அரசியல்
அலசல்
Published:Updated:

எந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எந்த முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார்?

ஆ.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆ.பி.உதயகுமார்

- ஆ.பி.உதயகுமார் கேள்வி

எடப்பாடியால் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டும், ஆர்.பி.உதயகுமாரால் சட்டமன்றத்தின் முதல் வரிசையில் அமர முடியவில்லை. அ.தி.மு.க-வின் தென்மாவட்ட முகமாக மாறும் முயற்சிக்குச் சொந்தக் கட்சிக்காரர்களே தடையாக இருக்கிறார்கள். ஆனாலும், மனம் தளராத விக்கிரமாதித்தன் வேதாளம் கதையாக ஆளுங்கட்சி, ஓ.பி.எஸ்-மீது விமர்சனங்களை வீசிக்கொண்டிருக்கும் ஆர்.பி.உதயகுமாரைச் சந்தித்து, அவரது சமீபகால நடவடிக்கைகள் குறித்துச் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“கடந்த 10 ஆண்டுகளாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நீங்கள், தற்போது தீபாவளி பண்டிகைக்கான மது விற்பனை குறித்துக் கவலைப்படுவது நியாயமா?”

“ஸ்டாலின்கூடத்தான் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தன் வீட்டுக்கு முன்னால் நின்று போராட்டமெல்லாம் செய்தார். ஆனால், இப்போது ஆளுங்கட்சியாக வந்த பின்னர், மது விற்பனையை அமோகமாக நடத்தவில்லையா?!”

“அப்படியென்றால், இப்போது நீங்கள் எதிர்க்கட்சி என்பதால் டாஸ்மாக் குறித்து சம்பிரதாய அடிப்படையில் கவலைப்படுகிறீர்களா?”

“அப்படியில்லை... அ.தி.மு.க ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாகக் குறைத்தோம்.ஆனால், தற்போது டாஸ்மாக் கடைகளில் அமைச்சருக்குப் பணம் கொடுத்துவிட்டு, ஓப்பன் பார் வைக்கும் அளவுக்கு அதை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். தமிழகத்தில் தனிநபர் சாராய சாம்ராஜ்யம் நடக்கிறது என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.”

“கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில் அ.தி.மு.க ஓர் அறிக்கையோடு அமைதியாகவிட்டதே?”

“நாடு முழுவதும் `ராமஜென்ம பூமி’ கலவரம் நடந்தபோது, தமிழகம் அம்மா ஆட்சியில் அமைதியாக இருந்தது. 1998-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற கோவை தொடர் குண்டு வெடிப்புபோலவே, தற்போதும் தி.மு.க ஆட்சியில் பயங்கரவாதம் வேரூன்றித் தலைதூக்குகிறது. இதை தி.மு.க அரசு வேடிக்கை பார்க்காமல், இரும்புக்கரம்கொண்டு அடக்க வேண்டும். இந்த விவகாரத்தை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தது சரிதான்.”

எந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எந்த முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார்?

“உங்களுக்குத் துணைத் தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதால்தான் சட்டமன்றத்தையே புறக்கணித்தீர்களா?”

“முதலில் அ.தி.மு.க-வின் பொன்விழா நிறைவு நாள் விழாவை மழுங்கடிக்கவே, அதே நாளில் (17.10.2022) சட்டமன்றத்தை தி.மு.க கூட்டியது. இரண்டாவதாக, துணைத் தலைவர் விவகாரம் நான் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அது அ.தி.மு.க-வின் உரிமைப் பிரச்னை. அதை மறுத்ததால்தான் சட்டமன்றத்தைப் புறக்கணித்தோம். சபாநாயகரின் விருப்பத்துக்கெல்லாம் எங்களால் நடக்க முடியாது. `அப்படி ஒரு பதவியே இல்லை’ என்று ஒரே போடாகப் போட்டுவிட்டு, ஓ.பி.எஸ்-ஸை, ‘துணைத் தலைவர்’ என்று பேச அழைக்கிறார். அதே பதவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக துரைமுருகன் இருந்திருக்கிறாரே... அது அவருக்கு மறந்துவிட்டதா?”

“தேவர் ஜயந்திக்கான தங்கக் கவசத்தைக் கொடுக்கும் உரிமையை உங்களால் பெற முடியவில்லையே... இது ஓ.பி.எஸ்-ஸுக்கு வெற்றிதானே?”

“தேவருக்குத் தங்கக் கவசத்தைச் சாத்த விடாமல் தடுத்து, அந்தப் பழியை எங்கள்மீது சுமத்த ஓ.பி.எஸ் சூழ்ச்சி செய்தார். அதனால்தான், நீதிமன்றத்தை நாடினோம். ஆனால், வங்கியிலிருந்து கவசத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பெற உத்தரவிட்டது நீதிமன்றம். தடையில்லாமல் தங்கக் கவசம் சாத்தப்பட வேண்டும் என்றுதான் மேல்முறையீடு செய்யவில்லை. இதில் இ.பி.எஸ்-ஸின் மதிநுட்பமும் இருக்கிறது. இதுவரை கவசத்தை எடுத்துக்கொடுத்த ஓ.பி.எஸ்-ஸுக்கு இந்த முறை தேவரின் அருள் இல்லை என்பதே உண்மை.”

“அப்படியானால், தேவரின் அருள் இல்லாததால்தான் எடப்பாடியால் பசும்பொன் வர முடியவில்லையோ?”

“அப்படியெல்லாம் இல்லை. எடப்பாடி முதல்வராக இருந்தபோது, தொடர்ந்து ஜயந்தி விழாவில் பங்கேற்றிருக்கிறாரே... தேவரின் ஆசி இருப்பதால்தான் அது நடந்தது. ஆனால், தற்போது எங்களுக்கும், ஓ.பி.எஸ்., சசிகலா என மூவருக்கும் அடுத்தடுத்து நேரம் ஒதுக்கியது தி.மு.க அரசு. அதனால் தேவையில்லாமல் பிரச்னை வரும் என்பதாலேயே எடப்பாடியார் பங்கேற்கவில்லை.”

“பசும்பொன்னில் ‘எடப்பாடி வாழ்க’ என்ற கோஷத்தால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறதே?”

“ஒரு பிரச்னையும் இல்லை. சிலர் செயற்கையாகத் திட்டமிட்டு அது போன்ற ஒரு ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். மறுநாள்கூட நான் அங்கு சென்றேன். எந்தச் சலசலப்பும் இல்லையே!”

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டி.வி-யை பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று எடப்பாடி கூறியது பொய் என்பது அறிக்கையில் உறுதியாகியிருக்கிறதே?”

“ஏதோ இதற்கு முன்பு தமிழகத்தில் கலவரமே நடக்காதது மாதிரியும், துப்பாக்கிச்சூடே நடக்காதது போலவும்... சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் துப்பாக்கிச்சூடு என்பதுபோலப் பேசுகிறார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்த எந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எந்த முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார்... கலவரம் நடக்கும்போது, அங்கிருந்த மாவட்ட நிர்வாகம்தான் பணிகளை மேற்கொள்ளும். முதல்வர் செய்தி சேனல்களைப் பார்த்து தெரிந்துகொள்ளக் கூடாது என்று சட்டம் எதுவும் இருக்கிறதா... அது என்ன தேசவிரோதக் குற்றமா?”

“நாட்டில் நடக்கும் ஓர் அசம்பாவிதத்தை, சாதாரண மக்கள் டி.வி-யைப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்கும் முதல்வர் தெரிந்துகொள்வதற்கும் வித்தியாசமில்லையா?”

“உளவுத்துறை போன்ற அமைப்புகள் விஷயத்தைத் தன்னிடம் சொல்லவில்லை என்று எடப்பாடியார் மறுக்கவில்லையே... சம்பவம் நடக்கும்போது தலைமைச் செயலகத்தில்தான் அவர் இருந்தார். அரசு அமைப்புகள் தன்னிடம் சொல்லும் ரகசியத் தகவல்களை முதல்வர் எப்படி வெளியே சொல்ல முடியும்?”

“ `தயவுசெய்து ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் போல இருக்காதீர்கள்’ என்று திருமணவிழா ஒன்றில் உதயநிதி பேசியிருக்கிறாரே?”

“உதயநிதிக்கு அரசியல் அறிவு வளர வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கருத்து வேறுபாட்டால்தானே தி.மு.க-விலிருந்து எம்.ஜி,ஆர்., வைகோ உள்ளிட்டவர்கள் வெளியே சென்றார்கள். பொதுவுடைமைக் கட்சியிலேயே இரு பிரிவுகளாக இருக்கிறார்களே... அவ்வளவு ஏன், தற்போது தி.மு.க அமைச்சரவையில் இருக்கும் பாதிப் பேர் அ.தி.மு.க-காரர்கள்தானே..?”