தவறு செய்யும் அமைச்சர்களை நீக்கும் தைரியம் ஸ்டாலினுக்கு கிடையாது! - ஜெயக்குமார் சுளீர்

ஸ்டாலினின் மருமகன் சபரீசன் விரைவில் ஆட்சிக்கு வரலாம்!
அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி மீது, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப் பரபரப்பாகக் கிளம்பிக்கொண்டிருந்தார், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். மழை ஓய அவர் காத்திருந்த பொழுதில், அவரது இல்லத்தில் சந்தித்துச் சில கேள்விகளை முன்வைத்தேன்...
“ஆட்சியிலிருந்தபோது செல்வாக்கோடு வலம்வந்தீர்கள். இடையில் கொஞ்ச நாள் நீங்கள் ஓரங்கட்டப்பட்டதாகப் பேச்சுகள் அடிபட்டன. இப்போது மெதுவாகத் தலையைக் காட்டுகிறீர்கள்... ஏன் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்?”
“அன்றும் இன்றும் என்றும் ஒரே மாதிரி இருப்பவன் நான். ஆளுங்கட்சியாக இருக்கும்போது கட்சியின் விவகாரங்கள், எதிர்க்கட்சியின் விமர்சனத்துக்கான பதில்களைக் கையாண்டேன். இப்போது எதிர்க்கட்சி வரிசையில் ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறேன். புரட்சித்தலைவர், அம்மா இருவரும் ‘தி.மு.க என்பது தீயசக்தி’ என அடையாளம் காட்டி, அதற்கு எதிராக இயங்கினார்கள். அந்தக் கொள்கையிலிருந்து என்றும் மாற மாட்டோம்.”
“அ.தி.மு.க இன்று தி.மு.க-வை வலுவாக எதிர்த்துக்கொண்டிருக்கிறதா?”
“தி.மு.க எங்கெல்லாம் மக்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கிறதோ அங்கெல்லாம் அ.தி.மு.க எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. கட்சியில் எத்தனையோ பிரச்னைகள் இருந்தாலும், எங்களின் ஜனநாயகக் கடமையிலிருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம்.”
“ `அ.தி.மு.க திராவிடக் கட்சியே இல்லை’ என்கிற விமர்சனத்தை, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முன்வைக்கின்றனவே?”
“கட்சியின் பெயரிலேயே ‘திராவிடம்’ இருக்கும்போது, எப்படி திராவிடக் கட்சியாக அ.தி.மு.க இல்லாமல் போகும்... அ.தி.மு.க-வின் திட்டங்களுக்கு லேபிள் ஒட்டுவதுபோல், இங்கிருந்து சென்றவர்களைவைத்து ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் திராவிடக் கொள்கை பற்றிப் பேசுகிறார்கள்.பட்டியலின மக்களை அடிப்பது, ஒதுங்கி நின்று பேசுவது, பொதுமக்களை எடுத்தெறிந்து நடத்துவதுதான் சமூகநீதி நிலைநாட்டலா... தி.மு.க அமைச்சர்களின் நடத்தை குறித்து நன்கு தெரிந்திருந்தும், ‘பேச்சுகளை வெட்டி, ஒட்டி வெளியிடுகிறார்கள்’ என்று நியாயப்படுத்திப் பேசுவது ஒரு தலைவருக்கு அழகா... தவறு செய்யும் அமைச்சர்களை நீக்கும் தைரியமோ, துப்போ ஸ்டாலினுக்குக் கிடையாது. உண்மையான ‘திராவிட மாடல்’ என்றால் நாங்கள்தான். திராவிடம் என்பது அ.தி.மு.க-வுக்கு மட்டுமே சொந்தம். சமத்துவம், சகோதரத்துவம், சமநிலை என்பதை நாங்கள்தான் கடைப்பிடிக்கிறோம்.”
“ஆனால், உங்கள் கட்சியில், இன்று ஒரு சாதியினரின் ஆதிக்கத்தைப் பெருமையாகப் பேசிக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறதே?”
“ ‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துவிட்டார். அ.தி.மு.க சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி. இங்கு எல்லோரையும் சமமாகத்தான் நடத்துகிறோம். பெண்களை மாவட்டச் செயலாளராக நியமித்திருப்பதோடு, சட்டமன்றத்துக்கும் அதிக அளவில் கொண்டுவந்திருக்கிறோம். பெண் உரிமை, சமத்துவம், சமூகநீதி என அனைத்துக்கும் அ.தி.மு.க-தான் முன்னோடி.”
“ஆர்.எஸ்.எஸ் ஊர்வல விஷயத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“தி.மு.க-வைப் பொறுத்தவரை பாம்புக்குத் தலை, மீனுக்கு வால் என்பதுபோல் ஒரு பக்கம் பா.ஜ.க ஆதரவு தேடிக்கொள்ள வேண்டும். மற்றொரு பக்கம் இஸ்லாமிய நண்பர்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது. சொல்லப்போனால் பா.ஜ.க-வின் கொத்தடிமையாக மாறிவருகிறது திமுக.”
“பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசும் விஷயங்கள், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிவருகின்றன. அது குறித்துக் கூட்டணிக் கட்சியான உங்கள் கருத்து?”
“அவர் கட்சியை வளர்ப்பதற்காக அவர் பேசுகிறார். ஜனநாயக நாட்டில் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். எது சரியோ அதைத்தான் எடுத்துக்கொள்ள முடியும். எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியாது. தவறுகளைச் சுட்டிக்காட்ட நாங்கள் என்றைக்குமே தயங்கியதில்லை. குதிரைக்குக் கடிவாளம் கட்டியதுபோல் கண்ணை மூடிக்கொண்டு போகக்கூடியவர்கள் இல்லை நாங்கள்.”
“சமீபத்தில், ‘சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நிலை தமிழ்நாட்டிலும் வரலாம்’ என்று நீங்கள் சொன்னது எதன் அடிப்படையில்?”
“தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க வெளியிலிருந்து ஆட்கள் வரத் தேவையில்லை. அவர்கள் குடும்பத்திலேயே அதற்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் சொல்லியிருந்தேன். அதற்கு உதாரணம் ஆந்திரா. என்.டி.ராமாராவின் மருமகனான சந்திரபாபு நாயுடு அவரைக் கவிழ்த்து, ஆட்சிக்கு வந்ததுபோல் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் விரைவில் வரலாம். அப்படியான சூழல்தான் போய்க் கொண்டிருக்கிறது.”
“ஓ.பி.எஸ் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாகத் தகவல் வருகிறதே?”
“அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை ஓ.பி.எஸ் ஒரு பொருட்டே இல்லை. அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். 99 சதவிகிதப் பொதுக்குழு உறுப்பினர்களும், இரட்டை இலைச் சின்னமும் எங்களிடம்தான் இருக்கிறார்கள். அவர் தனிக்கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். சீக்கிரம் ஆரம்பிக்க அவருக்கு என் வாழ்த்துகள்.”
“எப்போதுதான் அ.தி.மு.க உட்கட்சி விவகாரங்கள் ஒரு முடிவுக்கு வரும்?”
“எல்லாவற்றுக்கும் ஒரு எண்டு இருக்கிறது!”