Published:Updated:

இரட்டை இலை முடங்கும்..! - எச்சரிக்கிறார் வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
வைத்திலிங்கம்

எடப்பாடிமீது எனக்கொன்றும் தனிப்பட்ட பகையோ, முன் விரோதமோ கிடையாது. கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே எனது நிலைப்பாடு.

இரட்டை இலை முடங்கும்..! - எச்சரிக்கிறார் வைத்திலிங்கம்

எடப்பாடிமீது எனக்கொன்றும் தனிப்பட்ட பகையோ, முன் விரோதமோ கிடையாது. கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே எனது நிலைப்பாடு.

Published:Updated:
வைத்திலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
வைத்திலிங்கம்

அ.தி.மு.க பொதுக்குழுவில் எழுந்த களேபரத்தால், கூட்டத்தில் இருந்து ஓ.பி.எஸ்-ஸுடன் ஆவேசமாக வெளியேறிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்திடம், கட்சி பிளவுபடக்கூடும் என்று பேசப்படும் சூழலில், சில கேள்விகளை முன்வைத்தோம்...

“பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்டு வெளியேறியபோது, உங்களது மனநிலை எப்படியிருந்தது?”

“எடப்பாடி அணியினருக்குக் கட்சி நடத்தக்கூடிய திறமையும், ஆற்றலும், அறிவும் இல்லை என்பதுதான் அந்தச் சமயம் எனது மனநிலையாக இருந்தது.”

“அனைத்துத் தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிராகரிக்கப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“நீதிமன்ற அவமதிப்பு செய்திருக்கிறார்கள். அனைத்துத் தீர்மானங்களையும் ரத்துசெய்ததால், இந்தப் பொதுக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களின் பதவிகளே ரத்தாகின்றன. பொதுக்குழுக் கூடியதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. அவசரபுத்தியில், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்துவிட்டனர். இந்த பொதுக்குழுவே செல்லாது.”

“ஓ.பி.எஸ்-ஸைக் கூட்டத்தைவிட்டு வெளியேறச் சொல்லி முழக்கங்கள் எழுப்பினார்களே?”

“முழக்கங்களைத் திட்டமிட்டுச் சில பேர் மட்டுமே எழுப்பினார்கள். அப்படிக் கோஷமிட்டவர்களெல்லாம் அ.தி.மு.க-வினரே கிடையாது, வெளியிலிருந்து எடப்பாடி தரப்பினரால் கொண்டுவரப்பட்ட ஆட்கள்.”

“அடுத்த பொதுக்குழுவில் இ.பி.எஸ் ஒற்றைத் தலைமை ஆவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா?”

“அடுத்த பொதுக்குழுவே கண்டிப்பாக நடக்காது. நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை.”

“நீங்கள் திடீரென இவ்வளவு தீவிரமான ஓ.பி.எஸ் ஆதரவு நிலை எடுத்ததற்கு என்ன காரணம்?”

“திடீர் ஆதரவெல்லாம் கிடையாது. அவர் முதலமைச்சராக இருந்ததிலிருந்தே அவருக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுவருகிறேன்.”

“வைத்திலிங்கம் உடனிருப்பதுதான் ஓ.பி.எஸ்-ஸுக்கான ஒரே பலமா?”

“அப்படியெல்லாம் இல்லை. அவரால்தான் எங்களுக்கெல்லாம் பலம் என்று வேண்டுமானால் சொல்லலாம். முன்பே ஓ.பி.எஸ்-ஸுக்கு மக்கள் சக்தியின் ஆதரவும், தொண்டர்களின் ஒத்துழைப்பும் இருக்கின்றன. தர்மயுத்தம் நடத்தியபோது, தமிழ்நாடு முழுவதும் அவருக்கான ஆதரவு பெருகியதை மறக்க முடியுமா?!”

“ஆனால், எடப்பாடி பக்கம் பலரும், ஓ.பி.எஸ் பக்கம் சிலரும் இருப்பதுபோலத் தெரிகிறதே..?”

“நல்ல கேள்வி... பழம் இருக்கும் மரத்தைத் தேடி ஓடும் பறவைகள் போன்ற நிலைதான் கட்சியில் இருக்கிறது. அவ்வளவுதான் சொல்ல முடியும்.”

“ `ஓ.பி.எஸ் தன்னை எங்குமே நிரூபிக்கவில்லை’ என்கிறாரே பொள்ளாச்சி ஜெயராமன்?”

“எடப்பாடி முதலமைச்சராக இருந்து என்ன நிரூபித்தார்... நான்காண்டுகள் ஆட்சியை நன்றாக நடத்தியிருந்தால், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், அடுத்தடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றிபெற்றிருக்க வேண்டுமே... அப்புறம் என்ன நல்லாட்சி... வர்தா புயல், ஜல்லிக்கட்டு, கிருஷ்ணா நதிநீரை சென்னைக்குக் கொண்டுவந்தது என மூன்றையும் மூன்றே மாதங்களில் சிறப்பாகக் கையாண்டவர் அண்ணன் ஓ.பி.எஸ். எடப்பாடி நான்காண்டுகள் ஆண்டதைவிட, மூன்று மாதங்களில் ஓ.பி.எஸ் செய்ததுதான் பெரிய விஷயம்.”

“உங்களை வேவு பார்க்க, உங்கள் மாவட்டத்திலேயே எடப்பாடி ஆட்களை வைத்திருக்கிறார், அந்தக் கோபத்தில்தான் பன்னீருக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்கள் என்கிறார்களே?”

“என்னை வேவு பார்க்க, யாரையும் வைத்திருந் ததாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. எடப்பாடிமீது எனக்கொன்றும் தனிப்பட்ட பகையோ, முன் விரோதமோ கிடையாது. கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே எனது நிலைப்பாடு. முன்பு சின்னம்மாவை நீக்கினார்கள், அடுத்து தினகரனை நீக்கினார்கள், இன்று ஓ.பி.எஸ்-ஸை நீக்கப்பார்க்கிறார்கள். எல்லோரையும் உதறித் தள்ளிவிட்டு சோலோவாக கட்சியைக் கைப்பற்ற எடப்பாடித் தரப்பு முயல்கிறது. அதைத்தான் எதிர்க்கிறேன்.”

இரட்டை இலை முடங்கும்..! - எச்சரிக்கிறார் வைத்திலிங்கம்

“எடப்பாடி ஒற்றைத் தலைவராகவோ, பொதுச்செயலாளராகவோ ஆனால், என்ன பிரச்னை வரும் என்று நினைக்கிறீர்கள்?”

“இப்போது ஒன்றும் ஒற்றைத் தலைமைக்கான அவசியம் எழவில்லையே... அவர் முதலமைச்சராக இருந்ததிலிருந்தே எல்லாவற்றிலும் தோல்வியைத்தானே கட்சி சந்தித்துவருகிறது... 1986-லேயே சொந்த மாவட்டத்தில், சொந்தக் கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நின்று தோற்றுப்போனவர்தானே எடப்பாடி?”

“இத்தனை ஆண்டுகள் இரட்டைத் தலைமை இருந்தபோதிலும், எடப்பாடிதானே கட்சி மற்றும் ஆட்சியின் முடிவுகளை எடுத்தார்?”

“எடப்பாடி முடிவெடுத்தார் சரி... கட்சி ஒற்றுமையாக, நன்றாக இருக்க வேண்டும் என்று அண்ணன் ஓ.பி.எஸ் விட்டுக்கொடுத்தாரே... அதுதான் தப்பாகப்போய்விட்டது. பெருந்தன்மைக்குக் கிடைத்த மரியாதை இதுதான்.”

“கட்சி விதிப்படி மீண்டும் பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டுவருவதற்கு முகாந்திரம் இருக்கிறதா இல்லையா?”

“முடியாது... முடியாது... முடியாது... அப்படிப் பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டு வந்தாலும், தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காது. இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின்னரோ அல்லது தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் யாரேனும் இறந்துபோனாலோதான் அங்கீகாரம் கிடைக்கும். பொதுக்குழுவில் மெஜாரிட்டிப்படியெல்லாம் பொதுச்செயலாளர் பதவியை ரீடெயின் செய்ய முடியாது. ஒருவேளை அது நடந்துவிட்டால் அது செல்லாது. பிரச்னை தேர்தல் கமிஷன் வரை செல்லும்... இரட்டை இலை மீண்டும் முடங்கும்... வழக்கு நடந்துகொண்டேயிருக்கும்... இப்படியெல்லாம் கட்சி பலவீனப்படக் கூடாது என்பதால்தான் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறோம்.”

“சசிகலா விவகாரம் என்னவானது... நீங்கள் இன்னமும் சசிகலாவுடன் கான்டாக்ட்டில் இருப்பதாகச் சொல்கிறார்களே?”

“தவறான தகவல். சிறையிலிருந்து திரும்பிய பின்னர், நான் ஒரு நாள்கூட சசிகலாவுடன் பேசி யதில்லை. ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா என்ற பிரச்னை போய்க்கொண்டி ருப்பதால், சசிகலா விவகாரம் குறித்து யாரும் சிந்திக்கவும் இல்லை.”

“அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் நிகழ்வுகளை டெல்லி எப்படிப் பார்க்கிறது... யாருக்கு பா.ஜ.க ஆதரவு இருக்கிறது?”

“டெல்லி எதிலுமே தலையிடவில்லை. யாருடைய ஆதரவு நிலைப்பாட்டையும் அவர்கள் எடுக்கவில்லை.”

“ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக நீங்கள் உள்ளிட்ட நால்வர்தான் இருக்கிறீர்கள். அவருடன் இருந்த பலரும் சென்றதுபோல நீங்களும் செல்ல மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?”

“ஏங்க.. என்னங்க இப்படிக் கேட்கிறீங்க.. அண்ணன் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக லட்சோப லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள். அதைவிட என்ன வேண்டும்... கோபால்சாமி உள்ளிட்ட முன்னாள் எம்.பி-க்கள்... ராமச்சந்திரன் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்... ரவீந்திரநாத், தர்மர் என இரண்டு இந்நாள் எம்.பி-க்கள்... வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்த பொதுக்குழுவுக்குள் எத்தனை பேர் இந்தப் பக்கம் வருகிறார்கள் என்று மட்டும் பாருங்கள்.”