Published:Updated:

அடுத்த பொதுக்குழுவில் இ.பி.எஸ் தலைவராவார்! - பொள்ளாச்சி ஜெயராமன் பொளேர்

பொள்ளாச்சி ஜெயராமன்
பிரீமியம் ஸ்டோரி
பொள்ளாச்சி ஜெயராமன்

கட்சியினரை ஒருசில விஷயங்களால் அரவணைத்தார். அவ்வளவுதான். எடப்பாடி பேசாமல் இருந்து சாதிக்கிறார்.

அடுத்த பொதுக்குழுவில் இ.பி.எஸ் தலைவராவார்! - பொள்ளாச்சி ஜெயராமன் பொளேர்

கட்சியினரை ஒருசில விஷயங்களால் அரவணைத்தார். அவ்வளவுதான். எடப்பாடி பேசாமல் இருந்து சாதிக்கிறார்.

Published:Updated:
பொள்ளாச்சி ஜெயராமன்
பிரீமியம் ஸ்டோரி
பொள்ளாச்சி ஜெயராமன்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் கொளுந்துவிட்டு எரியும் நிலையில், முன்னாள் துணை சபாநாயகரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான பொள்ளாச்சி ஜெயராமனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்...

“ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி பெயரை முன்மொழிவது ஏன்?”

“எடப்பாடி பழனிசாமி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நல்லாட்சி கொடுத்து, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார். வேறுபாடு கருதாமல் செயல்பட்டதுடன், எளிதில் சந்திக்கக்கூடிய தலைவராகவும் திகழ்ந்ததால் கட்சிக்காரர்களின் அன்பையும் பெற்றிருக்கிறார். எனவேதான் நாங்கள் அனைவரும் அவரின் ஒற்றைத் தலைமையை விரும்புகிறோம். அவர் தலைவரானால்தான் அ.தி.மு.க-வை வளர்க்க முடியும். தி.மு.க-வை வலுவாக எதிர்க்கவும் அவரால் மட்டுமே முடியும்.”

“ஆனால், ஒற்றைத் தலைமையை ஏற்பதற்கான தகுதி தனக்கே இருப்பதாக ஓ.பி.எஸ் சொல்லியிருக்கிறாரே?”

“அம்மா மறைவுக்குப் பின்னர், இரண்டுபட்ட கட்சியை ஒன்றாக்கியது, ஆட்சியைச் சிறப்பாக வழிநடத்தியது என இ.பி.எஸ் தனது தகுதியை முழுமையாக நிரூபித்துக் காட்டிவிட்டார். ஓ.பி.எஸ் தனது திறமையை எங்கும் நிரூபிக்கவில்லை. அம்மா இருக்கும்போதுதான் சி.எம் ஆனாரே தவிர, தனியாக அவர் செயல்பட்டதில்லை.”

“ `இ.பி.எஸ் முதல்வராக இருந்தபோது, டெண்டர் கொடுத்தே நிர்வாகிகளை வளைத்துவிட்டார். அதனால்தான் அவர் பின்னால் இப்போது இத்தனை பேர் இருக்கிறார்கள்’ என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்களே?”

“அப்படியெல்லாம் அவர் யாருக்கும் ஆள் பார்த்துச் செய்யவில்லை. கட்சியினரை ஒருசில விஷயங்களால் அரவணைத்தார். அவ்வளவுதான். எடப்பாடி பேசாமல் இருந்து சாதிக்கிறார். அதை ஓ.பி.எஸ்-ஸால் செய்ய முடியாது.”

“இத்தனை பிரச்னைகளுக்கு நடுவே பொதுக்குழுவை ஏன் நடத்தியிருக்கத்தான் வேண்டுமா?”

“பொதுக்குழுவைக் கூட்டும் அறிவிப்பில் ஓ.பி.எஸ்-ஸும் தானே கையெழுத்திட்டி ருக்கிறார். இ.பி.எஸ்-தான் தலைமை ஏற்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் ஒருவரைத் தவிர அனைவரும் நினைக்கிறார்கள். ஆதரிக்கிறார்கள். பொதுக்குழு நடைபெற்றால், தன் பக்கம் ஆளே இருக்க மாட்டார்கள் என்பதை முன்பே அறிந்ததால்தான், பொதுக்குழுவை முடக்கப் பார்த்தார்.”

“பா.ஜ.க-வுடன் பழனிசாமி நெருக்கமாக இருப்பதுபோல் தெரிகிறதே..?”

“அம்மா மறைவுக்குப் பின்னர் கட்சியை உடைத்தது ஓ.பி.எஸ்-தான். தர்மயுத்தம் நடத்துமாறு அவரை பா.ஜ.க-தான் இயக்கியது என்றும் கூறப்பட்டது. ஆனால், இ.பி.எஸ்-ஸை பா.ஜ.க-வால் அப்படித் தன் இஷ்டப்படி இயக்க முடியாது.”

அடுத்த பொதுக்குழுவில் இ.பி.எஸ் தலைவராவார்! - பொள்ளாச்சி ஜெயராமன் பொளேர்

“கொடநாடு கொலை வழக்கு தன்னைச் சுற்றி வளைப்பதால்தான், தலைமைப் பதவியை அடைய இ.பி.எஸ் அவசரப்படுகிறார் என்று கூறப்படுகிறதே..?”

“இது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு. கொடநாடு விவகாரத்துக்கும், ஒற்றைத் தலைமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இ.பி.எஸ் கொடநாடு கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்தால், அரசு நடவடிக்கை எடுக்கட்டும். ஆதாரம் இருந்தால், அவர்கள் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்?”

‘‘ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்துப் பேச வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பொதுக்குழுவுக்கு வந்த ஓ.பி.எஸ் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறாரே?’’

‘‘பொதுக்குழுவில் அவரது விருப்பத்தை நிறைவேற்றவில்லையென்றால், அது அவமானமா... அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை தொண்டர்களின் விருப்பம்தான் முக்கியம். தனிநபர் விருப்பத்தையெல்லாம் நிறைவேற்ற முடியாது. அவரின் விருப்பத்துக்கெல்லாம் கட்சி செயல்படாது.’’

‘‘ஜூலை 11-ல் நடைபெறும் அடுத்த பொதுக்குழு எப்படி இருக்கும்?’’

‘‘தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் அ.தி.மு.க-வுக்கு இ.பி.எஸ்-ஸே தலைவராவார். அடுத்த பொதுக்குழுவில் அதுதான் நடக்கும்.’’

‘‘சி.வி.சண்முகம் மேடையில் மிகக் கோபமாக நடந்துகொண்டிருக்கிறாரே?’’

‘‘அவரின் இயல்பே அதுதான். அதுபோக, அ.தி.மு.க தொண்டர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிகளைத்தான் சி.வி.சண்முகம் வெளிப்படுத்தினார்.’’

‘‘நீதிமன்றத் தீர்ப்பு, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் முட்டுக்கட்டை போட்டிருக்கிறதா?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. ஒற்றைத் தலைமை விஷயத்தை வலுப்பெறச் செய்திருக்கிறது தீர்ப்பு.’’