Published:Updated:

அ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள்!

- அ.தி.மு.க-வைப் பிரித்துமேய்கிறார் அன்வர் ராஜா

பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க பொன்விழா கொண்டாடிவரும் இந்தத் தருணத்தில்... தேர்தல் தோல்விகள், சசிகலா வரவு, இரட்டைத் தலைமை சர்ச்சை, கொடநாடு வழக்கு, அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என அடுக்கடுக்கான சிக்கல்களும் வரிசைகட்டி நிற்கின்றன. நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில், அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவிடம் பேசினோம்...

“ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்திருப்பது, கட்சியின் அஸ்திவாரமே பலமிழந்துவிட்டது என்பதைத்தானே காட்டுகிறது?’’

“அப்படிச் சொல்ல முடியாது. 1986-ல் எம்.ஜி.ஆர் தலைமையில் கட்சி இருந்தபோதே, அப்போதைய உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க பெரும் பான்மையான இடங்களில் வெற்றிபெற முடியாமல் போனதுண்டு. ஆனால், அதன் பிறகு வீறுகொண்டு எழவில்லையா? பொதுவாக உள்ளாட்சித் தேர்தல் என்பது, எப்போதுமே ஆளுங்கட்சிக்குச் சாதகமாகத்தான் இருக்கும். ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்தால்தான், நம் ஊருக்குத் தேவையானதைச் செய்துதருவார்கள் என்று மக்கள் இயல்பாகவே நினைப்பார்கள். அதோடு, அதிகார துஷ்பிரயோகம், பணப் பட்டுவாடா ஆகியவற்றின் மூலமும் இவ்வளவு பெரிய வெற்றியை தி.மு.க-வினர் சாத்தியப்படுத்திவிட்டனர்.’’

“பா.ஜ.க கூட்டணியால்தான் அ.தி.மு.க தோல்வியைச் சந்திக்கிறது என்று கடந்தகாலங்களில் நீங்கள் கூறியிருந்தீர்களே?’’

“ஆமாம்... நிறைய முறை சொல்லியிருக்கிறேன். அ.தி.மு.க-வின் பின்னடைவுக்கான காரணங்களில் பா.ஜ.க கூட்டணியும் ஒன்று. வாஜ்பாய் காலத்து பா.ஜ.க இப்போது கிடையாது; மாறாக, மதத்தின் பெயரால் மனிதர்களைப் பிரித்தாள நினைக்கிற கட்சியாக மாறிவிட்டது. இதனால், சிறுபான்மையினரின் வாக்குகள் அ.தி.மு.க-வுக்குக் கிடைப்பதில்லை. எனவே, அ.தி.மு.க இனி தனித்துத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

அடுத்து, வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு கொடுத்ததும் அ.தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. தென் தமிழ்நாட்டின் முக்குலத்தோர் வாக்குகளும், வட தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளும்தான் அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய பலம். ஆனால், இந்த உள் இட ஒதுக்கீட்டால், வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு எதிராகத் திரும்பிவிட்டன. உள்ளாட்சித் தேர்தல் வரை அ.தி.மு.க-வின் பின்னடைவு தொடர்வதற்கு இதுவும் காரணம்.’’

“உட்கட்சிப் பிரச்னை மற்றும் இரட்டைத் தலைமைக் குழப்பங்களால்தான் அ.தி.மு.க-வுக்கு இவ்வளவு பெரிய தோல்வி என்கிறார்களே?’’

“அ.தி.மு.க-வுக்குள் குழப்பங்கள் இருக்கின்றனதாம். அதனால், கட்சிக்குச் சிறிது பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பதும் உண்மைதான். கட்சிப் பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க, வழக்கமாகக் கூட்டங்கள் கூட்டப்படும். இந்த நடைமுறை இப்போது அ.தி.மு.க-வில் இல்லை. அதனால்தான் ‘நாங்கள் வகுத்த தேர்தல் வியூகம் தவறாகிவிட்டது’ என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரே வருந்திப் பேசுகிறார். இப்போதுகூட கட்சியின் உயர் மட்டக்குழு என 11 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை ஒரு பிரச்னைக்காகவும் இந்தக் குழு கூடிப் பேசியதில்லை.

பொருளாதாரரீதியாகத் தங்களைப் பலப்படுத்திக்கொண்ட கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள் எல்லோருமே கட்சியைக் காப்பாற்ற நினைக்காமல், தங்களைக் காப்பாற்றிக்கொள்கிற நோக்கில் தவறான முடிவுகளை எடுத்துவருகின்றனர். இல்லையென்றால், சட்டசபையிலேயே தி.மு.க அரசைப் பாராட்டி அ.தி.மு.க உறுப்பினர்கள் பேசியிருப்பார்களா?’’

“அண்மையில், எம்.ஜி.ஆர் குறித்த துரைமுருகன் பேச்சுக்கு, உரிய எதிர்ப்பை அ.தி.மு.க பதிவுசெய்யவில்லை என நீங்கள் வருத்தப்பட்டிருந்தீர்களே?’’

“ ‘எம்.ஜி.ஆர் துரோகி’ என்று துரைமுருகன் சொன்னார். அடுத்த நொடி, அ.தி.மு.க சார்பில் தமிழ்நாடு முழுக்க அனைவரும் பொங்கியெழுந்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று எதிர்வினையாற்றியிருக்க வேண்டாமா? மாறாக, ‘அறிக்கை விடலாம்’ என்று சொன்னால், என்ன அர்த்தம்... அ.தி.மு.க என்ன தொண்டர்களே இல்லாத ‘லெட்டர் பேட்’ கட்சியா? இதைத்தான் தலைமைக் கழகத்தில் நான் கேட்டேன்... ஆனால், யாருமே பதில் சொல்லவில்லை. வழக்கு, கைது என்றெல்லாம் பயப்படுவதால்தான் எம்.ஜி.ஆர் குறித்த விமர்சனத்துக்கு எதிராக உறுதியான எதிர்ப்பைத் தெரிவிக்காமல் பம்மி பதுங்கினார்கள்.’’

அ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள்!

“நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில், சசிகலா போன்ற ஆளுமைமிக்க தலைவரால் மட்டுமே அ.தி.மு.க-வை எழுச்சிபெறச் செய்ய முடியும் என்கிறார்களே?’’

“சசிகலா என்ற தனிப்பட்ட ஒருவரால் மட்டுமே கட்சியை மீட்டெடுத்துவிட முடியும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று ஆளுமைமிக்க தலைவர்கள் யாரும் இன்றைய அ.தி.மு.க-வில் இல்லை. எனவே, எல்லோரும் ஒற்றுமையாகச் சேர்ந்து நின்றால் மட்டுமே அ.தி.மு.க-வை மீண்டும் வலிமையான கட்சியாக வழிநடத்திச் செல்ல முடியும். எம்.ஜி.ஆரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அனைத்துச் சக்திகளும் ஒன்றுபடவேண்டியது காலத்தின் கட்டாயம்!’’

“அரசியல் சுற்றுப்பயணம் ஆரம்பித்துள்ள சசிகலாவின் பின்னே அ.தி.மு.க தொண்டர்கள் அணிதிரள்வார்களா?’’

“எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமும். தலைவர்கள்தான் கருத்து வேறுபாடுகளோடு மோதிக்கொண்டிருப்பார்கள். மற்றபடி, எந்தவொரு சக்தியும் அ.தி.மு.க-வைவிட்டு வெளியேற தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, சசிகலா மீண்டும் அ.தி.மு.க-வுக்குள் வந்தால் நல்லது என்றுதான் தொண்டர்கள் நினைப்பார்கள்.’’

“ஆனால், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் யாரும் சசிகலா சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்களே?’’

“ஆமாம்... அது கட்சிக் கட்டுப்பாடு. கட்சி நிர்வாகிகள் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால், கட்சியின் அடிப்படைத் தொண்டர்களுக்கு, பொதுமக்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் கிடையாது; கட்டுப்படுத்தவும் முடியாது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு