அரசியல்
அலசல்
Published:Updated:

ஐந்தாண்டு ஆட்சியை தி.மு.க நிறைவு செய்யாது! - பொள்ளாச்சி ஜெயராமன் ஆரூடம்

பொள்ளாச்சி ஜெயராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
பொள்ளாச்சி ஜெயராமன்

அம்மாவை இழந்த நேரம் என்பதால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை.

‘இன்னும் 10 அமாவாசைகளுக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும்’, ‘எடப்பாடி ஆட்சி எப்போது வரும் என மக்கள் ஏங்குகிறார்கள்’ என்றெல்லாம் கருத்துகளை அள்ளி வீசுபவர் அ.தி.மு.க மூத்த தலைவரும், எம்.எல்.ஏ-வுமான பொள்ளாச்சி ஜெயராமன். ‘அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், தி.மு.க பக்கம் பாயப் போகிறார்கள்’ என்ற தகவல் உலாவரும் நேரத்தில் அவரைச் சந்தித்து நம் கேள்விகளை முன்வைத்தோம்...

“அ.தி.மு.க-வின் கோவை சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை இழுக்க தி.மு.க முயல்வதாகக் கூறப்படுகிறதே?”

“எள்ளின் மூக்களவும் அதற்கு வாய்ப்பில்லை. மூழ்கும் கப்பலில் யாரும் ஏற மாட்டார்கள். இனி அங்கிருந்தால் வேலைக்கு ஆகாது என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறியிருக்கிறார். இனி ஒவ்வொருவராக வெளியேறி எங்களிடம் வருவார்கள்.”

“சூலூர் எம்.எல்.ஏ கந்தசாமிகூட முதல்வரைப் பாராட்டிப் பேசியிருக்கிறாரே?”

“சிறு வார்த்தைகூட அவர் பாராட்டவில்லை. அந்த விஷயம் வெளியானவுடனேயே `என் உடம்பில் அ.தி.மு.க ரத்தம்தான் ஓடுகிறது’ என்று கூறியிருக்கிறார்.”

“ஆனால், `அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களே எடப்பாடியிடம் பேசுவதில்லை’ என ஸ்டாலின் சொல்கிறாரே?”

“மு.க.ஸ்டாலினுக்கு தன் எம்.எல்.ஏ-க்கள் யாரென்றே அடையாளம் தெரியாது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எல்லோரும் எடப்பாடியாருடன் அண்ணன் தம்பியாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

“நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என உட்கட்சிப் பஞ்சாயத்திலேயே அ.தி.மு.க-வின் எதிர்காலம் முடிந்துவிடுமா?”

“வாய்ப்பில்லை. எல்லாக் கட்சிகளிலும் ஒரு தலைவர் இறக்கும்போது, அடுத்தது யார் என்ற பிரச்னை எழத்தான் செய்யும். அப்படியான பிரச்னைதான் இது. இதனால் அ.தி.மு.க துளியும் பாதிக்கப்படாது. தி.மு.க-வின் ஆட்சியும், ஸ்டாலினின் நடிப்பும் யாருக்கும் பிடிக்கவில்லை. எங்களுக்கு இனி ஏறுமுகம்தான்.”

“ `நானும் எடப்பாடியும் பிறந்த சாதியிலிருந்துதான் அடுத்த முதல்வர்’ என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சொல்லியிருக்கிறாரே... அ.தி.மு.க சாதிக் கட்சியாகத் தன்னை முன்னிறுத்துகிறதா?

“குறிப்பிட்ட சாதியிலிருந்துதான் முதல்வராக முடியும் என அவர் சொல்லவில்லை. ‘அடுத்து எடப்பாடிதான் முதலமைச்சராக வருவார்’ என்றுதான் அவர் கூறினார். அவர்மீது சிலர் வதந்தி கிளப்பியதால்தான் அது குறித்துப் பேசினார். நானும் கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து ஏழு முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். அ.தி.மு.க-வில் எந்தச் சாதிப் பாகுபாடும் இல்லை. இது ஜனரஞ்சகமான மக்கள் இயக்கம்.”

“வேலுமணியை முடக்கவே தி.மு.க அரசு தொடர்ந்து அவர்மீது ரெய்டு நடத்துவதாகக் கூறுகிறீர்கள். வேலுமணி இல்லாவிட்டால் அ.தி.மு.க இல்லை என்கிறீர்களா?”

“யார் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க-வுக்குப் பிரச்னை இல்லை. வேலுமணி முன்னோடியாக இருந்து கழகப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார். நீங்கள் கேட்பது எனக்குப் புரிந்துவிட்டது. அதற்கு வாய்ப்பில்லை. எங்களுக்கு ஒரே தலைமை எடப்பாடியார்தான்.”

ஐந்தாண்டு ஆட்சியை தி.மு.க நிறைவு செய்யாது! - பொள்ளாச்சி ஜெயராமன் ஆரூடம்

“அமைச்சர் செந்தில் பாலாஜி கோவைக்கு வந்த பிறகு அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

“சொந்த ஊரிலேயே விலைபோகாத மாடு, வெளியூர் வந்து என்ன செய்யப்போகிறது. செந்தில் பாலாஜியால் எதையும் ஆட்டவும் முடியாது; அசைக்கவும் முடியாது.”

“வாரிசு அரசியல், குடும்ப அரசியல் குறித்து விமர்சிக்கிறீர்கள். வேலுமணி குடும்பம், உங்களுடைய மகன் தொடங்கி, கோவையிலுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் வாரிசுகளும் இப்போது அரசியல் என்ட்ரி கொடுத்திருக்கிறார்களே?”

“எங்கள் மகன்கள் பார்வையாளராகத்தான் வருகிறார்கள். அவர்கள் வேறு கட்சிக்கா போக முடியும்... அதற்காக எனக்குப் பிறகு இவர்கள்தான் என்பதெல்லாம் இல்லை. உதயநிதியுடன் இவர்களை ஒப்பிட முடியாது”

“இவர்கள் பிற்காலத்தில் எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள் என உறுதியாகச் சொல்ல முடியுமா?”

“வர மாட்டார்கள் என உறுதியாகச் சொல்ல முடியாது. உழைப்பின் அடிப்படையில் வாய்ப்பு கிடைத்தால் ஏற்கத்தானே வேண்டும்?”

“ `எல்லாத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது’ எனக் குற்றம்சாட்டுகிறீர்கள். பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும் எந்த ஊழலையும் ஆதாரத்துடன் நீங்கள் வெளிக்கொண்டு வரவில்லையே.?”

“வரும்... வரும். தி.மு.க மந்திரிகள் 13 பேர்மீது வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. காவல்துறை அவர்கள் கையில் இருக்கிறது. அரசு வழக்கறிஞர்கள் அவர்கள் கையில் இருக்கின்றனர். வாய்ப்பு வரும்போது, நாங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.”

“எந்த நம்பிக்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றிபெறுவோம் என்கிறீர்கள்?”

“அம்மாவை இழந்த நேரம் என்பதால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை. இப்போது மக்கள் எங்களைப் புரிந்துகொண்டுவிட்டார்கள். அவர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. தி.மு.க-மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது.”

“தமிழ்நாட்டில் 10 அமாவாசைகளுக்குள் ஆட்சி மாற்றம் நடக்கும் என நீங்கள் சொல்லி ஓராண்டாகிறது. இன்னும் எதுவும் நடக்கவில்லையே?”

“அந்தப் பத்து அமாவாசைகள் இனிமேல்கூடத் தொடங்கலாம். தி.மு.க இரண்டு முறைதான் ஆட்சியை முழுமையாக நிறைவுசெய்தது. பொதுவாக, அவர்கள் ஆட்சியை ஐந்து ஆண்டுக்காலம் முழுவதுமாக நிறைவு செய்ய மாட்டார்கள். இந்த முறையும் அதுதான் நடக்கும்.”

“ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அ.தி.மு.க முயல்கிறதா?”

“நாங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை. அது தானாகவே கவிழ்ந்துபோகும்.”