அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

பா.ஜ.க-வால் எங்களை மிரட்டவோ பணியவைக்கவோ முடியாது! - ஜெயக்குமார் தடாலடி

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்குமார்

மக்கள் பிரச்னை தொடங்கி, ஆட்சியின் அத்துமீறல்கள், அவலங்கள், ஊழல்கள் அனைத்தையும் நாங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்.

ஆளுநரைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய பத்து பக்கப் புகார் மனுவை அளித்திருக்கிறார்கள். அ.தி.மு.க சார்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் புகார்கள், அதையொட்டி தி.மு.க வைத்த விமர்சனங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“ஆளுநரைச் சந்தித்தது, எடப்பாடி தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளத்தான் எனத் தி.மு.க-வினர் சொல்கிறார்களே?”

“கன்னித்தீவு கதைபோலக் கற்பனையாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில், மாநிலத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் நாங்கள் குரல் கொடுத்திருக்கிறோம். அரசியல மைப்பின்படி மாநிலத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஆளுநரின் கவனத் துக்கும் அதை எடுத்துச் செல்வது எங்கள் கடமை. அதைத்தான் செய்திருக்கிறோம்.”

“கள்ளக்குறிச்சி, கோவை குண்டு வெடிப்பு விவகாரங்களைக் குறித்தெல்லாம் இப்போதுதான் புகார் எடுத்துச் செல்ல நேரம் கிடைத்ததா?”

“ஆளுநரிடம் கொடுத்த புகார்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில், இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடியும் நானும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கிறோம். அனைத்து விவகாரங்கள் குறித்தும் நான் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறேன். எடப்பாடியின் ஆலோசனையின்பேரில்தான் அனைத்து கருத்துகளையும் சொல்கிறோம். நானும் மற்றவர்களும் சொல்வது எங்களுடைய தனிப்பட்ட கருத்துகள் அல்ல. கட்சியின் கருத்துகள்தான்.”

பா.ஜ.க-வால் எங்களை மிரட்டவோ பணியவைக்கவோ முடியாது! - ஜெயக்குமார் தடாலடி

“ `எதிர்க்கட்சி அரசியலை விட்டுவிட்டு, வழக்குகளின் பின்னால் அ.தி.மு.க ஓடிக்கொண்டிருக்கிறது’ என விமர்சிக்கிறார்களே?”

“தி.மு.க-வின் ஐடி விங் மூலமாக இப்படியான ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். மக்கள் பிரச்னை தொடங்கி, ஆட்சியின் அத்துமீறல்கள், அவலங்கள், ஊழல்கள் அனைத்தையும் நாங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். எங்களின் ஓட்டம் என்பது வழக்குகளை வைத்து இல்லை. மக்களின் பிரச்னையை ஒட்டித்தான். அ.தி.மு.க என்பது வீழ்த்த முடியாத ஓர் ஆலமரம்.”

“முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்திருக்கிறது. அப்படியானால் பா.ஜ.க-வும் உங்களை அடக்க நினைக்கிறது என எடுத்துக்கொள்ளலாமா?”

“பா.ஜ.க மட்டுமல்ல, எங்களை யாரும் மிரட்டவோ, பணியவைக்கவோ, எங்களுக்கு ஆலோசனை சொல்லவோ முடியாது. எங்களுக்கு என்று தனித்துவம் இருக்கிறது. எங்களைப் பணியவைப்பது எப்போதும் யாராலும் முடியாத விஷயம். நாங்கள் பந்து மாதிரி. எங்களை அடிக்க அடிக்க மேலே எழுந்துகொண்டேயிருப்போம். எத்தனை வழக்குகளை எங்கள்மீது தொடுத்தாலும், சட்டத்தின் பார்வையில் நாங்கள் அனைவரும் நிரபராதிகள்தான். நீதிமன்றத்தில் எங்களுக்குரிய நியாயத்தை எடுத்துவைத்து வழக்குகளிலிருந்து வெளியில் வருவோம்.”

“ ‘ஒரு பேனருக்கு 7,906 ரூபாய் கொடுத்திருக்கிறது அரசு’ என நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு, மிகைப்படுத்திச் சொல்வதுபோல இருக்கிறதே?”

“தஞ்சாவூரில் ஒரு பிரின்டருக்குக் கொடுத்த பில் காப்பியே இருக்கிறது. அதில் ஜி.எஸ்.டி எல்லாம் சேர்த்து 7,906 ரூபாய் கொடுத்திருக் கிறார்கள். வெறும் 2 கோடி ரூபாயில் முடிக்கவேண்டிய அந்தத் திட்டத்தை, 48 கோடி ரூபாயில் செய்திருக்கிறார்கள். இப்படித்தான் டாஸ்மாக் விவகாரத்திலும் முறைகேடுகள் நடக்கின்றன. விஞ்ஞானரீதியில் யோசித்து ஊழல் செய்கிறார்கள். அட்டைபோல மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சிவிட்டு ‘நம்ம ஊரு சூப்பரு’ என தி.மு.க அரசு பேனர் வைப்பது காமெடியாக இருக்கிறது.”

“ `திராவிட மாடல் தோல்வி’ என்கிறீர்கள். அ.தி.மு.க-வும் திராவிடக் கட்சிதான். அப்படியானால், அந்தத் தோல்வி உங்களுக்குமானதுதானே?”

“திராவிடம் என்பதிலிருந்து வளர்ந்தவைதான் தி.க., தி.மு.க., அ.தி.மு.க. அதை மறுக்க முடியாது. ஆனால், தி.மு.க அரசு, ‘திராவிடம்’ என்ற சொல்லுக்கே அர்த்தமற்ற அரசாக இருக்கிறது. திராவிடத்தைக் கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தி, மற்றவர்களால் எள்ளி நகையாடும் வகையில்தான் இன்றைய தி.மு.க அரசின் ஆட்சி இருக்கிறது. அதைத்தான் விமர்சனம் செய்கிறோம். எங்களுடையது எப்போதும் ‘அம்மாவின் ஆட்சி’ எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் இப்போதைய முதல்வரால் அப்படி ‘கலைஞரின் ஆட்சி’ எனச் சொல்ல முடிகிறதா?”

“ `அ.தி.மு.க-வினர் சுயமரியாதையற்று இருக்கிறார்கள்’ என்று விமர்சிக்கிறாரே தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி?”

“சுயமரியாதையைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க-வுக்குத் தகுதியே இல்லை. பதவிக்காகப் பல் இளித்துக்கொண்டு மத்திய அரசுக்குக் காவடி தூக்குகிறது தி.மு.க. கல்வி, காவிரிப் பிரச்னை, கச்சத்தீவு, முல்லைப்பெரியாறு விவகாரம் என அனைத்தையும் மத்திய அரசிடம் அடகுவைத்து, தமிழின உரிமையைக் காவுகொடுத்தது தி.மு.க. ‘எங்களுக்குப் பதவி, தோளில் போட்டிருக்கும் துண்டு’ என்றார் அண்ணா. ஒருபடி மேலே சென்று சொல்கிறேன். பதவி எங்களுக்கு கர்சீப் மாதிரி.”

“ ‘சட்டம்-ஒழுங்குப் பிரச்னை, மருத்துவமனை மரணங்கள் போன்றவை அ.தி.மு.க ஆட்சியிலும்தானே இருந்தன?’ என்ற விமர்சனத்துக்கு உங்கள் பதில்?”

“எந்த விவகாரத்தில் ஒப்பிட்டுப் பேசுவது என்ற அடிப்படை அறிவுகூட இல்லை இவர்களுக்கு. நிச்சயம் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை அனைத்து ஆட்சியிலும் இருக்கும். ஆனால், அதைக் கட்டுப்படுத்துகிறார்களா என்பதுதான் முக்கியம். எங்கள் ஆட்சியில் 10 சதவிகிதம்தான் குற்றங்களே நடந்தன. ஆனால், தற்போது முழுவீச்சில் குற்றச் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சுதந்திரமாகச் செயல்பட முடியால் ஏவல்துறையாக இருக்கிறோமே எனக் காவல்துறையினர் மனவேதனையோடு இருக்கிறார்கள்!”