Published:Updated:

`சர்ச்சை ட்வீட்; 2 மணி நேரத்தில் நடவடிக்கை!’ - ராஜேந்திர பாலாஜி கட்சிப் பதவி பறிப்பின் பின்னணி

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜியிடம் இதுகுறித்து முதல்வர் தரப்பில் விளக்கம் கேட்க, அவர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் பதில் அளித்தாகக் கூறப்படுகிறது.

``இந்துக்களின் மத வழிபாட்டு தன்மைகளையும் நம்பிக்கைகளையும் இயற்கையான வழிபாடுகளையும் கிண்டல் செய்த போலி போராளிகளுக்கு இன்று நாட்டில் நடக்க கூடிய சம்பவம் ஒரு பாடம்.. ஒரு படிப்பினை..! இறைவா கிருஷ்ணபரமாத்வே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கொரோனோவிடமிருந்து காப்பாற்று” என்று ட்விட்ட் செய்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் ராஜேந்திர பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்துள்ளது அ.தி.மு.க தலைமை.

`சர்ச்சை ட்வீட்; 2 மணி நேரத்தில் நடவடிக்கை!’ - ராஜேந்திர பாலாஜி கட்சிப் பதவி பறிப்பின் பின்னணி

பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சையான கருத்துகளை அவ்வப்போது கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வது வழக்கமாகி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, `மோடி எங்களது டாடி’ என்று ஆரம்பித்தவர் ஒருகட்டத்தில் சிஏஏ விவகாரத்தில் ஒரு சமூகத்தை கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்தார். அப்போதே ஆளும் தலைமை அவர் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. குறிப்பாக அமைச்சரவை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் சிலரே, `ராஜேந்திர பாலாஜியின் பேச்சினால் சிறுபான்மை சமூகத்தினர் நம்மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்’ என்று முதல்வரிடம் புகார் அளித்தனர்.

முதல்வரும், துணை முதல்வரும் அவரைத் தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு சில நாள்களுக்கு முன்பு வாரப் பத்திரிக்கை நிருபர் ஒருவர் விருதுநகரில் தாக்கப்பட்டார். அதற்கு பின்னணியில் இருந்தது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்று குற்றச்சாட்டும் எழுந்தது. பல நேரங்களில் இந்து மதத்திற்கு ஆதரவான கருத்துகளை துாக்கிப்பிடிக்கும் நபராக பாலாஜி இருந்துவந்ததால், பி.ஜே.பி தரப்பும் மறைமுகமாக அவருக்க ஆதவராக இருந்துவந்தது என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொரனோ முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கிவரும் நிலையி,ல் இன்று மாலை ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்து வழிபாடுகளை கிண்டல் செய்தவர்களுக்கு ஒரு பாடம் என்று கொரனோ நோய் குறித்து பதிவிட்டார். சில நிமிடங்களில் இந்த ட்விட்டர் பதிவு வைரலானது. உளவுத்துறை உடனடியாக இந்த ட்விட்டர் பதிவை முதல்வரிடம் கொண்டு சேர்த்தாகச் சொல்கிறார்கள்.

`ஒழுங்காக இருக்கச் சொல்லுங்க.. இல்லைன்னா?!'- ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கடுகடுத்த முதல்வர்

ராஜேந்திர பாலாஜியிடம் இதுகுறித்து முதல்வர் தரப்பில் விளக்கம் கேட்க, அவர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் பதில் அளித்தாகக் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்பு கொண்டுபேசி, ராஜேந்திர பாலாஜி வசம் உள்ள விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியை பறிக்க உத்தரவிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.கவினர். மேலும், அவரிடம் இருக்கும் அமைச்சர் பதவியை பறிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், அவர் பதவியை உடனடியாக பறிக்க முடியாது என்பதால் அடுத்த சில நாள்களில் அமைச்சர் பதவி பறிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இந்நிலையில் பாலாஜியின் பதவி பறிப்பு விவகாரத்தில் பி.ஜே.பி தரப்பிலிருந்து முதல்வருக்கு அழுத்தம் வரலாம் என்றும் கூறப்படுகிறது. அவரது அமைச்சர் பதவியைப் பறிக்கும் முன்பாக அதைத் தடுத்திட வேண்டும் என்பதில் தமிழக பி.ஜே.பி தலைமை உறுதியாக இருக்கிறது என்றும் பேசப்படுகிறது. விரைவில் முதல்வரிடம் இதுகுறித்து பி.ஜே.பி தரப்பினர் பேச்சுவார்த்தையும் நடத்த இருக்கிறார்கள். மேலும், விருதுநகரில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவலர்களும் வாபஸ் வாங்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு