Published:Updated:

“ஸ்டாலின் ‘புகழாதீர்கள்’ என்றால் ‘இன்னும் புகழுங்கள்’ என்று அர்த்தம்!”

நத்தம் விசுவநாதன்
பிரீமியம் ஸ்டோரி
நத்தம் விசுவநாதன்

போட்டுத்தாக்கும் நத்தம் விசுவநாதன்

“ஸ்டாலின் ‘புகழாதீர்கள்’ என்றால் ‘இன்னும் புகழுங்கள்’ என்று அர்த்தம்!”

போட்டுத்தாக்கும் நத்தம் விசுவநாதன்

Published:Updated:
நத்தம் விசுவநாதன்
பிரீமியம் ஸ்டோரி
நத்தம் விசுவநாதன்

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ‘நால்வரணி’ என்று அழைக்கப்பட்ட ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் அ.தி.மு.க வட்டாரத்தில் சக்திவாய்ந்தவர்களாக அறியப்பட்டனர். அந்த நால்வரில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், தி.மு.க அரசை சட்டமன்றத்திலும் அரசியல் மேடைகளிலும் கடுமையாக விமர்சித்துவருகிறார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியை அ.தி.மு.க எப்படிப் பார்க்கிறது?”

“திராவிடர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, `திராவிட மாடல்’ என ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். திராவிட ‘மாதிரி’ என்று தமிழில் வைக்க வேண்டியதுதானே? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ‘திராவிட மாடல்’ என்று வார்த்தை ஜாலங்களின் மூலம் மக்களை திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.”

“பெண்களுக்குப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் உள்ளிட்ட சில வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்களே?”

“ஒருசில வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்கள்தான். அதற்கு அவர்கள் செய்திருக்கும் சுயதம்பட்ட விளம்பரங்கள் மிக அதிகம். ‘எங்களால்தான் சூரியன் உதிக்கிறது, எங்களால்தான் கடலில் அலையடிக்கிறது’ என்பதை மட்டும்தான் இன்னும் அவர்கள் சொல்லவில்லை. `பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவோம்’ என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது அது நடைமுறை சாத்தியமற்றது என்று நிதியமைச்சரே சொல்கிறார்.”

“அதே வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க-வும் அதை நிறைவேற்றவில்லையே?”

“அரசு ஊழியர்களை அழைத்து, `பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவது சாத்தியமில்லை’ என்று நாங்கள் சொன்னோம். நாங்கள் செய்யவில்லை என்று சொல்லித்தானே அவர்கள் வந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் செய்யவேண்டியதுதானே... நிதியமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த அரசு ஊழியர்கள், தங்கள் முதுகில் தி.மு.க குத்திவிட்டது என்று சொல்கிறார்கள். தி.மு.க அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டுமென்றால், மத்திய அரசின் முழு நிதியையும் தமிழகத்துக்குத் திருப்பிவிட வேண்டும். அந்த அளவுக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு, அதற்காகத் தங்கள் தலைவரை மிதமிஞ்சிய அளவுக்குப் புகழ்கிறார்கள்.”

“தன்னை அதிகமாகப் புகழ வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே சொல்லியிருக்கிறாரே?”

“அப்படி அவர் சொன்ன பிறகுதான் புகழ்ச்சி அதிகரித்திருக்கிறது. ‘புகழாதீர்கள்’ என்றால், ‘இன்னும் அதிகமாகப் புகழுங்கள்’ என்று அர்த்தம்போல. ஒன்று, முதல்வரைப் புகழ்கிறார்கள்... இல்லையென்றால், உதயநிதியைப் புகழ்கிறார்கள். அதுவும் உதயநிதி புகழ்ச்சி ஓவர் டோஸ்.”

“சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையை நிறைய பாராட்டினீர்களே..?”

“அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கியமான பல திட்டங்களை நிறுத்திவிட்டார்கள், முடக்கிவிட்டார்கள், பெயர்களை மாற்றிவிட்டார்கள். இந்து சமய அறநிலையத்துறையில் மட்டும் அம்மா அரசின் திட்டங்களைத் தொடர்வது மட்டுமின்றி, விரிவுபடுத்தவும் செய்திருக்கிறார்கள். அதற்காகத்தான் நன்றி தெரிவித்தேன். அதற்கும் ஆளுங்கட்சியினர் குறுக்கிட்டார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களை முழுமையாகப் பேச அனுமதித்துவிட்டு ஆளும் தரப்பு பதில் சொல்ல வேண்டும். ஆனால், நாங்கள் ஆரம்பித்தாலே குறுக்கிட்டுவிடுகிறார்கள்.”

“தி.மு.க அரசுமீது இவ்வளவு குற்றச்சாட்டுகளை அடுக்குகிறீர்கள். ஆனால், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் போட்டிருக்கிற ஆளுநரை நீங்கள் விமர்சிக்காதது ஏன்?”

“அந்த மசோதாக்களில் அவருக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதற்குக் கால அவகாசம் தேவைப்படலாம். மசோதாக்களை அனுப்பாமல் வைத்திருப்பது அவரது சிறப்பு அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆளுநரை விமர்சிக்க முடியாது. அவர், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்.”

“எப்படியாவது அ.தி.மு.க-வில் சேர வேண்டுமென்று சசிகலா முயல்கிறாரே?”

“சசிகலா, ஒரு முடிந்துபோன கதை. சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. பொதுக்குழுவில் தீர்மானம் போட்டு அவரை நீக்கிவிட்டு, இரட்டைத் தலைமையின் கீழ் நாங்கள் வெற்றிநடை போடுகிறோம். அவர் செய்த பாவங்களுக்கு ஆன்மிகப் பயணம் மூலமாகப் பிராயச்சித்தம் தேடட்டும்.”

“ஸ்டாலின் ‘புகழாதீர்கள்’ என்றால் ‘இன்னும் புகழுங்கள்’ என்று அர்த்தம்!”

“சசிகலா என்ன பாவம் செய்தார்?”

“கொஞ்ச நஞ்ச பாவமா செய்தார்... அம்மாவிடம் யார் நல்ல பெயர் எடுத்தாலும் சசிகலாவுக்குப் பிடிக்காது. வெளுத்ததெல்லாம் பால் என்று அம்மா நினைப்பார். அதைப் பயன்படுத்தி, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக்கொடுத்து, கட்சிக்காக உழைத்த எத்தனையோ பேரை சசிகலா காலிசெய்தார். தான் சொல்வதை மட்டும்தான் அம்மா கேட்க வேண்டும் என்று நினைப்பார். வேறு யார் பேச்சையாவது அம்மா கேட்டால், அந்த நபர் கட்சியில் இருக்க முடியாது. நால்வரணியில் இருந்த எங்களிடம் அம்மா பல ஆலோசனைகளைக் கேட்க ஆரம்பித்தது சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. எங்களைப் பற்றி அம்மாவிடம் தவறாகச் சொல்லிக்கொடுத்தார்.

இதுவரை பத்திரிகையாளர்கள் யாரிடமும் சொல்லாத ஒரு தகவலை, முதன்முறையாக உங்களிடம் சொல்கிறேன். 100 எம்.எல்.ஏ-க்களை ‘குரூப்’ சேர்த்துக்கொண்டு அம்மாவுக்கு எதிராக நானும் ஓ.பி.எஸ்-ஸும் சசித்திட்டம் போடுவதாக அம்மாவிடம் சசிகலா சொல்லியிருக்கிறார். அதை நம்பாத அம்மா, நேரடியாக எங்களை அழைத்துக் கேட்டார். ‘அப்படிப்பட்ட செல்வாக்குள்ள நபர்கள் யாரும் நம் கட்சியில் இருக்கிறார்களா அம்மா?’ என்று கேட்டேன். அந்தத் தகவலை நம்பாததற்கு அம்மாவிடம் நன்றி சொன்னேன். நடராஜனுடன் பேசிக்கொள்ளாதது மாதிரி அம்மாவிடம் சசிகலா நடித்தார். அதனால், நமக்காக சசிகலா வாழ்க்கையைத் தியாகம் செய்ததாக அம்மா நம்பினார். ஆனால், சசிகலாவும் நடராஜனும் சேர்ந்துதான் அம்மாவை இயக்கினார்கள். சசிகலாவை நீக்கியதால் கட்சி புனிதமடைந்திருக்கிறது.”

“ஆனால், சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஸே எடுத்திருப்பதாகச் செய்திகள் வந்தனவே..?”

“சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பி.எஸ். அவர் எப்படி சசிகலாவை ஆதரிப்பார்... அது, சில ஊடகங்களால் கிளப்பிவிடப்பட்ட தவறான செய்தி.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism