Published:Updated:

ராஜேந்திர பாலாஜியும், உடுமலை ராதாகிருஷ்ணனும் பா.ஜ.க-வுக்குப் போகமாட்டார்கள்!

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார்

- ‘நம்பி’ சொல்கிறார் ஜெயக்குமார்...

ராஜேந்திர பாலாஜியும், உடுமலை ராதாகிருஷ்ணனும் பா.ஜ.க-வுக்குப் போகமாட்டார்கள்!

- ‘நம்பி’ சொல்கிறார் ஜெயக்குமார்...

Published:Updated:
ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார்

‘வெள்ளை அறிக்கை’, ‘லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு’ என அ.தி.மு.க மீது அடுத்தடுத்த அஸ்திரங்களை வீசிவருகிறது தமிழக அரசு. ஆனால், அதற்கெல்லாம் அசராமல், ‘தி.மு.க அரசு அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்துவதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறது’, ‘முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு என்பது பழிவாங்கும் நடவடிக்கை’ என்றெல்லாம் பேட்டி கொடுத்துவருகிறார் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பிஸியான நேரத்திலும் நேரம் ஒதுக்கி அவர் தந்த பேட்டி இது...

‘‘ `ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததைத்தானே தி.மு.க அரசு செய்துவருகிறது... இதை எப்படிப் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறீர்கள்?’’

‘‘தி.மு.க எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வை ஒடுக்குவதற்காக ‘லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை’ என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும். அதனால், இதைப் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். 2021 தேர்தல் பிரசாரத்தின்போதே, ‘அமைச்சர் வேலுமணி மீது வழக்கு தொடர்வோம்’ என்று சொன்னது தி.மு.க. ஆக, இது பழிவாங்கும் நடவடிக்கை என்பதில் சந்தேகமே இல்லை.’’

‘‘ஏற்கெனவே, எஸ்.பி.வேலுமணி மீது தி.மு.க மற்றும் அறப்போர் இயக்கம் உள்ளிட்ட தரப்புகள் தொடர்ந்திருக்கும் ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனதானே?’’

‘‘நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கின்றன; அங்கு சொல்லப்படும் தீர்ப்புக்கு எல்லோருமே கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால், வழக்குகள் நடைபெற்று வரும்போதே, சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குக் காவல்துறையை அனுப்பி சோதனை மேற்கொள்வது எந்த வகையில் நியாயம்? ‘அ.தி.மு.க-வினர் தவறானவர்கள்’ என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்’ என்ற எண்ணத்தால்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள். ஏற்கெனவே 1996, 2006-ம் ஆண்டுகளிலும் இதேபோல் செய்து, ‘அ.தி.மு.க-வை ஒடுக்கிவிடலாம்’ என்று கருணாநிதி நினைத்தார். ஆனால், அ.தி.மு.க மறுபடியும் வீறுகொண்டெழுந்து ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது வரலாறு.’’

‘‘தமிழ்நாட்டு அரசியலில் இனி ‘தி.மு.க - பா.ஜ.க இடையில்தான் போட்டி இருக்கும்’ என்று தமிழக பா.ஜ.க தலைவர் சொல்லியிருக்கிறாரே..?’’

‘‘எந்தக் கட்சியாக இருந்தாலும், ‘நாங்கள்தான் ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம். எங்களுக்கு மாற்று இவர்கள் மட்டும்தான்’ என்று தங்களை மட்டுமே பா.ஜ.க-வினர் முன்னிலைப் படுத்திக்கொள்வார்கள். அது அவர்களின் ஆசை. ஆனால், உண்மைநிலை என்னவென்பதைத் தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்தவகையில், ஜெ. மறைவுக்குப் பிறகும்கூட மிகப்பெரிய வாக்குவங்கியோடு அ.தி.மு.க திகழ்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் போட்டி என்பது அ.தி.மு.க - தி.மு.க இடையில் மட்டுமே இருக்கும்.’’

‘‘அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பா.ஜ.க-வில் இணையப்போவதாகத் தகவல்கள் வருகின்றனவே?’’

‘‘இல்லையில்லை... இந்தத் தகவலை ஏற்கெனவே எங்கள் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் மறுத்திருக்கிறார். ராஜேந்திர பாலாஜியும்கூட, தனது சொந்த வேலையாகத்தான் கேதார்நாத் போவதாகச் சொல்லியிருக்கிறார். இருவரும் பா.ஜ.க-வுக்குச் செல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.’’

‘‘கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், தமிழ்நாட்டின் மொத்தக் கடன் சுமை 5.75 லட்சம் கோடி ரூபாயாகிவிட்டது என்கிறாரே நிதியமைச்சர்?’’

‘‘கடந்த தி.மு.க ஆட்சியில் வாங்கப்பட்டிருந்த ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் வட்டியை அ.தி.மு.க அரசுதான் கட்டிவந்தது. நமக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை, கொரோனா ஊரடங்கு காலகட்டம் என எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்துவிட்டு நிதியமைச்சர் பேசியிருக்க வேண்டும். ஊரடங்கு காலகட்டத்தில், அரசுக்கு வருவாயே இல்லை. வருவாயே இல்லை என்பதற்காக அரசு ஊழியர்கள் ஊதியம், சமூகநலத் திட்டங்களுக்கான செலவுகள், மானியங்களைக் கொடுக்காமல் இருக்க முடியுமா? இதெல்லாம் பொருளாதார நிபுணரான நிதியமைச்சருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், இப்போது அவர் அரசியல்வாதியாகி விட்டதால், அரசியல் செய்கிறார்... அவ்வளவுதான்!’’

ராஜேந்திர பாலாஜியும், உடுமலை ராதாகிருஷ்ணனும் பா.ஜ.க-வுக்குப் போகமாட்டார்கள்!

‘‘தி.மு.க அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை, கடந்த அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்திவிட்டது என்கிறார்களே?’’

‘‘அது வெள்ளை அறிக்கையே அல்ல; வெற்று அறிக்கை. வெள்ளை அறிக்கையைச் சட்டமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும்... அதுதான் மரபு. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒருசில நாள்களே இருக்கும் சூழலில், செய்தியாளர்கள் முன்னிலையில் அதை வெளியிட வேண்டிய அவசரம் என்ன... இது சட்டமன்ற உரிமை மீறல் ஆகாதா? ஆக, இதிலிருந்து ‘பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, மகளிர் உதவித்தொகை, கல்விக்கடன் ரத்து’ என தி.மு.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஏமாற்றத்தை மக்கள் எதிர்கொள்வதற்கான முன்னோட்டமாகத் தான் இப்படியொரு வெற்று அறிக்கையை உள்நோக்கத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள்.’’

‘‘ஆனால், ‘நிதி நிலையைக் காரணம் காட்டி, தேர்தல் வாக்குறுதிகளைக் கைவிட மாட்டோம்’ என்று உறுதியளித்திருக்கிறாரே தமிழக நிதியமைச்சர்?’’

‘‘தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இதே நிதியமைச்சர்தான், ‘நாங்கள் என்ன தேதி குறிப்பிட்டா வாக்குறுதி கொடுத்தோம்...’ என்றும் கேட்டிருக்கிறார். இப்போது நிதியமைச்சர் பேசுவதிலிருந்தே பஸ் கட்டணம், மின் கட்டணம், வீட்டு வரி எல்லாம் உயரப்போகின்றன, மானியங்கள் ரத்தாகப்போகின்றன’ என்பது தெரிகிறது. இதுதான் தி.மு.க-வின் சமூகநீதியா?’’

‘‘அ.தி.மு.க-வின் அடுத்த அவைத்தலைவர் ஜெயக்குமார்தான் என்கிறார்களே?’’

(சிரிக்கிறார்) ‘‘இயக்கமே கதி என்றிருப்பவன் இந்த ஜெயக்குமார். மற்றபடி, பதவியை எதிர்பார்த்தெல்லாம் நான் கட்சிப்பணி ஆற்றவில்லை!’’