Published:Updated:

அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தை மதிக்கிறேன். ஆனால்...

- சுற்றிவளைத்துப் பேசும் ஜெயக்குமார்

பிரீமியம் ஸ்டோரி
சசிகலாவை முன்வைத்து, மறுபடியும் அ.தி.மு.க-வுக்குள் சடுகுடு ஆட்டங்கள் அரங்கேறிவருகின்றன. ஆனால், இந்தமுறை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் என தலைவர்கள் இருவருமே நேரடியாக மோதிக்கொள்வதுதான் ஹைலைட். அ.தி.மு.க-வில் சசிகலா இணைப்பு... ‘சான்ஸே இல்லை!’ என்கிறார் எடப்பாடி. ‘கட்சி முடிவெடுக்கும்!’ என்கிறார் பன்னீர். பரபரப்பான இந்தச் சூழலில் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்துப் பேசினேன்...

“அ.தி.மு.க-வில் சசிகலாவைச் சேர்க்க மாட்டோம் என்று பிடிவாதமாக மறுக்கிற அளவுக்கு சசிகலா, அப்படி என்ன கெடுதல் செய்துவிட்டார்?’’

“ஜெயலலிதா மரணத்தின்போது அவரோடு உடனிருந்தவர் சசிகலா. எங்களையெல்லாம் பார்க்கவே விடவில்லை. இதற்கிடையே, ஜெ. மரணம் குறித்துப் பல்வேறு கருத்துகள் மக்களிடையேயும், கட்சித் தொண்டர்களிடையேயும் நிலவிவருகின்றன. மரணம் குறித்த உண்மையை அறிவதற்காக அமைக்கப்பட்ட கமிஷன் விசாரணையும் உச்ச நீதிமன்றத் தடையால் நிற்கிறது. இந்த நிலையில், மக்களாலும் தொண்டர்களாலும் விரும்பப்படாத ஒருவரை அ.தி.மு.க-வால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’’

“ஆனால், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைக்க ஆர்வம் காட்டிவருகிறாரே?’’

“அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர். எனவே, அவரை நான் விமர்சனம் செய்யக் கூடாது. அது ஆரோக்கியமான அரசியலும் அல்ல. அப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியலை நான் என்றைக்கும் செய்ய மாட்டேன். எனவே அவரை நான் மதிக்கிறேன். அதேசமயம், காலத்தின் கட்டாயமாகக் கடந்த காலத்தில் என்னென்ன அரசியல் நிகழ்வுகள் நடந்தன என்பதைப் பற்றி சொல்லவேண்டியது என் கடமை.

அதாவது, சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியது அண்ணன் ஓ.பன்னீர்செல்வம்தான். அதேபோல், கட்சியின் இரு அணிகள் இணையும்போதும் ‘சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த நிலையிலும் அ.தி.மு.க-வுக்குள் வரக் கூடாது’ என்று நிபந்தனை விதித்தவரும் அவர்தான்.

அண்மையில், சசிகலாவோடு தொலைபேசியில் பேசியவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கான தலைமைக் கழக தீர்மானத்திலும்கூட ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டுள்ளார். அதன்படியே சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆக, இவையெல்லாம் ‘சொல்ல மறந்த கதை’யாகிவிடக் கூடாது என்பதற்காகவே இப்போது நான் சொல்லிவிட்டேன்.’’

“அண்மையில், ‘சூரியனைப் பார்த்து ஏதோ...’ என்று சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பது அரசியல் நாகரிகம்தானா?’’

“அண்மையில் சசிகலா, அ.தி.மு.க கொடியை ஏற்றியிருப்பதோடு, தன்னைத்தானே ‘அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர்’ என்று குறிப்பிட்டு அடிக்கல்லும் நாட்டியுள்ளார். இது விஷயமாக அவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறேன். ஆனாலும்கூட, சசிகலா மீது வழக்கு பதிவதற்கே தி.மு.க தலைமையிலான தமிழக அரசின் காவல்துறை யோசிக்கிறது. நான் ஒரு முன்னாள் அமைச்சர். கடந்த 25 வருடங்களாக எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறேன். ஆனால், நான் கொடுத்த புகாருக்கே இந்த நிலைமை. ஆக, சசிகலா தி.மு.க-வின் பி டீம் என்பது உறுதியாகிறது. அதனால்தான் காவல்துறையினர் சசிகலா மீது வழக்கு பதிவதற்கே சூரியனின் (தி.மு.க அரசை) பதிலை எதிர்பார்க்கிறார்கள். இதைத்தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எடுத்துக்காட்டினார். நீங்கள் ஏன் இதைத் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்?’’

“அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமே, ‘கட்சியினர் கண்ணியத்துடன் பேச வேண்டும்’ என்று எடப்பாடி பழனிசாமியின் பேச்சை மறைமுகமாகக் கண்டித்திருக்கிறார்தானே?’’

“அப்படியெல்லாம் யாரையும் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் சொல்லவும் இல்லை. எடப்பாடி பழனிசாமி கூறிய ‘சூரியனைப் பார்த்து...’ என்ற வார்த்தை கண்ணியக் குறைவானதும் இல்லை!’’

“தூத்துக்குடியில் சசிகலாவை ஆதரித்து தீர்மானம், நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கொடும்பாவி எரிப்பு போன்ற செயல்பாடுகள் சசிகலாவுக்கு அ.தி.மு.க-வில் செல்வாக்கு இருப்பதாகத்தானே காட்டுகிறது?’’

“நீங்கள் குறிப்பிடும் சம்பவங்களெல்லாம் சும்மா பத்து இருபது பேர் டி.வி செய்திக்காகச் செய்துவரும் செயல்கள். மற்றபடி தமிழ்நாடு முழுக்க உள்ள அ.தி.மு.க என்பது மிகப்பெரிய கடல். அ.ம.மு.க-வைச் சேர்ந்த நான்கு பேர் ஆங்காங்கே கூடி நின்று அ.தி.மு.க கொடியைப் பிடித்துக்கொண்டு கோஷம் போடுவதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. கட்சிக்குள் இருந்துகொண்டே சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை யார் எடுத்தாலும் அவர்களைக் கட்சியைவிட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தே தீருவோம். இதில் எந்தவித சமரசமும் கிடையாது!’’

அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தை மதிக்கிறேன். ஆனால்...

“அப்படியென்றால், தற்போது சசிகலா ஆதரவு நிலை எடுத்துவரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?’’

“அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் ஓ.பன்னீர்செல்வம் அவரது கருத்தைச் சொல்லியிருக்கிறார். கடந்தகாலத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பதை என் கருத்தாக, அதாவது கட்சியின் கருத்தாக நான் சொல்லியிருக்கிறேன். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கெல்லாம் மேலான அதிகாரம் படைத்தது கட்சியின் பொதுக்குழுதான். மேலும் நடப்பதையெல்லாம் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும்கூட பார்த்தே வருகிறார்கள். இவர்களெல்லாம்தான் சிறந்த நீதிபதி!’’

“அண்மைக்காலமாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் சில தலைவர்கள் தி.மு.க அரசை, நேரடியாகவே பாராட்டிவருகிறார்களே?’’

“பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகான தி.மு.க என்பது, தமிழகத்தையே சீரழித்துவிட்டது. எனவே, எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.க-வோடு ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை. தி.மு.க-வை ‘தீய சக்தி’ என்றே அழைத்துவந்தார் ஜெயலலிதா. ஆக, எங்கள் கட்சித் தலைவர்கள் சொல்லிக்கொடுத்த பாதையில்தான் நாங்கள் பயணித்துவருகிறோம். அதேசமயம், யாரையும் குறிப்பிட்டு இதை நான் சொல்லவில்லை... எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு மாறாக நாம் செல்ல ஆரம்பித்தால், கட்சியின் தொண்டர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் வேறுபட்டுவிடுவோம். புரியவேண்டியவர்களுக்கு இது புரிந்தால் நல்லது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு