அரசியல்
அலசல்
Published:Updated:

நாங்கள் பேச ஆரம்பித்தால் பா.ஜ.க-வால் தாங்க முடியாது - தடதடக்கும் ஜெயக்குமார்

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்குமார்

உதயநிதி சென்று பிரதமர் மோடியைப் பார்த்து காலில் விழுந்துவிட்டு வந்தார் இல்லையா... அதற்குக் கிடைத்த பரிசுதான் இந்த அனுமதி

பா.ஜ.க தேசியத் தலைமையோடு அ.தி.மு.க தலைமை நெருக்கம் காட்டினாலும், தமிழக பா.ஜ.க-வினர் தொடர்ந்து அ.தி.மு.க-வை விமர்சித்துவருகின்றனர். அந்த விமர்சனங்கள் குறித்தும், அ.தி.மு.க தலைவர்களின் டெல்லி பயணம் தொடர்பாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“அ.தி.மு.க தலைவர்களின் திடீர் டெல்லி பயணத்தின் உண்மையான நோக்கம் என்ன?”

“எடப்பாடியார் கழகப் பொதுச்செயலாளராக ஆனதையொட்டிய மரியாதை நிமித்தமான சந்திப்புதான் அது. கூடவே, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலுள்ள சுணக்கம், அரசு ஊழியர்கள்மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள், அதிகரித்திருக்கும் மணல் கடத்தல், முதல்வரின் மருமகன் சபரீசன் - மகன் உதயநிதி ஆகியோர்மீது வைக்கப்படும் 30,000 கோடி ஊழல் புகார் என இங்கிருக்கும் அசாதாரண சூழல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சரிடம் விவரிக்கப்பட்டது. குறிப்பாக 15 அமைச்சர்கள்மீது ஊழல் புகாரை வழங்கினோம். அவை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமித் ஷா ஒப்புதல் அளித்திருக்கிறார்.”

“ஆனால், சமீபகாலமாக தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க-வுக்கிடையேயான மோதல் போக்கு குறித்துப் புகார் சொல்லவே இந்தப் பயணம் என்று சொல்லப்படுகிறதே?”

“தேர்தல் கூட்டணி குறித்துப் பேசியதாகவும், பா.ஜ.க தரப்பில் 25 தொகுதிகள் கேட்டதாகவும், நாங்கள் அதை மறுத்ததாகவும்கூடப் பல்வேறு செய்திகள் வெளிவந்தன. யார் வேண்டுமானாலும், என்ன கதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், உண்மை என்னவென்பது எங்களுக்குத்தானே தெரியும்... அங்கே அப்படி எந்தப் பஞ்சாயத்தும் நடக்கவில்லை. அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க, தமிழ்நாடு என்ன அட்சய பாத்திரமா?”

“இந்தச் சந்திப்புக்குப் பிறகும் தமிழ்நாடு பா.ஜ.க-வின் பொருளாளர், துணைத் தலைவர் ஆகியோர் அ.தி.மு.க-வை விமர்சனம் செய்திருக்கிறார்களே?”

“தமிழ்நாடு பா.ஜ.க-வினர் சர்ச்சையான கருத்துகளைத் தவிர்ப்பது நல்லது. அப்படிக் கருத்துச் சொல்லும்போது, கட்சித் தலைமை அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையில்லாமல் கருத்து சொல்லும் அண்ணாமலை, தன் கட்சிக்காரர்களை அடக்கிவைக்க வேண்டும். மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க-வின் பலம் என்னவென்று எங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி. எங்களுக்கும் எதிர்வினையாற்றத் தெரியும். நாங்கள் பேச ஆரம்பித்தால் பா.ஜ.க-வால் தாங்க முடியாது.”

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

“ `சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல்கள் வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றன’ எனத் தி.மு.க-வினர் சொல்கிறார்களே..?”

“திட்டங்களைச் செயல்படுத்துவதில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டுவதுதான் சி.ஏ.ஜி அறிக்கை. ஆனால், அதை வைத்துக்கொண்டு, எங்கள்மீது புழுதிவாரித் தூற்ற நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. சி.ஏ.ஜி அறிக்கை எதனடிப்படையில் இருக்கும் என்ற அடிப்படைப் புரிதலே இல்லாதவர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய அவமானம்!”

“ `சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேச அ.தி.மு.க-வுக்குத் தகுதியே இல்லை’ என்று கனிமொழி விமர்சிக்கிறாரே?”

“அ.தி.மு.க ஆட்சியில்தான் தமிழ்நாட்டுக்கு அமைதிப் பூங்கா என்ற பெயர் வந்தது. கடந்த 10 நாள்களில் சென்னை, திருவள்ளூரில் மட்டும் 10 கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை மோசமான நிலையில் வைத்துக்கொண்டு இவர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சகோதர பாசத்தில் ஸ்டாலினை திருப்திப்படுத்த கனிமொழி பேசுகிறார். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.”

“முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவுக்குச் சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்ததன் பின்னணி என்ன?”

“உதயநிதி சென்று பிரதமர் மோடியைப் பார்த்து காலில் விழுந்துவிட்டு வந்தார் இல்லையா... அதற்குக் கிடைத்த பரிசுதான் இந்த அனுமதி. தனக்குக் காரியம் ஆக வேண்டுமென்றால் தி.மு.க என்ன வேண்டுமானாலும் செய்யும். எப்போதும் தி.மு.க-வினர் மத்திய அரசுடனும், பா.ஜ.க-வுடனும் இணக்கமாகத்தான் இருப்பார்கள். உண்மையில் பா.ஜ.க-வின் கொத்தடிமை தி.மு.க-தான்.”

“திருச்சியில் ஓ.பி.எஸ்-ஸுக்குக் கூடிய கூட்டம் இ.பி.எஸ் தரப்பை திகைக்க வைத்துவிட்டதாமே?”

“ம்க்கும்... அது கூலிக்குக் கூடிய கூட்டம். இன்னும் சொல்லப் போனால், எங்கள் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரையும் என்னையும் ஒருமையில் பேசி திட்டவே நடத்திய கூட்டம் அது. அந்தளவுதான் அவருக்கு அரசியல் அறிவு இருக்கிறது. இதனால், பன்னீர் பேசிக்கொண்டிருந்தபோதே பலரும் எழுந்து சென்றுவிட்டார்கள்.”

“நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?”

(சிரிக்கிறார்...) “அதைக் கட்சிதான் முடிவு செய்யும்.’’