Published:Updated:

பொங்கல் தொகுப்பு: `தமிழ்நாட்டில் நிறுவனங்கள் இல்லையா?!' - ஓ.பி.எஸ்-ஸின் கேள்விக்கு திமுக-வின் பதில்?

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் - ஸ்டாலின்
News
ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் - ஸ்டாலின்

```தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொருள்களை உற்பத்தி செய்து விநியோகிக்க, தமிழ்நாட்டில் நிறுவனங்களே இல்லையா?'' உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியிருந்தார் ஓ.பி.எஸ்.

``நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்லில் இந்தியில் எழுதினால், இந்தித் திணிப்பு என்று கூறும் தி.மு.க., தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான பொருள்களைப் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்வதும், அந்தப் பொருள்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டிருப்பதும் எந்தவகையில் நியாயம். இந்தித் திணிப்பை அரசே மேற்கொள்ளலாமா?'' என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமான அறிக்கை ஒன்றை ஆளும் தி.மு.க அரசுக்கு எதிராக வெளியிட்டிருக்கிறார். ஆனால், ``பொருள்களை எங்கு வாங்கினால் என்ன, இதைவைத்து அ.தி.மு.க-வினர் தேவையில்லாத அரசியலைச் செய்கிறார்கள்'' என தி.மு.க-வினர் அதற்கு பதிலளித்துவருகிறார்கள்.
பொங்கல் சிறப்புத் தொகுப்பு
பொங்கல் சிறப்புத் தொகுப்பு

தமிழக அரசின் சார்பில், 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு கடந்த 4-ம் தேதியிலிருந்து நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்பட்டுவருகிறது. இதில் வழங்கப்பட்ட பொருள்கள் தரமில்லாமல் இருப்பதாகவும், சில இடங்களில் குறைவான பொருள்கள் வழங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. தொடர்ந்து, இது குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,

`` 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் - நமது அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி நிலவிவரும் இந்தச் சூழலிலும் மக்களின் நலன் கருதி 1,297 கோடி ரூபாய் செலவில் இந்தத் தொகுப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தப் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படுவதை நானே நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்தேன். மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தைப் பற்றிச் சிலர் தவறான, விஷமத்தனமான கருத்துகளைப் பரப்பிவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எனவே, இந்தப் பணிகள் முறையாக நடைபெற்றுவருவதையும், தரமான பொருள்கள் எவ்விதப் புகாரும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப்பெறுவதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும். அதற்காக, எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், எம்.பி-க்கள் நேரடியாக இதைக் கண்காணிக்க வேண்டும்” எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர் சந்திப்புகளிலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைகள் வாயிலாகவும் ஆளும் அரசை தொடர்ந்து இது குறித்து விமர்சித்துவருகின்றனர்.

ஓ.பி.எஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில்,``எங்கும் தமிழ் எதிலும் தமிழ், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ், இந்திய ஆட்சி மொழியாக தமிழ், தமிழில் அர்ச்சனை, இருமொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு என தமிழ்மீது மிகுந்த பற்றுடையதுபோலக் காண்பித்துக்கொள்ளும் தி.மு.க., பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும், பொங்கல் தொகுப்பிலுள்ள பொருள்களை வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அந்தப் பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.

 ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

ஆட்டா மாவு, மல்லித்தூள், கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் ஆகியவை கர்நாடக மாநிலத்திலுள்ள வெவ்வேறு நிறுவனங்களிலிருந்தும், ரவை உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்தும், கடுகு குஜராத் மாநிலத்திலிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பொட்டலங்களில், ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகள்தான் இடம்பெற்றிருக்கின்றன. இது தமிழ் மொழியையும், தமிழர்களையும் அவமதிக்கும் செயல் இல்லையா... தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொருள்களை உற்பத்தி செய்து விநியோகிக்க, தமிழ்நாட்டில் நிறுவனங்களே இல்லையா?'' உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓ.பி.எஸ்-ஸின் இந்த அறிக்கை குறித்து அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், பாபு முருகவேல் பேசும்போது,

``தி.மு.க-வைப் பொறுத்தவரை படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்பது பொங்கல் தொகுப்பிலும் நிரூபணம் ஆகியுள்ளது. சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதுதான் அவர்களின் அடையாளம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொல்கிற விஷயங்களை, ஆளும் கட்சியான பிறகு கடைபிடிப்பதற்கான முயற்சியைக்கூட அவர்கள் செய்வது கிடையாது. அவர்களின் தமிழ்ப்பற்று எந்த அளவுக்கானது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அதேபோல, சுயசார்பு பற்றிப் பேசியவர்கள் வெளிமாநிலங்களிலிருந்து பொருள்களைக் கொள்முதல் செய்திருக்கிறார்கள். ஏன், அந்தப் பொருள்களெல்லாம் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகவில்லையா இல்லை தமிழ்நாட்டில் அந்தப் பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லையா?

பாபு முருகவேல்
பாபு முருகவேல்

ஒன்று இங்குள்ள விவசாயிகள், வியாபாரிகள் பலன் பெறுவதை அவர்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால், வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்வதன் மூலம் கிடைக்கும் கசிவுத் தொகைக்காக அப்படிச் செய்திருக்கலாம்'' என்கிறார் கடுமையாக.

அ.தி.மு.க-வின் விமர்சனங்கள் குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் சிவ.ஜெயராஜிடம் பேசினோம்.

``வெளிமாநிலங்களில் பொருள்கள் வாங்கக் கூடாது என்று எந்த சட்டவிதியும் சொல்லவில்லை. பல்லாயிரம் கோடி கமிஷனுக்காக, இவர்கள் கடந்தகாலங்களில் பொருள்கள் வாங்கிய நிறுவனங்களில் எங்களையும் வாங்க நிர்பந்திக்கிறார்கள். கடந்த ஆட்சியில், முறைகேடுகளில் ஈடுபட்ட நிறுவனங்கள் தமிழ்நாடு அரசின் பிளாக் லிஸ்ட்டில் இருக்கின்றன. அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்களில் பொருள்கள் கொள்முதல் செய்ததன் மூலம் தமிழக மக்களின் வரிப்பணம் எப்படி வீணாகச் செலவழிந்தது என, சட்டமன்றக் கூட்டத்தில் நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையே வெளியிட்டார். ஓ.பி.எஸ் முதலில் அதற்கு பதில் சொல்ல வேண்டும். மக்கள் நலன் என இவர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

சிவ ஜெயராஜ்
சிவ ஜெயராஜ்

இந்த அரசில் பெரும்பாலும் தமிழ்நாட்டுக்குள்தான் பொருள்களைக் கொள்முதல் செய்கிறோம். இங்கு பொருள்கள் இல்லாத காலகட்டத்தில் வெளியில் பர்ச்சேஸ் செய்திருப்போம். தவிர, விலை குறைவாக உள்ள இடங்களில் நாங்கள் வாங்குகிறோம், மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது என நினைக்கிறோம். அதில் தவறொன்றும் இல்லை. தரமற்றது என ஒருசில இடங்களில்தான் புகார்கள் வந்தன. அதுவும் அ.தி.மு.க-வினர் திட்டமிட்டுப் பொய் பரப்பியதுதான். பொருள்களை பேக் செய்து தருவதில் எந்த மொழியில் இருந்தால் என்ன. அ.தி.மு.க-வினர் தேவையில்லாமல் அரசியல் செய்துவருகின்றனர்'' என்கிறார் அவர்.