
செல்லூர் கே.ராஜூ ‘ஷார்ப்’
“யாராலும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு, கடந்த எட்டு ஆண்டுகளாக எந்தவொரு லஞ்ச லாவண்யத்துக்கும், ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் மத்திய அரசைச் சிறப்பாக நிர்வகிக்கும் பிரமர் மோடிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது’ என்று குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அ.தி.மு.க தரப்பிலிருந்து முதல் கருத்தை உதிர்த்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. அவரிடம் நம் தரப்பிலிருந்தும் சில கேள்விகளை முன்வைத்தோம்!
“ ‘குஜராத் மாடல்’ தமிழ்நாட்டிலும் வெற்றிபெறும் என்று நினைக்கிறீர்களா?”
“மோடி அவர்கள் தமிழையும், தமிழ் மொழி கலாசாரத்தையும் உலகம் முழுவதும் கொண்டு செல்பவர். எத்தனையோ பிரதமர்கள் இந்தியாவை ஆண்டார்கள். இவரைப்போல யாரும் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தியதில்லை. அதனாலேயே குஜராத்தில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், தமிழக மக்கள் அவரை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது வரப்போகும் நாடளுமன்றத் தேர்தலில்தான் தெரியும். அதேநேரத்தில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைந்தால், மாபெரும் வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கும்.”

“ஆனால், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் அப்படித்தானே கூட்டணி அமைந்தது. அப்போது ஏன் வெற்றி கிடைக்கவில்லை?”
“அந்த நேரத்தில் தி.மு.க தலைமையில் அமைந்தது கட்டுக்கோப்பான கூட்டணி. எங்களுக்கு அப்படிச் சரியான கூட்டணி அமையவில்லை. சிறுபான்மையினர் வாக்குகள் சிதறின. இருந்தும், ஒருசில சதவிகித வாக்கு வித்தியாசத்திலேயே பின்தங்கினோம். எங்களுக்கு அன்று வாக்களிக்காதவர்கள் இன்று வருத்தப்படுகிறார்கள்.”
“புரியவில்லை... சரியான கூட்டணி அமையவில்லை என்றால்?”
“பெரிய கட்சிகள் கூட இருக்கின்றன என்று, சில உதிரிக் கட்சிகளை நாங்கள் விட்டுவிட்டோம். அவர்களைச் சேர்த்திருந்தால் சில சதவிகித வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருப்போம்”
“ `பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், முதல் ஆறு ஆண்டு சீரழிவு, கடைசி நான்கு ஆண்டு மிகப்பெரிய பேரிடர்’ என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?”
“அவர் எதுதான் சொல்ல மாட்டார். ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில், ஸ்டிக்கர் மட்டும்தான் ஒட்டிக்கொண்டிருக்கிறார். அதில்கூட கமிஷன் பார்த்து விடுகிறார்கள். இவர்களின் திராவிட மாடல் என்பதே முதல்வரின் குடும்பம் மற்றும் கட்சி நிர்வாகிகளின் நலனுக்காகத்தானே இருக்கிறது... அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த பல நல்ல திட்டங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். முதல்வர் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர் ஒரு பொம்மை மாதிரிதான் இருக்கிறார். நாட்டில் என்ன நடக்கிறது, மக்கள் என்ன நினைக்கிறார்கள்... எதுவும் தெரியாமல் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்.”
“வலுவான எதிர்க்கட்சியாக இருந்தும், நீங்களும் ‘உட்கட்சிப் பிரச்னையிலேயே காலத்தை வீணடிக்கிறீர்கள்’ என்று விமர்சனம் இருக்கிறதே?”
“எல்லா மக்கள் பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். போராட்டம் செய்து ஓர் அரசை மாற்ற முடியாது. இந்த ஆட்சியின் குறைகளை மக்களுக்குச் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லுவோம்.”
“ `எம்.ஜி.ஆர் என் பெரியப்பா’ என்று பேசி அ.தி.மு.க தொண்டர்களை ஈர்க்கிறாரே ஸ்டாலின்?”
“(பலமாகச் சிரித்தவர்...) முதல்வரின் அப்பா நல்ல கதை வசனம் எழுதுவார். இவரும் இப்போது நல்ல கதை சொல்கிறார். இன்று பாசம் பொங்கும் முதல்வர், என்றாவது தலைவரின் சமாதிக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தியிருக்கிறாரா... அவரின் பிறந்தநாளைத்தான் கொண்டாடியிருக்கிறாரா... இப்போது இருக்கும் பிரச்னையில் தூண்டில் போட்டால், அ.தி.மு.க-வில் ஆள் பிடிக்கலாம் என்று மனக்கணக்கு போடுகிறார். அதை எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.”
“ஆனால், சமீபத்தில் கோவை செல்வராஜ் தி.மு.க-வுக்குச் சென்றிருக்கிறாரே?”
“கோவை செல்வராஜ் எம்.ஜி.ஆர் தொண்டரே கிடையாதே!”
“ஜி20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் இ.பி.எஸ் கலந்துகொண்டதை எதிர்த்து ஓ.பி.எஸ் கடிதம் எழுதியிருக்கிறாரே?”
“அ.தி.மு.க-வின் உண்மை நிலவரம் அறிந்து, யார் வலுவாக இருக்கிறார்களோ அதைத் தெரிந்து மோடி அமைச்சரவையிலிருந்து எங்களை அழைத்திருக்கிறார்கள். இதை அப்படியே விட்டுவிட்டால் எடப்பாடியாரைத்தான் பா.ஜ.க ஆதரிக்கிறது, ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவு இல்லை என்பது உண்மையாகிவிடும் என்ற பயத்தால்கூட கடிதம் எழுதியிருக்கலாம். அரசியலில் பல கருத்துகள் இருக்கின்றன, பல முகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் நன்கு அறிந்தவர் ஓ.பி.எஸ்...” (சிரிக்கிறார்.)
“அ.தி.மு.க சின்னம் முடக்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றனவே?”
“அப்படி ஒரு கதையைத்தானே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். அந்த கற்பனைக் கதையில் சுவாரஸ்யம் இருக்கிறது. ஆனால், உண்மை இல்லை.”
“உங்கள் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர், ‘அ.தி.மு.க இல்லாமலேயே நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம்’ என்கிறரீதியில் கருத்து தெரிவித்திருக்கிறாரே?”
“எந்தக் கட்சியும் யாரை நம்பியும் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்த திராவிட பூமியில் எங்கள் கட்சியின் தலைமையில்தான் கூட்டணி அமையும். அந்தக் கூட்டணியைத்தான் மக்கள் ஆதரிப்பார்கள். என்றைக்கும் திராவிட இயக்கங்கள் ஓர் அகில இந்தியக் கட்சியின் கீழ் போய் நின்றதாக வரலாறு கிடையாது. எங்களை நம்பி வருபவர்களை நாங்கள் கைதூக்கி விடுவோம், உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுவோம், தோளில் தூக்கிச் சுமப்போம், பல்லக்கில் வைத்துக்கொண்டு ஆடுவோம்...அவர்கள் தலைமையின் கீழ் நாங்கள் சேர்வோம் என்று நினைப்பது நடக்காத விஷயம்.”