Published:Updated:

ஒரு தலைவருக்குரிய அனைத்து பண்புகளும் அண்ணன் ஓ.பி.எஸ்-ஸுக்கு இருக்கின்றன! - சொல்கிறார் செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜூ

கட்சி பெரிதென்று நினைத்திருந்தால் தி.மு.க-விடம் அவர் மென்மையான போக்கைக் கடைப்பிடித்திருக்கக் கூடாது.

ஒரு தலைவருக்குரிய அனைத்து பண்புகளும் அண்ணன் ஓ.பி.எஸ்-ஸுக்கு இருக்கின்றன! - சொல்கிறார் செல்லூர் ராஜூ

கட்சி பெரிதென்று நினைத்திருந்தால் தி.மு.க-விடம் அவர் மென்மையான போக்கைக் கடைப்பிடித்திருக்கக் கூடாது.

Published:Updated:
செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜூ

``அ.தி.மு.க-வில் சகோதர யுத்தம் சகஜமானது. ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்கள் பொதுச்செயலாளரிடத்தில் பேசி, கட்சிக்குள் மீண்டும் வரலாம். கதவு இன்னும் அடைக்கப்படவில்லை. தலைவர்கள் மனம் திருந்த வேண்டும், மனம் மாற வேண்டும்” என முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்களுள் ஒருவருமான செல்லூர் ராஜூ பேசியிருப்பதுதான் அ.தி.மு.க வட்டாரத்தில் ஹாட் டாபிக். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

`` `ஏட்டிக்குப் போட்டியாகச் செய்வதால் எந்தப் பயனும் இல்லை’ என ஓ.பி.எஸ்-ஸைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தீர்கள்... அவர் அப்படி என்ன செய்தார்?’’

“தலைவர் வாழ்ந்த இடம், அம்மா அரசியல் செய்த இடம், அ.தி.மு.க தொண்டர்கள் கோயிலாகக் கருதும் தலைமைக் கழகத்தைக் காலால் எத்துவது, கடப்பாரையால் உடைப்பது போன்ற வேலைகளை அ.தி.மு.க வேட்டி கட்டிய உண்மையான ஒரு தொண்டன் செய்வானா... பொதுக்குழுவுக்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வருவதற்கு விருப்பமில்லையென்றால், `போன பொதுக்குழுவுக்குப் போனேன், விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. அதனால், இந்தப் பொதுக்குழுவுக்குப் போகவில்லை. அங்கே எனக்கு மரியாதை கிடைக்காது’ என ஓர் அறிக்கை விட்டுவிட்டு அமைதியாக இருந்திருக்கலாம். அடாவடியாக நடந்துகொள்வது ஒரு தலைவருக்கு அழகா... அது கட்சிக்கு அவமானம் இல்லையா?’’

``எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக வருவதற்காக, திட்டமிட்டு ஓ.பி.எஸ் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்; கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே?’’

``அப்படியெல்லாம் இல்லை. இரட்டைத் தலைமையாக இருக்கும்போது எந்தவொரு முடிவெடுக்கவும் காலதாமதமானது. எங்கள் கட்சியின் மீதான இமேஜ் குறைந்தது. இருவரும் வேறு மாதிரி அறிக்கை கொடுக்கும்போது அது விமர்சனத்துக்குள்ளானது. எடப்பாடியார் சிறப்பாகச் செயல்படுகிறார். ஆனால், ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்துகொண்டு சட்டமன்றத்தில் கலைஞரைப் புகழ்ந்து பேசுகிறார், அம்மா இருந்திருந்தால் அப்படிப் பேசியிருப்பாரா?’’

``அது அரசியல் நாகரிகம்தானே... நீங்களும்தானே தி.மு.க-வைப் புகழ்ந்து பேசியிருக்கிறீர்கள்?’’

``நான் பாராட்டுவதால் எந்தப் பிரச்னையுமில்லை. கட்சியின் தலைவர் எப்படிப் பாராட்டலாம்... தனிப்பட்ட முறையில் அனைவரையும் மரியாதையாக நடத்துபவர்தான் அண்ணன் ஓ.பி.எஸ். ஒரு தலைவருக்குரிய அனைத்துப் பண்புகளும் அவருக்கு இருக்கின்றன. ஆனால், ஒரு கட்சியின் தலைவராக மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார். தி.மு.க அரசாங்கம் அ.தி.மு.க-வினர்மீது காழ்ப்புணர்வோடு ரெய்டு செய்துகொண்டிருக்கும் நேரத்தில், அவரின் மகன் இந்த அரசாங்கத்துக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தை பா.ஜ.க பயன்படுத்திக் கொண்டு முன்னேறுகிறது. அதற்கு இவர் வழிவிடக் கூடாதில்லையா?’’

``ஓ.பி.எஸ்-ஸைக் கட்சியிலிருந்து ஓரங்கட்டியதால், தென்மாவட்டத்தில் முக்குலத்தோர் சமூக மக்கள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’

``உடனடியாக ஓர் அதிர்வு இருக்கும் என்பது உண்மைதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒரே நேரத்தில், திருநாவுக்கரசர், பண்ருட்டி ராமச்சந்திரன், கண்ணப்பன், நாவலர் நெடுஞ்செழியன் எனப் பலர் இந்தக் கட்சியிலிருந்து வெளியேறினார்கள். ஆனால், காலப்போக்கில் நடந்தது என்ன... இங்கு கட்சிதான் பெரியதே தவிர தனிமனிதனல்ல.’’

``இதையேதான் ஓ.பி.எஸ் தரப்பிலும் சொல்கிறார்கள். கட்சி பெரிதென இருந்ததால்தான் தனக்கென ஓர் ஆதரவு வட்டத்தை ஓ.பி.எஸ் உருவாக்கிக்கொள்ளவில்லை என்கிறார்களே?’’

``கட்சி பெரிதென்று நினைத்திருந்தால் தி.மு.க-விடம் அவர் மென்மையான போக்கைக் கடைப்பிடித்திருக்கக் கூடாது. அம்மா வழியில், தலைவர் வழியில் நடப்பவராக இருந்திருந்தால், சட்டமன்றத்திலும் பொது இடங்களிலும் தி.மு.க-வின்மீது ஈட்டியாகப் பாய்ந்திருக்க வேண்டும். அவர் பாய்ந்தால்தானே அவருக்குப் பின்னால் நிற்பவர்களும் பாய்வார்கள்?’’

``தி.மு.க எதிர்ப்பு மட்டுமேதான் அ.தி.மு.க-வின் அடிப்படை அரசியல் மூலதனமா?’’

``தி.மு.க செய்யும் தவறுகளைத்தான் சுட்டிக்காட்டச் சொல்கிறோம். நாம் அதைச் செய்யத் தவறும்போது, இன்னொரு கட்சி சுட்டிக்காட்டுகிறது. நாங்கள் பின்தங்கிப் போகிறோம். இல்லையா?’’

``ஆனால், தி.மு.க அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ச்சியாக அறிக்கைகள் வெளியிட்டுத்தானே வருகிறார்?’’

``அவரின் அறிக்கையேகூட மென்மையான வகையில்தான் இருக்கும். தவிரவும், அறிக்கை விடுவதெல்லாம் மக்கள் மத்தியில் நிற்காது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும்.’’

`தென்மாவட்ட முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் தனிப்பட்ட முறையில் ஒ.பி.எஸ்-ஸால் பல்வேறு காலகட்டங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் அவருக்கு எதிராக நிற்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?’’

``அண்ணன் ஓ.பி.எஸ் யாரையும் பழிவாங்கியதும் இல்லை. அந்த மாதிரி குணமும் அவருக்குக் கிடையாது. 96 சதவிகித மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடியார் தலைமையேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த அடிப்படையில்தான் இதைப் பார்க்க வேண்டும்.’’

ஒரு தலைவருக்குரிய அனைத்து பண்புகளும் அண்ணன் ஓ.பி.எஸ்-ஸுக்கு இருக்கின்றன! -  சொல்கிறார் செல்லூர் ராஜூ

``பணம் கொடுத்துத்தான் இந்த ஆதரவு பெறப்பட்டிருக்கிறது என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறதே?’’

``எங்கள் கட்சியில் யாரும் பணத்துக்காகப் போக மாட்டார்கள். அந்த மாதிரிச் செய்தால், அது நீண்டநாள் நிலைக்காது. வலுவான தலைமை மட்டுமே எங்களின் குறிக்கோள்.’’

``ஒருவேளை, தேர்தல் ஆணையம் ஓ.பி.எஸ்-ஸிடம் கட்சியை ஒப்படைத்தால், அப்போது உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?’’

``யூகத்துக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால், அண்ணன் ஓ.பி.எஸ்-ஸுக்கு இப்போதும் காலம் கெட்டுப் போய்விடவில்லை. ஆர்.எம்.வீ-ஐவிட, நாவலரைவிட, காளிமுத்துவைக் காட்டிலுமா அம்மாவை விமர்சித்தவர்கள் இருக்கிறார்கள்... ஆனால், அம்மா அவர்களை மீண்டும் அழைத்து பதவி, மரியாதை கொடுக்கவில்லையா?’’

``ஓ.பி.எஸ்-ஸுக்கு நீங்கள் சொல்வது, சசிகலா, தினகரனுக்கும் பொருந்துமா?’’

``பொதுச்செயலாளருக்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறோம். அவர் பார்த்து யாரையும் சேர்க்கலாம், நீக்கலாம்.’’

``பொதுக்குழுவில் மேடையிலேயே ஆக்ரோஷமான விவாதங்கள், சண்டைகள் நடந்தன. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``நான் தலைவர் காலத்திலிருந்து பொதுக்குழுவுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். ஆனால், இது போன்ற சம்பவங்கள் எப்போதும் நடந்தது கிடையாது. மனதுக்குச் சங்கடமாகத்தான் இருந்தது.’’