Published:Updated:

பன்னீரும் எடப்பாடியும் நிரந்தரத் தலைவர்கள் இல்லை !

சி.பொன்னையன்
பிரீமியம் ஸ்டோரி
News
சி.பொன்னையன்

- விதிமுறைகளை விளக்குகிறார் சி.பொன்னையன்

ஒருவழியாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை நடத்தி முடித்து ஓய்வில் இருந்தார் முன்னாள் அமைச்சரும், கட்சியின் சீனியருமான சி.பொன்னையன். உட்கட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட குழப்பங்கள், தள்ளுமுள்ளுகள், கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் என்று அவரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பொன்னையனை நேரில் சந்தித்து உரையாடினோம்...

“பன்னீர், எடப்பாடி ஆகியோரின் கட்சிப் பதவிகளைத் தக்கவைப்பதற்காகவே உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறதே?”

“முக்கியமான கேள்வி... அ.தி.மு.க-வின் சட்டவிதிகளின் அடிப்படையில், பொதுச்செயலாளர் பதவிக்கு ஒருவர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்பட வேண்டும். தற்போது அந்தப் பதவி இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் பெயர்களுக்கு மாற்றுவதற்குப் பொதுக்குழுவால் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேசமயம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளும் தற்காலிக நியமனங்களே. ஆனால், மாற்றுக் கட்சியினர் சிலர், ‘அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் பொறுப்பில் இருக்க முடியாது’ என்று தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பினார்கள். எனவே, சட்டரீதியாக இந்த இரண்டு பதவிகளுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.”

“தற்காலிக நியமனங்கள் என்றால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல நிரந்தரத் தலைவர்கள் இல்லையா இவர்கள்?”

“ஆமாம். பன்னீரும் எடப்பாடியும் நிரந்தரத் தலைவர்கள் இல்லை. இவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் மட்டுமே. நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மா மட்டும்தான்.”

“ஆனால், இந்தத் தேர்தல் அரசியல் நாடகம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றனவே?”

“சூழ்ச்சிக்காரர்கள் இப்படிப் பேசலாம்... ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் நகமும் சதையும்போல இணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் அதிகாரங்கள் சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்போது இல்லையென்றால் ஏதாவது ஒருநாளில் இந்தத் தேர்தலை நடத்தியிருப்போம். அதுதான் கட்சியின் விதிமுறை. இதுமட்டுமல்ல... மாவட்ட, நகர, ஒன்றியச் செயலாளர்களுக்கான தேர்தல்களையும் அடுத்து நடத்தப்போகிறோம். எனவே, இது தேவையில்லாத விமர்சனம்.”

“சட்டவிதிகளின்படிதான் தேர்தல் நடத்தப்பட்டது என்கிறீர்கள்... அப்படியென்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு வேட்புமனு வாங்க வந்தவர்கள் ஏன் அடித்து விரட்டப்பட்டார்கள்?”

“முழுக்க முழுக்கத் தவறான தகவல். அ.தி.மு.க-வினர் யாரையும் அடித்து விரட்டவில்லை. ‘ஐந்தாண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். 8.10.2018 தேதியிட்ட அல்லது அதற்குப் பிந்தைய தேதியிட்ட உறுப்பினர் அட்டை வைத்திருக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கைகளுக்காகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கக் கூடாது. பொதுக்குழு உறுப்பினர் 15 பேர் வழிமொழியவும், முன்மொழியவும் வேண்டும்.’ இவையெல்லாம் இருந்தால்தான் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியும். அவர்களுக்குத்தான் வேட்புமனுக்கள் வழங்கப்படும். பன்னீர், எடப்பாடி என அனைவருக்குமே இந்த விதி பொருந்தும். அப்படித்தான் இந்தத் தகுதிகளோடு சுமார் 250 பேர் வேட்புமனுக்கள் வாங்கியிருக்கிறார்கள்.”

பன்னீரும் எடப்பாடியும் நிரந்தரத் தலைவர்கள் இல்லை !

“நீங்கள் சொன்ன அனைத்துத் தகுதிகள் இருந்தும் வேட்புமனு வழங்காமல், என்னை அடித்து விரட்டினார்கள் என்று ஒருவர் புகார் அளித்திருக்கிறாரே?”

“கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரின் காரில் அந்த நபர் கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். அவர் வேட்புமனு கேட்டபோது நான் அவரிடம், ‘போட்டியிடுவதற்கான தகுதிகள் அனைத்தும் இருக்கின்றனவா?’ என்று கேட்டேன். அவரிடம் எதுவும் இல்லை. அதனால், ‘எல்லாவற்றையும் தயார் செய்துகொண்டு வாருங்கள், மனு தருகிறேன்’ என்று சொல்லி அனுப்பிவிட்டேன். வெளியில் சென்றவர், ‘எம்.ஜி.ஆர் மாளிகை இருக்கிறது... புரட்சித்தலைவர் இல்லை’ என்று கூறி இன்னும் சில தகாத வார்த்தைகளைப் பேசியிருக்கிறார். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் நடந்தது.”

“கடந்த காலங்களில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஐந்து நாள்கள் அவகாசம் வழங்கப்பட்ட சூழலில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இரண்டு நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தது ஏன்?”

“முன்னர் வேட்புமனு வாங்க சென்னையிலிருக்கும் தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டும். ஆனால், இப்போது எங்கிருந்து வேண்டுமானாலும் வேட்புமனுக்களைக் கட்சியில் அளிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டு டைப் செய்து தாக்கல் செய்யலாம். அப்படிக் கொடுக்கப்பட்டால் அவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே இரண்டு நாள்கள் அவகாசமே போதுமானது.”

“அ.தி.மு.க மிகப்பெரிய ஜனநாயகக் கட்சி என்று சொல்லிவிட்டு முடிவுகளைத் தலைவர்கள் மட்டுமே எடுப்பதாக எழும் விமர்சனங்கள் பற்றி..?

“மிகத் தவறானது. தொண்டர்களோடு கலந்து, இணைந்து செயல்படும் கட்சி அ.தி.மு.க மட்டுமே. வேறெந்தக் கட்சிக்கும் இதைச் சொல்வதற்குக்கூட தகுதியில்லை. எந்த முடிவாக இருந்தாலும் ஊராட்சி, ஒன்றியம், நகராட்சி, மாவட்டம் என அனைத்துத் தரப்பிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதில் எடுக்கப்படும் முடிவுகளையொட்டியே அ.தி.மு.க-வின் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.”

“பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறதா?”

“வருங்கால அரசியல் சூழல்தான் அதை முடிவு செய்யும். அப்படியொரு சூழல் உருவாகும்பட்சத்தில் பொதுக்குழு கூடி கட்சியின் நலனுக்கு எது சரியோ அதைச் செயல்படுத்தும்.”