அரசியல்
அலசல்
Published:Updated:

சசிகலா... தினகரன்... ஓ.பி.எஸ் பற்றி பேசுவதே டைம் வேஸ்ட்! - ஜெயக்குமார் அட்டாக்

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்குமார்

ஒரு தேசிய கட்சியில் மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலையால் தன்னிச்சையாக உடனே முடிவெடுக்க முடியாது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க., தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், தேர்தல் வண்டியைக் கிளப்பிவிட்டது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. தேர்தல் பணிகளுக்கு நடுவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சென்னை பட்டினப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். இனி பேட்டி...

“இடைத்தேர்தலில் பா.ஜ.க-வும் போட்டியிட விரும்புவதால்தானே தேர்தல் பணிக்குழு அமைத்து, முடிவைச் சொல்லாமல் தாமதப்படுத்துகிறார்கள்?”

“ ‘அ.தி.மு.க-தான் வலிமையான கட்சி’ என்று அண்ணாமலை கூறியதற்கு, ‘பா.ஜ.க போட்டியிடவில்லை’ என்பதுதான் சூசகமான பதில். மற்றபடி தேர்தல் பணிக்குழு அமைப்பதெல்லாம் வழக்கமான நடவடிக்கைதான். குழு போட்டதாலேயே வேட்பாளரை நிறுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

“பா.ஜ.க போட்டியிடவில்லை என்பதை அண்ணாமலை சூசகமாகச் சொல்லிவிட்டார் என்றால், பின்பு எதற்காக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்?”

“நல்ல கேள்வி. ஒரு தேசிய கட்சியில் மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலையால் தன்னிச்சையாக உடனே முடிவெடுக்க முடியாது. மேலும், தேர்தலுக்கு இன்னும் டைம் இருக்கிறது. எங்களுக்கான ஆதரவு தொடர்ச்சியாக இருக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.”

“ `இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம்’ என்று அறிவித்து, விருப்ப மனுவும் பெற்றுவிட்டீர்கள். பின்னர் ஏன் பா.ஜ.க முடிவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்?”

“ஜனநாயக முறைப்படி போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுவைப் பெற்றிருக்கிறோம். அவற்றிலிருந்து தகுதியான நபரைத் தேர்வு செய்து வேட்பாளராக அறிவிப்போம். அது கண்டிப்பாக நடக்கும். ஜனவரி மாதத்தைத் தாண்டியும் நாங்கள் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தால், நீங்கள் சொல்வதுபோலக் காத்துக்கிடப்பதாக ஆகலாம். இதில், நாங்கள் ஆதரவு கேட்டதற்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நாங்கள் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம்.”

“ `எங்கள் வண்டி கமலாலயம் பக்கம் போகாது’ என்று சொல்லிவிட்டு, அங்கு போய் ஆதரவு கேட்பது வெட்கமாக இல்லையா என்று உங்களை விமர்சிக்கிறார்களே?”

“ஆதிகாலம் தொட்டு கூட்டணி தர்மம் என்று ஒன்று இருக்கிறது. தற்போது நாங்கள் போட்டியிடுகிறோம். அதற்குக் கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேட்பதுதான் மரபு. அதில் எந்தத் தவறுமில்லை. ஓ.பி.எஸ்-போல, ‘நீங்கள் நில்லுங்கள்’ என்று யார் அலுவலகத்திலாவது போய் நின்றால்தான் தவறு.”

சசிகலா... தினகரன்... ஓ.பி.எஸ் பற்றி பேசுவதே டைம் வேஸ்ட்! - ஜெயக்குமார் அட்டாக்

“ஓ.பி.எஸ்-தான் ‘இடைத்தேர்தலில் போட்டியிடுவோம்’ என்பதில் உறுதியாக இருக்கிறாரே?”

‘‘அரசியல் சுயநல வித்தகரான ஓ.பி.எஸ்., ‘இடைத்தேர்தலில், நாங்கள் நிற்போம்... அதேநேரத்தில் பி.ஜே.பி நின்றால் ஆதரவு அளிப்போம்’ என்றுதான் கூறுகிறார். இதை எப்படி உறுதி என்று சொல்கிறீர்கள்?”

“அப்படியென்றால், ‘எடப்பாடியை எதிர்க்க பா.ஜ.க-வை, பன்னீர் தூண்டிவிடுகிறார்’ என்று எடுத்துக்கொள்ளலாமா?”

“ஓ.பி.எஸ்., பா.ஜ.க-வைத் தூண்டிவிடுகிறாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், தான் குடிக்காத பாலைக் கீழே கொட்டிவிட வேண்டும் என்று எண்ணக்கூடியவர் ஓ.பி.எஸ். எங்களை பலவீனப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வார்.”

“ஆனால், கட்சியை ஒன்றிணைக்க ‘இணைப்புக்குத் தயார்’ என்றுதானே ஓ.பி.எஸ் சொல்லிக் கொண்டிருக்கிறார்?”

“சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் இந்த மூன்று பேரின் தீய எண்ணமே இரட்டை இலையை முடக்க வேண்டும் என்பதுதான். அ.தி.மு.க-வை பலவீனப்படுத்த தி.மு.க-வின் ‘பி’ டீமாக செயல்படும் அவரையும், அவரின் கும்பலையும் எங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் பற்றிப் பேசுவதே டைம் வேஸ்ட்!”

“பொதுக்குழுவைத் தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. பிறகெப்படி, ‘சின்னம் கிடைக்கும்’ என்று நம்புகிறீர்கள்?”

“உயர் நீதிமன்ற அமர்வு, ‘பொதுக்குழு செல்லும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது. அதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தொண்டர்கள் ஓ.பி.எஸ்-ஸை மதிக்கவில்லை. ‘பொதுக்குழு நடத்துவேன்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாரே தவிர, நடத்தவில்லை. இப்போது விருப்ப மனு வாங்கவிருப்பதாகக் கூறுகிறார். எங்கு வைத்து வாங்குவார், நடுரோட்டிலா... கட்சி அலுவலகத்தில் நாங்கள்தானே இருக்கிறோம்... அப்படியென்றால், கட்சி எங்களிடம் இருக்கிறது என்றுதானே பொருள்... எனவே, சட்டரீதியாகச் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். மற்றபடி ஓ.பி.எஸ்-ஸுக்குத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. ஓட்டைப் பிரிக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு தி.மு.க கொடுத்த டாஸ்க். அதைத்தான் செய்கிறார்.”

“இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற எண்ணத்தால், இப்போதே சாக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டீர்களோ?”

“உண்மையில் தி.மு.க-வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் ஒரு தொகுதிக்கு அத்தனை அமைச்சர்களைக் களமிறக்கியிருக்கிறது. ‘காங்கிரஸ், தேவையில்லாத லக்கேஜ்’ என்று கூறிய அமைச்சர் கே.என்.நேருதான், தற்போது அவர்களைத் தூக்கிச் சுமக்கிறார். தோல்வியடைந்தாலும், அந்தப் பழியை காங்கிரஸ்மீது போட்டுவிடலாம் என்றுதான் அந்த இடம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

`மய்யம்’, `மாற்றம்’ என்று புதுசு புதுசாகச் சாயம் பூசி ஊரை ஏமாற்றிவந்த கமல் என்னும் பூனைக்குட்டியும் இப்போது வெளியே வந்துவிட்டது. ஆளும் தி.மு.க இடைத்தேர்தலில் வெற்றிபெற, பல நூறு கோடிகளைச் செலவு செய்யத் தயாராக இருக்கிறது. அதையெல்லாம் மீறி நாங்கள் வெற்றிபெறுவோம்.”