தேர்தலுக்கு முன்பு, ‘முதல்வர் வேட்பாளர் யார்’ என்ற கேள்வி கட்சிக்குள் எழுந்தபோதே, ‘எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்’ என்று தலைமைக் கழகத்துக்கே வந்து முன்மொழிந்தவர் ஓ.பி.எஸ். அதுமட்டுமல்ல... மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டசபைக்கு வர முடியாத சமயங்களிலெல்லாம், அவரது ஆலோசனையின்பேரில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு சட்டமன்றத்தை நடத்திச்சென்றவர் ஓ.பி.எஸ். மேலும் அவை முன்னவராக இருந்திருக்கிறார். 10 முறை பட்ஜெட் சமர்ப்பித்த அனுபவம்கொண்டவர். இப்படிப்பட்ட திறமையான, அமைதியான, ஆற்றல்மிக்க மூத்தவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால்தான் சட்டமன்றத்தைத் திறம்பட நடத்திச் செல்ல முடியும். அதுதான் தொண்டர்களின் விருப்பமும்கூட.’’

‘‘அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட இ.பி.எஸ்-தானே எதிர்க்கட்சித் தலைவராகவும் வர வேண்டும்?’’

‘‘இ.பி.எஸ்-ஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்தவரே கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்-தானே! அப்படி முன்மொழிந்தவரை இப்போது ‘எதிர்க்கட்சித் தலைவராக’ முன்மொழிய இ.பி.எஸ் ஏன் யோசிக்கிறார்?

கிடைத்த ‘முதல்வர் வேட்பாளர்’ என்ற வாய்ப்பையும் இ.பி.எஸ் கோட்டை விட்டுவிட்டார்; தோற்றுவிட்டார். இத்தனைக்கும் தேர்தலின்போது அனைத்து முடிவுகளையும் எடுத்தவரே இ.பி.எஸ்-தான். 234 தொகுதிகளிலும் பிரசாரத்துக்கு யாரையும் அனுமதிக்காமல் அவர் மட்டுமே பிரசாரத்துக்குச் சென்றார். தொகுதிப் பொறுப்பாளர்களாகக்கூட யாரையும் கட்சியிலிருந்து நியமிக்கவில்லை. இப்படி கட்சி எடுத்த பல்வேறு தவறான முடிவுகள்தான் இன்றைக்கு இப்படியொரு தோல்விக்குக் காரணமாகிவிட்டது.’’

‘‘கட்சியிலுள்ள இரு தலைமைகளுமே சேர்ந்து முடிவெடுத்து தேர்தலைச் சந்தித்த பிறகு, தோல்விக்குக் காரணமாக இ.பி.எஸ்-ஸை மட்டுமே முன்னிறுத்துவது நியாயம்தானா?’’

‘‘முதல்வர் வேட்பாளராக இ.பி.எஸ் அறிவிக்கப்பட்டுவிட்ட பிறகு, அவர் எடுக்கிற அனைத்து முடிவுகளுக்கும் ஓ.பி.எஸ் அமைதியாகச் சம்மதம் தெரிவித்துவந்தார்; கட்டுப்பட்டுவிட்டார் என்பதுதான் உண்மை!

தேர்தல்களின்போது தேர்வுக்குழு அமைத்து வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதோடு, தேர்வு செய்யப்பட்டவர்களோடு நேர்காணலையும் நடத்துவார் ஜெயலலிதா. ஆனால், இம்முறை அப்படியான குழுக்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. மாறாக, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த 8,000 நபர்களையும் ஒரே நாளில் காலையில் மூன்று மணி நேரம், மாலையில் மூன்று மணி நேரம் பார்த்து தேர்வு செய்துவிட்டார்கள் என்றால், அதை என்னவென்று சொல்ல? ஆக, தேர்தல் தோல்வி குறித்த காரணங்களை கட்சியின் செயற்குழு அல்லது நிர்வாகக்குழுதான் அலசி ஆராய்ந்து சொல்ல வேண்டும்.’’

அ.தி.மு.க தோல்விக்கு இ.பி.எஸ்-தான் காரணம்! - போட்டுத்தாக்கும் புகழேந்தி

‘‘தேர்தல் பிரசாரத்தை ஓ.பி.எஸ் தாமதமாக ஆரம்பித்தது, முன்னாள் அமைச்சர்களே ‘10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசியதும்கூட தோல்விக்கான காரணங்கள்தானே?’’

‘‘ஜெயலலிதா காலத்தில் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள், முன்னணித் தலைவர்களைப் பட்டியலிட்டு முதலில் அவர்களைத்தான் அம்மா பிரசாரத்துக்கு அனுப்புவார். ஆனால், இம்முறை அப்படியான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. ஓ.பி.எஸ்-ஸுக்கு முன்பே இ.பி.எஸ் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்.

அடுத்து, கூட்டணியில் பா.ம.க-வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தே.மு.தி.க-வைக் கழறிவிட்டது ஒரு தவறான முடிவு. மேலும் நல்லெண்ண அடிப்படையில், வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை அறிவித்தாலும், அது பல்வேறு சமூகத்தவர்களிடையே எரிச்சலைத்தான் ஏற்படுத்திவிட்டது. எனவே, பிற சாதியினர் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வளவு ஏன்... வன்னியர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய தொகுதிகளிலேயேகூட அ.தி.மு.க தோல்வியைத்தான் தழுவியிருக்கிறது. உதாரணமாக, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோர் தோற்றுப்போயினரே...’’

‘‘இன்றைய சூழலில், ‘சசிகலா போன்ற வலிமையான தலைமை அ.தி.மு.க-வுக்குத் தேவை’ என்ற குரல்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’’

‘‘நீதிமன்றம் சொன்னதால், சசிகலா சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து வெளிவந்த பிறகும்கூட, மிகப்பெரிய ‘ரோடு ஷோ’ நடத்தி, விடிய விடிய சென்னை வந்து சேர்ந்த சசிகலா, ‘கட்சிக்குள் வருகிறேன்’ என்று சொல்லவில்லை. மாறாக, ‘அம்மாவின் ஆட்சியும் கட்சியும் நல்லபடியாக இருக்கட்டும். நான் குறுக்கே வர மாட்டேன்’ என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார். டி.டி.வி.தினகரன் கெஞ்சிக் கூத்தாடியதையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு இப்படியொரு முடிவை சசிகலா எடுத்திருக்கிறார். எனவே, அவரை இனி பகைமை பாராட்ட வேண்டியதில்லை.

அதேசமயம், இப்படி அவரே ஒதுங்கிக்கொண்ட பிறகு, அவரோடு ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்தி, அ.ம.மு.க என்ற கட்சியை க்ளோஸ் செய்வதற்கான வழியைத்தான் அ.தி.மு.க கண்டிருக்க வேண்டும். அதனால்தான் ‘சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்துப் பரிசீலிக்கலாம்’ என்று ஓ.பி.எஸ் கூறியிருந்தார்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு